800 Movie Review: முரளிதரனின் வாழ்க்கை வரலாறு! 800 படத்தில் கறைந்தது ரசிகர்களின் மனமா..? பணமா..? ஒரு டி20 விமர்சனம்!
800 Movie Review In Tamil: முத்தையா முரளிதரன் தன் வாழ்க்கையில் தான் யார் என்பதை நிரூபிக்கவும், தனது அடையாளம் என்ன என்பதை குறித்து விளக்கவே இத்தகைய திரைப்படம்.
M.S. Sripathy
Madhur Mittal, Mahima Nambiar
800 Movie Review: 800 திரைப்படத்தின் மூலம் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கையிலும், ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் கண்ட வேதனையை கடந்து பெற்ற சாதனையை படக்குழு எடுக்க முயற்சித்துள்ளது. இந்த முயற்சியில் படக்குழு வெற்றி பெற்றுள்ளதா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...
800 திரைப்படத்தில் தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டானது எப்படி உருவானது என்று இயக்குநர் வெங்கட்பிரவு குரலில் ஒலிக்க தொடங்கி, அதன் ஆதிக்கம் எப்படி பரவியது என்பதை படம் தொடங்குவதற்கு முன்பாகவே சொல்லப்பட்டு விட்டது. அதன் தொடர்ச்சியாக, முத்தையா முரளிதரனின் தாத்தா சின்னசாமி, பாட்டி அங்கம்மாள் இந்தியா அடிமைப்பட்டு கிடந்தப்போது, ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்ட பணிக்காக கொத்தடிமைகளாக சிலோனுக்கு (இன்றைய இலங்கை) அழைத்து வரப்படுக்கிறார்கள். அப்போது, இலங்கையும் அடிமைப்பட்டு கிடந்தது குறிப்பிடத்தக்கது.
சின்னசாமி மற்றும் அங்கம்மாளின் மூன்றாவது மகனான முத்தையாவிற்கு ஆங்கிலேயர்கள் விளையாடிய கிரிக்கெட்டை பார்த்து விளையாட வேண்டும் என்று ஆர்வம் வருகிறது. அப்போது முத்தையாவின் தாயார் அங்கம்மாள் படித்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்று வளர்க்க, தமிழருக்கு அடையாளமாக ஒரு பேக்கிரியை உருவாக்குகிறார். அத்தகைய காலத்தில்தான் (சரியாக சொல்ல வேண்டும் என்றால் 1977ம் ஆண்டு) தமிழர்கள் இலங்கையில் தமிழீழம் என்னும் நாடு கேட்டதாக கூறப்படுகிறது. அப்போதுதான் சிலோனில் இனக்கலவரம் ஏற்படுகிறது. எங்கள் நாடு என்று எங்களுடையது என்று சிங்களர்கள் கலவரத்தில் ஈடுபட்டு தமிழர்களை தாக்க தொடங்குகின்றனர். இதில், பயந்துபோன முத்தையாவின் குடும்பம் தங்களுடைய மகனான முரளிதரனை ஒரு கிறிஸ்துவ பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் 6 வயதிலேயே சேர்த்து விடுகின்றனர். அங்கிருந்துதான் முரளிதரன் என்னும் கிரிக்கெட் வீரர் உருவாக தொடங்குகிறான். தான் ஒரு தமிழரா..? சிங்களரா..? என்ற கேள்வியுடன்...
பள்ளி மற்றும் கல்லூரி அளவில் அவருக்கு கிடைத்த பாராட்டுகள், கொழும்பு பேருந்து நிலையத்தில் குண்டுவெடிப்பு, தனது முதல் தொடரின் ஏமாற்றம், இங்கிலாந்தில் தோல்வியுடன் அணிக்கு திரும்பியது, உலக கோப்பை வெற்றி, சக்கிங் சர்ச்சை, கபில் தேவுடன் சந்திப்பு, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர், ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவர், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், இறுதியாக, தனது இறுதிப் போட்டியில் 800 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல் என்று படம் முழுவதும் சொல்லப்பட்டது. இருப்பினும், ஒரு இடத்தில் கூட நம்மை அறியாது படத்தில் மூழ்கும் அளவிற்கு படக்குழு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனம்.
