Methagu Movie Review: புதைக்க நினைத்த மண்ணில் முளைத்து எழுந்த விதை ‛மேதகு’
பிரபாகரன் உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது. ஆயுதம் ஏந்தவில்லை, ஏந்த வைக்கப்பட்டார்கள் தமிழர்கள். கல்வி, உரிமை என அனைத்திலும் ஓரம் கட்டப்பட்ட ஒரு இனத்தின் உரிமைக்காக ஈ(ழ)ர நிலத்திலிருந்து எழுந்த விருட்சம் தான் ‛மேதகு’.
கிட்டு
குட்டி மணி, ஈஸ்வர் பாஷா, மதுனிகா, விஜய், ஆனந்தன், ‛ராட்சசன்’ வினோத் சாகர்
வெடித்து சிதறும் வீடுகள், பதுங்கு குழிகள், விடாத ஓலம் என்று மட்டுமே நாம் பார்த்து பழகிய ஈழக் களத்தில், கலவரம், அடி, உதை என வேறு விதமான தாக்குதல் களம். இது ஈழ போராட்டத்தின் ஆரம்பம். தமிழனை நசுக்க நடந்த சதி, பொசுக்க நினைத்த கூட்டம், அறவழியில் ஆயுதவாதிகளை எதிர்கொண்ட தருணம், மவுனமே பாஷையாய் பழகிக் கொண்டிருந்த சமூகத்தில், எரிமலையாய் வெடித்து சிதறிய ஒரு இளைஞன் உதயமாகும் கதை. ஆம் இது புலிகள் தலைவர் பிரபாகரனின் கதை.
காவியங்களை மட்டுமே காட்டும் தெருக்கூத்தில், மாவீரன் பற்றிய கதை என மதுரையின் வீதியில் துவங்குகிறது கதை. தெருக்கூத்து கலைஞர்கள் சொல்லும் கதை தான்... படத்தின் திரைக்கதை. காந்திய வழியில் இலங்கை தமிழர் உரிமைக்காக தந்தை செல்வா முன்னெடுக்கும் போராட்டங்கள், தமிழர்கள் முன்னுரிமை பெற்றால் தங்கள் இனம் அழிந்து விடும் என பவுத்த பிட்சுகள் சிங்களவாத கொள்கையை கொடூரமாக அரங்கேற்ற துடிக்கும் தருணம். தங்களுக்கான பிரதமரை கொண்டு வந்து, ஸ்ரீலங்காவை சிங்கள தேசமாக்க துடிக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலில் குழந்தை பிரபாகரன் பிறக்கிறார். தமிழர் அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் தமிழை ஆட்சி மொழியாக்கும் உரிமையை பெறுகிறார்கள் தமிழர்கள். கலவரம் வெடிக்கிறது. சிங்களர்களால் தமிழர்கள் வெட்டி வீசப்படுகிறார்கள். எரித்து கொல்லப்படுகிறார்கள். கொடுமை தலைத்தூக்குகிறது. அரசாங்க வேலை பார்க்கும் பிரபாகரனின் தந்தை வீட்டிற்கு வரும் தமிழர் பிரதிநிதிகள் சிலர், அரசாங்க உதவி கேட்டு அவரிடம் பேசும் போது , தந்தை மடியில் அமைதியாய் அமர்ந்து அதை கேட்டுக் கொண்டிருக்கும் சிறுவன் பிரபாகரன், ‛நாம திருப்பி அடுச்சா என்ன....’ என, கேட்கும் முதல் கேள்வி, அனைவரையும் அதிர வைக்கிறது. சிங்கள பவுத்த பேரினவாதத்தின் கொடூரம் ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்க, மறுபுறம் சிறுவன் பிரபாகரனும் வளர்கிறான்.
பிரபாகரனின் இனப்பற்று அவரது தந்தைக்கும் கவலையளிக்கிறது. ஆனால், பிரபாகரனுக்கு தன் இனம் படும் பாடு கவலையளிக்கிறது. தமிழராய்ச்சி மாநாட்டில் 9 தமிழர்கள் படுகொலை செய்யப்பட , அதற்கு பதிலடி கொடுத்து ஜப்னா மேயர் துரையப்பாவை தீர்த்துக்கட்டி, பிரபாகரன் தன் கணக்கை துவங்க, கதை தொடர்கிறது என படம் முடிகிறது. தமிழ்நாடு-தமிழீழம் தொப்புள்கொடி உறவில் துவங்கும் முகப்புரையில் இருந்து, காரில் தப்பியோடும் இளைஞர்கள் காட்சியின் முடிவுரை வரை படத்தின் வசனங்கள் பட்டை தீட்டியவை. அறவழி போராட்டத்தை நகர்த்திக் கொண்டிருக்கும் தந்தை செல்வாவின் வீட்டில் மகாத்மா காந்தி படமும், கொதித்து எழுந்த இளைஞன் பிரபாகரனின் அலமாறியில் பகத்சிங் படமும் இருக்கும் குறியீடு தான் அவர்களின் பாதைக்கான அடையாளம். குடும்பத்தில் அனைவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள், ‛உன் அண்ணனை போல நீயும் கப்பல் வேலைக்கு செல்,’ என அப்பா கூறும் போது, ‛போர் கப்பல் என்றால் சொல்லுங்கள்... உடனே செல்கிறேன்,’ என அலட்டாமல் பதிலளிக்கும் இளைஞன் பிரபாகரனின் பதில், புல்லரிக்க வைக்கும். இப்படி புல்லரிக்க வைக்கும் காட்சிகள் படத்தில் ஏராளம். ‛திருப்பி அடித்தால் தான் கேட்பார்கள்,’ என முடிவு செய்து மூன்று பேர் கொண்ட இளைஞர் குழு, பஸ்ஸை கொளுத்த செல்லும் போது, கடைசி நேரத்தில் மற்ற இரு இளைஞர்கள் பயந்து ஓட, தனி ஆளாக பஸ்ஸை மறித்து கொளுத்தும் பிரபாகரனின் நெஞ்சுறுதி, போராட்ட குணத்தின் கண்ணாடி. சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து அடிக்க, கூடிய ஒரு இளைஞர் கூட்டம். அதில் அனைவருமே பிரபாகரனை தம்பி என்றே அழைக்கிறார்கள். ஆனால், அவர்களை வழி நடத்துவது தம்பி தான்.
