சீசேரியன் சிகிச்சையா?!
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததெனில் சிற்சில விஷயங்களில் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. தாயின் மடியில் இருக்கும்போது குழந்தை ஈரம் செய்துவிட்டால் தாமதிக்காமல் ஈர உடையை மாற்றுவிட வேண்டும். 'நம்ம குழந்தைதானே' என ஈரத்தோடு இருப்பது நல்லதல்ல. அடிவயிற்றில் தையல் இருப்பதால் வயிறு மடிந்து இருக்கும். தையல் விரைவாக ஆறவேண்டுமெனில் அப்பகுதியைத் ஈரமில்லாமல் உலர்வாக வைத்திருப்பது அவசியம். மடிந்திருக்கிற இடத்தில் ஈரம் தங்கியிருந்தாலும் வெளியே தெரிவதில்லை. அதனால் குளித்தபிறகு சுத்தமான துணியால் தையலிடப்பட்ட இடத்தின்மீது ஒத்தி எடுத்து மெதுவாகத் துடைத்துவிட வேண்டும். ஈரமோ வியர்வையோ தொடர்ந்து படியும்போது கிருமிகளால் தொற்று ஏற்படும். அப்படி ஏதும் பிசுபிசுப்பை உணர்ந்தால் மருத்துவரை அணுகிவிட வேண்டும்.
குழந்தையின் தொப்புள் காயம் ஆற...
மருத்துவமனையிலிருந்து வரும்போதே தொப்புள் காயத்துக்கான மருந்தையும் கையோடு எழுதி வாங்கிவிடுங்கள். தேவைப்படின் அம்மருந்தைப் பயன்படுத்துங்கள். தொப்புள் காயம் ஆறும்வரை வயிற்றில் பவுடர் எதுவும் பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். சுத்தமான தேங்காய் எண்ணெயை மட்டும் பயன்படுத்தச் சொல்கிறார்கள்.
எண்ணெய்ப் பலகாரங்கள் வேண்டாமே!
பண்டிகைக் காலமென்பதால் வீட்டில் பெரும்பாலும் இனிப்புகளும் பலகாரங்களும் செய்திருப்போம். வாய்க்கு ருசியானதாக இருந்தாலுமே முடிந்தவரை எண்ணெய்ப் பண்டங்களை பாலூட்டும் பெண்கள் தவிர்ப்பது குழந்தைக்கு நல்லது. குழந்தை நிறைய பாலெடுக்கிற சூழலில், இந்த எண்ணெய்ப் பலகாரங்கள் மேலும் அதனை அதிகப்படுத்தும். ஆவியில் அவித்த, நீரில் வேகவைத்த உணவுப் பொருள்களையே பெரும்பாலும் உண்ணுங்கள்
முதல் முப்பது நாள்களுக்கு...
என்னதான் மருத்துவர் எல்லாவகை உணவையும் சேர்க்கலாம் என்றாலுமே தேங்காயும் காரமும் குறைவான உணவையே பிரசவத்துக்குப் பிறகான முதல் முப்பது நாள்களுக்கு உண்ண வேண்டும். எண்ணெய், தேங்காய், புளிப்பு, காரம் போன்றவற்றைக் குறைத்து காய்கறி கூட்டு, பொறியல், அவியல் போன்ற உணவுவகைகளைச் சாப்பிடுவது செரிமானத்துக்கு எளிது. இரவு உணவுக்கும் உறக்கத்தும் இடையே மூன்று மணிநேர இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுங்கள். சீரகம் அதிகம் சேர்த்தும் விருப்பமிருப்பின் பிரசவ நடகாய லேகியம் போன்ற செரிமான மருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
நேப்கின் எரிச்சலுக்கு...
உதிரப்போக்கின் தன்மையைப் பொறுத்து நேப்கின்களைத் தெரிவு செய்யுங்கள். பத்துக்கும் மேற்பட்ட பிராண்ட் வாங்கிப்பார்த்து எல்லாமே எரிச்சலையும் வலியையும் ஏற்படுத்த 'விஸ்பெர் அல்ட்ரா சாஃப்ட் ஏர் ஃபிரஷ்' வகையை முயற்சி செய்யவே, எனக்கு நல்ல பலன்கொடுத்தது. தொடர்ந்து நேப்கின் பயன்படுத்துவதால் ஏற்படுகிற காயமும் அதனால் வருகிற எரிச்சலும் இல்லாமல் இருந்தது. அதுபோல் உங்களுக்குப் பொருந்துகிற பிராண்டைக் கண்டடைந்து பயன்படுத்துங்கள்.
எப்படி போர்த்தலாம்?!
குழந்தையைப் போர்த்தி வைக்க வேண்டும். அதே சமயம், உறக்கத்தில் குழந்தை தனது முகத்தில் போர்வையை இழுத்துப் போட்டுவிடக்கூடாது. இதற்கு 'wrap' செய்கிற முறையில் காணொலிகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் எது உங்களுக்கு எளிதானதோ அந்த முறையைப் பின்பற்றுங்கள். Wrap செய்யும்போது கவனிக்கவேண்டியது குழந்தையை இறுக்காத வண்ணம் சற்றே தளர்வாகவும் மூச்சுவிட வசதியாகவும் போர்த்த வேண்டும். சரியாகப் போர்த்தும்போது கதகதப்பினால் குழந்தை ஆழ்ந்து உறங்கும்.
- பேசுவோம்…