Anbarivu Review: இரட்டை வேடத்தில் ஆதி.. கமெர்சியல் ஆடியன்ஸ்தான் குறி.. எப்படி இருக்கு அன்பறிவு?
Anbarivu Review in Tamil: அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது அன்பறிவு.
Aswin Raam
Hip-Hop Aadhi, Napoleon, Asha Sarath, Kashmira Pardeshi, Deena, Vidharth
Anbarivu Review: விடுமுறை நாட்களையும், கமெர்சியல் ஆடியன்ஸையும் குறிவைத்து வெளியாகும் கமெர்சியல் படம்தான் என்பது டிரெய்லரிலேயே தெரிந்தது. ஹிப்-ஹாப் ஆதி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். நெப்போலியன், வித்தார்த், ஆஷா சாரத், சாய் குமார் என அனுபவ நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களம். ஊர் பெரியவர் முனியாண்டியாக நெப்போலியன். அவரது மகள் லட்சுமியாக ஆஷா சாரத். முனியாண்டியிடம் வேலை செய்யும் பசுபதியாக வித்தார்த். பசுபதியின் பார்வையில் படம் தொடங்குகிறது. கதை சொல்ல ஆரம்பிக்கும் பசுபதிதான் படத்தின் வில்லன் என்பதை படம் தொடங்கிய சில நிமிடங்களில் அவர் வாயாலையே ஒப்புக்கொள்கிறார். அதனால், இதில் ஸ்பாய்லர் எதுவும் இல்லை! படத்தில் நிறைய இடங்களில் சஸ்பென்ஸும் இல்லை!
லட்சுமியின் காதல் கணவர் பிரகாஷமாக சாய் குமார் நடித்திருக்கிறார். இவர்களது காதல் திருமணத்தால் ஆரம்பமாகிறது இரு குடும்பத்திற்கும் இடையேயான கலவரம். குடும்ப கலவரம் ஊர் கலவரமாக, அதில் ஆதாயம் பெறுகிறார் பசுபதி. லட்சுமி - பிரகாஷம் தம்பதியருக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகள்தான் அன்பு - அறிவு. கிராமத்தில் அம்மாவிடம் வளரும் அன்பும், வெளிநாட்டில் அப்பாவிடம் வளரும் அறிவும் எப்படி சந்தித்து கொள்கிறார்கள், குடும்ப பிரச்சனை தீர்ந்ததா, மீண்டும் அனைவரும் ஒன்று கூடினார்களா என்பதே அன்பறிவு படத்தின் மீதி கதை.
ஆரம்பத்தில் சொல்லியது போலவே, பசுபதி வழி தொடங்கும் கதை எங்கெங்கோ நகர்கிறது. தெரிந்த குடும்ப பாசம் கதைதான் என்றாலும், கதை சொல்ல ஆரம்பித்த பசுபதி எங்கே, ஊர் கூடி தேர் இழுக்க சொன்ன கலெக்டர் எங்கே, பாஸ்போர்ட்டே இல்லாமல் கனடா வரை ஆள் கடத்தியது எப்படி என பல கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை என்றாலும் ‘லாஜிக்’ பார்க்காமல் படம் பார்க்கலாம் என மனசை தேத்திக் கொள்ள வேண்டியதுதான்.
தமிழ் சினிமா ரசிகர்களே அடுத்த காட்சி என்ன என திரைக்கதை எழுதும் அளவிற்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு குடும்ப கதைதான் என்பதால், சுவார்ஸ்யம் இல்லை. ஹிப்-ஹாப் ஆதியின் வழக்கமான ஸ்டைலில், ஆங்காங்கே அட்வைஸ், இளைஞர்களுக்கான பஞ்ச், நாடு, நாட்டு மக்கள், பாசம் போன்ற கமெர்சியல் மசாலா இதிலும் நிறைய உண்டு. அது, வொர்கவுட்டானதா என்றால், சில இடங்களில் ஆனது சில இடங்களில் சொதப்பி இருக்கிறது. ஆதியின் டபுள் ஆக்ஷன் பற்றி இன்னும் சொல்லவில்லையே?! அன்பும், அறிவும் ஒரே மாதிரிதான் தெரிகிறார்கள். மதுரை தமிழ், ஆங்கிலம் என வெறும் மொழி மாற்றத்தில் மாற்றத்தை காட்ட நினைத்திருக்கிறார்கள்.
ஓடிடி ரிலீஸ் என்பதால், படத்தின் நீளம் பொறுமையை சோதிக்கின்றது. இது படத்திற்கு மைனஸ். 2 மணி நேரம் 45 நீமிடங்கள் ஓடும் இத்திரைக்கதையை நிறைய இடங்களில் வெட்டி இருக்கலாம். படத்திற்கு ப்ளஸ் என குறிப்பிடும்படி எதுவும் இல்லை என்பது இன்னொரு மைனஸ்! அதனால், அன்பறிவு ஓடிடியில் ரிலீஸானது நல்லதே என கருதி, இந்த விடுமுறை நாட்களில் நேரம் இருந்தால் படத்தை பார்க்கலாம்! பார்ப்பதால் லாபமோ, நட்டமோ இல்லை என்பதா படத்தின் ஒன்லைன் ரிவ்யூ!