‛அடி... அடி... அடி...’ என்பது மட்டுமே பிரபாகரனின் மூச்சாக இருந்தது. இயக்கத்திற்கு முதன் முதலில் கிடைக்கும் இரு கைத்துப்பாக்கிகள். அதை வைத்து தான் பல துப்பாக்கிகள் உருவாக்க வேண்டும். கழற்றி அதிலுள்ள மெக்கானிசத்தை அறிந்து கொள்ள செல்லும் பிரபாகரன், முதல் முயற்சியிலேயே துப்பாக்கியை அலசி ஆராய்வதும், கையில் துப்பாக்கியை எடுத்து குறி வைப்பதும், பின்னாளில் ஆயுத வளமை பெற்ற புலிகளின் ஆரம்ப காலத்திற்கு அது தான் அடித்தளம் என்பதும் உணர்ச்சியின் உச்சம். நான்கு இளைஞர்கள் கூடினோம், நமது விடுதலைக்கு பேசினோம் என்றில்லாமல், முறையான பயிற்சி, திட்டமிடல், தாக்குதல் என எல்லாவற்றிலும் பிரபாகரன் ‛பெர்பெக்ட்’. மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் என்கிற இடத்திற்கு வர பிரபாகரன் செய்த தியாகம், வீரம், வேட்கை தான் ‛மேதகு’ திரைப்படம். இது முதல் பாகம் தான். பிரபாகரன் இளைமையில் சந்தித்தவை, சிந்தித்தவை தான் இதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ‛பயோ பிக்’ என்று வரும் போது, சினிமாத்தனத்தை அதிகம் சேர்க்க முடியாது. அதே நேரத்தில் பிரபாகரன் போன்ற மாவீரனின் உண்மைக்கதையே ஹீரோயிசமாகத்தான் இருக்கும். அதை அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள். கிட்டு எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தை உலகத் தமிழர்களின் உதவியோடு தமிழீழத் திரைக்களம் தயாரித்துள்ளது. பிரவீன் இசையில் படத்திற்கு தேவையான பின்னணி கிடைத்திருக்கிறது. படத்தில் மூன்று பாடல்கள் இருந்தாலும் ‛எட்டுத்தொகை ஏட்டுக்குள்ள...’ பாடல் கேட்டு புல்லரிக்காத தமிழர் இருக்க முடியாது.
சிறுவனாகவும் சரி, இளைஞனாகவும் சரி பிரபாகரனுக்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்ததிலேயே படக்குழு பாதி வெற்றியை பெற்றுவிட்டது. குட்டி மணி, ஈஸ்வர் பாஷா, மதுனிகா என பெரிய அளவில் அறிமுகம் இல்லாத நடிகர் பட்டாளம். ஆனால் தெரிந்த கதை. கதையோடு அனைவரும் பயணிப்பதால், பார்க்கும் விறுவிறுப்பில் குறைவில்லை. மதுரை தெருக்கூத்தையும், இலங்கை கதை களத்தையும் ஒரே நேரத்தில் கையாள்வதில் எடிட்டரின் பணி சிறப்பு. ரியாஸின் ஒளிப்பதிவு, தமிழ்நாட்டிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் விசா இல்லாமல் நம்மை பயணிக்க வைக்கிறது. பிரபாகரன் உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது. ஆயுதம் ஏந்தவில்லை, ஏந்த வைக்கப்பட்டார்கள் தமிழர்கள். கல்வி, உரிமை என அனைத்திலும் ஓரம் கட்டப்பட்ட ஒரு இனத்தின் உரிமைக்காக ஈ(ழ)ர நிலத்திலிருந்து எழுந்த விருட்சம் தான் ‛மேதகு’. அடுத்த பாகம் என்ன சொல்லும் என்கிற எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் மேதகு, BS Value என்ற OTT தளத்தில் வெளியாகியுள்ளது. தெரிந்த கதை களத்தின் தெரியாத பக்கங்களை புரட்ட இந்த படத்தை கட்டாயம் பார்க்கலாம்!