சுடுதண்ணீரா? வெந்நீரா?


சுடுதண்ணீருக்கும் வெந்நீருக்கும் என்ன வித்தியாசம்? உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுப்பது எவ்வகை நீர்? வாய்க்கு இதமான சூட்டில் நீரைச் சுடவைத்து கொடுப்பது சுடுநீர். இதனால் சூடு மட்டுமே ஏறுமே தவிர, எந்தப் பயனும் இல்லை. வெந்நீர் என்பது வெம்மையான அதாவது வெந்து 'தளபுள தளபுள'வெனக் கொதிவந்த நீர். இப்படிக் கொதித்த நீரை ஆறவைத்து வெதுவெதுப்பான சூட்டில் குழந்தைக்குக் கொடுப்பதே சிறந்தது. டிஸ்டில்டு தண்ணீர், ஆர்.ஓ தண்ணீர், போர்வெல் தண்ணீர் என எவ்வகை நீராக இருந்தாலும் கொதிக்க வைத்தே கொடுங்கள். 


தனியானதாக இருக்கட்டும்!


குழந்தையின் பாட்டில்களை சுத்தம்செய்ய தனி நார், பிரஷ் பயன்படுத்துங்கள். வீட்டிலுள்ள இதர பொருள்களைச் சுத்தம்செய்ய இந்த நாரைப் பயன்படுத்த வேண்டாம். குழந்தைக்குரியது தனியானதாக இருக்கட்டும். குழந்தையின் பாட்டில் டம்ளர் ஸ்பூன் போன்றவற்றைக் கழுவி காயவைத்தாலும் பயன்படுத்தும்முன் ஒருமுறை வெந்நீரால் கழுவுவது பாதுகாப்பானது. 


தேவைக்கு ஏற்ப!


செரலாக் போன்ற பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை ஊட்டுவதாக இருந்தால், ஒருமுறை கலக்கிய உணவை முழுவதுமாக குழந்தை உட்கொள்ளாதபோது மீதமுள்ள உணவை குளிர்பதனப்பெட்டியில் எடுத்துவைத்து சிறிது நேரம் கழித்து அதனையே சூடு செய்து ஊட்டுவது, அதிலேயே வெந்நீரோ பாலோ கலந்து ஊட்டுவது போன்றவற்றை முற்றிலுமாகத் தவிருங்கள். ஒருமுறை கலக்கிய உணவில் மீதம் எவ்வளவு இருந்தாலும் அதை அடுத்தமுறை குழந்தைக்குக் கொடுக்கக்கூடாது. தேவைக்கு ஏற்ப அளவாகக் கலந்து ஊட்டுங்கள். 


கஞ்சத்தனம் வேண்டாம்!


முதல் மூன்று மாதங்கள் குழந்தை மீது காட்டுகிற அக்கறை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாய் மாறும். முன்பெல்லாம் ஈரம் பட்டவுடன் டயாபரை மாற்றும் நாம் நாளடைவில்  அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்கிற மனநிலைக்கு மெல்ல நகர்வோம். பலரிடமும் இருக்கிற பழக்கம், வெளியே டயாபர் போட்டு தூக்கிச்சென்று வீடுவந்ததும் டயாபரைக் கழட்டி, டயாபரின் கனம் கூடாத நேரங்களில் அதாவது ஓரிரு முறை மட்டுமே குழந்தை ஈரப்படுத்தியிருப்பதை வெயிலில் உலரவைத்து அதை மீண்டும் பயன்படுத்துகிற பெற்றோரைப் பார்க்கையில் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருமுறை குழந்தையின் உடலில் பயன்படுத்திய டயாபரை அடுத்தமுறை நிச்சயமாகப் பயன்படுத்தக்கூடாது. துவைத்துப் பயன்படுத்துகிற துணிடயாபரை மட்டுமே பலமுறை பயன்படுத்தலாம். அதுவும் துவைத்து, காயவைத்து நன்கு உலர்ந்தபிறகு மட்டுமே என்பதை மறக்க வேண்டாம். ஒரு துணி டயாபருக்கு இரண்டு மூன்று உட்செருகிகளை(inserts) வாங்கிவைத்துக்கொண்டு உட்துணியை மட்டும் மாற்றுவதும் தவறு. எப்படியும் வெளித்துணியிலும் ஈரம் கசிந்திருக்கும். குழந்தையின் சருமத்தில் ஈரம் படிந்திருக்கும். 


க்ளிங் பேப்பர் வைத்திருக்கிறீர்களா?!


காய்ச்சல், சளி, வயிற்றுவலி, இருமல் என எதற்குரிய மருந்துகள் வாங்கினாலும் பயன்படுத்திய பிறகு அவற்றை க்ளிங் ஃபில்ம் வகை பேப்பர் வாங்கி காற்று புகாத வகையில் கீழே சிந்தாத வகையில் பத்திரப்படுத்தி வையுங்கள். வெளியே இரண்டு மூன்று நாள்கள் தங்குவதாக இருந்தால் முதலில் எடுத்துவைக்க வேண்டியவை மருந்து பாட்டில்கள் என்பதை மறக்கவேண்டாம். எந்த மருந்து எதற்கானது என்பதையும் எழுதி வையுங்கள். புது மருந்தைப் பயன்படுத்தும்போது ஒவ்வாமை ஏதும் ஏற்படுகிறதா என்பதைக் கவனியுங்கள். 


தொட்டில் துணி


வாரம் ஒருமுறையேனும் தொட்டில் கட்டியிருக்கிற துணியை மாற்றுங்கள். தொட்டில் துணி இல்லாத சமயங்களில் வெளிர் நிறங்களிலுள்ள புடவையையோ வெள்ளை வேட்டிகளையோ பயன்படுத்துங்கள். மழைக்காலங்களில் தொட்டில்துணியில் வென்பூஞ்சைகள் படிய வாய்ப்பிருக்கிறது. அதனால் ஒவ்வாமையும் தோல் தடிப்பும் ஏற்படலாம். எனவே துணியை அடிக்கடி மாற்றுங்கள். குழந்தையின் உறக்கம் மகிழ்வானதாக அமையட்டும்!


- பேசுவோம்.


முந்தைய தொடர்கள்:


”தாய்மை என்பதோர்” - 1 | பூ முகம் பார்க்கும் முதல் தருணம்.. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்..


தாய்மை என்பதோர் - 2 | குட்டி நிலா முகம் பார்த்துவிட்டீர்களா? தாயின் நலனில் இவையெல்லாம் முக்கியம்..


தாய்மை என்பதோர்” - 3: தொடர் மழை.... கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்ன?


தாய்மை என்பதோர் - 4 | தொப்புள் காயம்...குழந்தையின் ஈரம்... கவனம்!


தாய்மை என்பதோர் 5 : குழந்தைகளின் சருமமும், அழுகையும், டயாப்பரும்...!


தாய்மை என்பதோர் 6 : பால் கட்டுதல் வலி நிவாரணமும், குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகளும்..


தாய்மை என்பதோர் 7 : குழந்தையின் முகத்தை கவனியுங்கள், மென்மையாக நடந்துகொள்ளுங்கள்...!


தாய்மை என்பதோர் 8 : குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி...? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?