உணர்ச்சியில்லா முதல் பாதி:
படம் முழுவதும் ஏதோ ஆரம்பம் முதலே டக்கு டக்கென்று தாவுவது போல் உணர்வு. பின்னணி இசையும் பெரியளவில் ஈர்ப்பை கொடுக்கவில்லை. அழுத்தமாக முரளிதரன் சந்தித்த துன்பங்களை காட்டியிருக்கலாமோ என்ற ஏக்கமும் உண்டு. இலங்கை அணியில் முன்னாள் கேப்டன் அர்ஜீன ரணதுங்கா முரளிதரனின் கிரிக்கெட் பாதைக்கு வழிகாட்டுதல், சக்கிங் பிரச்சனைக்கு ஆதரவாக நின்றுதல் என்று முழுக்க முழுக்க காண்பித்தாலும், இலங்கை கிரிக்கெட் அணியில் முரளிதரன் ஒரு தமிழராக எப்படியான சூழ்நிலையை சந்தித்தார் என்று கூறப்படவில்லை. மற்ற சிங்கள இலங்கை வீரர்களின் மனநிலை என்ன என்பது குறித்தும் காட்டப்படவில்லை. உண்மை சொல்லபோனால், முதல் பாதி முழுவதும், படம் எந்த வித உணர்ச்சிகரமான உயர்வும் இல்லாமல் நகர்கிறது.
அடையாளத்தை தேடி - இரண்டாம் பாதி:
முத்தையா முரளிதரனை வாழ்நாள் முழுவதும் துரத்திய கேள்வி அவரின் அடையாளம் பற்றியதுதான். வாழ்க்கையில் அவர் ஒரு தமிழரா..? இலங்கை சேர்ந்தவரா..? கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீச்சாளரா..? சக்கரா..? என்ற கேள்வியுடன் இரண்டாம் பாதி தொடங்குகிறது. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனாக நடித்த நரேன் சந்திப்பு மட்டுமே சிறிது கவனத்தை கொடுத்தாலும், அதுவும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
முரளிதரனாக நடித்திருக்கும் மதுர் மிட்டலின் உடல் மொழி படத்தை தொடக்கம் முதலே ஆர்ச்சயத்தை கொடுத்தது. கதாபாத்திரத்திற்கு அப்படியே ஒத்துபோய் இருந்தார். என்ன! இவரின் திறமையை இயக்குநர் எம்.எஸ். ஸ்ரீபதி மற்றும் படக்குழு முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லையோ என்றும் தோன்றுகிறது.
ஒரு சில படத்தில் கதாநாயகர்கள் வெற்றி பெறும்போது நாமும் வெற்றி பெற்றதாகவே எண்ணம் ஏற்படும். அப்படியான ஒரு காட்சி கூட புல்லரிப்பை தரவில்லை என்பதே சோகம். கதை, நடிகர்கள், கதைக்களம் என படக்குழு தனது முழு உழைப்பை போட்டு கதையை நன்றாகவே கொண்டு சென்றது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒரு இடத்தில் கூட போர் அடிக்கவில்லை. ஆனால், அதே அளவுக்கு விறுவிறுப்பும், கதை நகர்வு இல்லை என்பதே நிதர்சனம்.
எம்.எஸ்.தோனி, 83 போன்ற கிரிக்கெட் தொடர்பாக படங்கள் நம்மை சில இடங்களில் உணர்ச்சிபெருக்கை ஏற்படுத்தும். அதுதான் இந்த 800 திரைப்படத்தில் ஜஸ்ட் மிஸ்..
ஒரு வரியில் விமர்சனம் சொல்லவேண்டும் என்றால் - கதையின் ஆழம் குறைவு