• மலரினும் மெல்லிய நகங்கள்!


எத்தனை பெரிய செயல்களையும் மிகச்சாதாரணமாகச் செய்கிற அம்மாக்கள்கூட செய்யச் சிரமப்படுகிற ஒரு செயல் 'மென்நகம் களைதல்'. நகவெட்டி பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்பதே பலரும் சொல்வது. உண்மையில் கவனமாகக் கையாளும்போது நகவெட்டியே மிகவும் பாதுகாப்பானது. நாம் கடித்துவிடும்போது நமது பற்களும் உமிழ்நீரும் குழந்தையின் சருமத்தில் படுகிறது. ஆனால் குழந்தைக்கென கிடைக்கிற பிரத்யேக நகவெட்டிகள் மிகவும் பாதுகாப்பானது. நாம் கிடைத்துவிடும்போது ஓரங்கள் தோலொடு சேர்ந்து வந்துவிட வாய்ப்பிருக்கிறது. சிலநேரங்களில் ஓரங்கள் கூர்மையாகவே இருந்துவிடுவதும் உண்டு. நகவெட்டியைப் பயன்படுத்தும்போது முழுமையாகவும் நேர்த்தியாகவும் ஒழுங்குபடுத்த முடியும். பெரிதாக்கும் கண்ணாடி (magnifier) பொருத்தப்பட்ட, சதையைப் பாதுகாக்க மூடி பொருத்தப்பட்ட, கூர் மழுங்கடிக்க என வெவ்வேறு வகைகளில் நகவெட்டிகள் கிடைக்கின்றன. உங்கள் பயன்பாட்டளவில் எளிமையானதை வாங்குங்கள். வெட்டும் துண்டுகள் கீழே சிந்தாமல் இருக்க, காலியான முகக் க்ரீம் அல்லது தலைமுடிக்கான க்ரீம் டப்பாக்கள் எதையாவது அடியில் வைத்துக்கொள்ளுங்கள். வெட்டப்பட்ட சிற்சில துண்டுகளை அந்த டப்பாக்களில் போடும்போது அதிலிருக்கிற க்ரீமில் நகக்கீற்றுகள் ஒட்டிக்கொள்ளும். குழந்தையின் உடையிலோ துணியிலோ தெறித்துவிழுமோ என்கிற கவலையில்லாமல் இருக்கலாம்.




  • கசிவும் கனமும்


குழந்தை பிறந்த முதல் ஓரிரு மாதங்களில் பால் கசிவதும் அதனால் உடைகள் ஈரமாவதும் மிக இயல்பானது. பலருக்கும் நடப்பது. இதில் வெட்கப்பட எதுவுமில்லை. ஆயினும் நம்மையும் மீறிய தாழ்வு மனப்பான்மை லேசாக எட்டிப்பார்க்கும். வெளியே போகும்போதோ, வீட்டுக்கு யாரும் குழந்தையைப் பார்க்க வந்திருக்கும்போதோ சட்டென ஈரமாகிவிடுமே என எண்ணமெல்லாமல் அதிலேயே இருக்கும். வீட்டிலிருக்கும்போது அலாரம் வைத்து குறிப்பிட்ட இடைவெளியில் குழந்தைக்குப் பாலூட்டினாலே சிலநேரங்களில் கசிவு சரியாகிவிடும். அதிக கசிவு இருப்போருக்கு, இதற்கென பிரத்யேக ஸ்பாஞ்ச் வகையிலான பேடுகள் (breast pad) கிடைக்கின்றன. அவற்றை நம் உடைகளில் பொருத்திக்கொண்டால் கசிவை உறிஞ்சிக்கொள்ளும். டிஸ்போ வகையிலும் துவைத்துப் பயன்படுத்துகிற வகையிலும் பேடுகள் கிடைக்கின்றன.


சில நேரங்களில் பால் கட்டிக்கொள்ளும். கைகளைக்கூட உயர்த்தமுடியாத அளவுக்கு வலி ரணமாக இருக்கும். வெதுவெதுப்பான வெந்நீரை பால் கட்டிக்கொண்ட இடத்தின் மீது பரவலாக ஊற்றினாலோ, அல்லது தேங்காய்ப்பூ துண்டை வெந்நீரில் நனைத்து ஒத்தடம் கொடுத்தாலோ வலி குறையும்.இது என்னளவில் நான் செய்து பலனளித்தது.


அடைவுப் படிநிலைகளில் அவசரம் வேண்டாம்!


ஆன்லைனில் சொல்லப்படுகிற இத்தனை வாரங்களில் தலைநின்று, இத்தனை வாரங்களில் தலைதூக்கி, இத்தனை வாரங்களில் குப்புறக் கவிழ்ந்து என வளர்ச்சிப் படிநிலைகளைக் கணக்கில்கொண்டு குழந்தைகளை அவசரப்படுத்த வேண்டாம். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. ஒரு குழந்தையின் அடைவுப் படிநிலை இன்னொரு குழந்தைக்கு நிச்சயம் பொருந்தாது. பொருந்தவேண்டிய அவசியமும் இல்லை. "அந்த வீட்டுப் பாப்பாவுக்கு தலைநின்னுடுச்சு உன் குழந்தைக்கு இன்னும் நிக்கலயா?" போன்ற கேள்விகளைக் கருத்தில்கொள்ள வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். உங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதும். மற்றவை யாவும் அதனதன் இயல்பில் அதற்குரிய காலமெடுத்து அதுவே நடக்கும். "தலைநிமிரப் பயிற்சி கொடுக்கிறேன்", " குப்புறக்கவிழ பயிற்சி கொடுக்கிறேன்" எனக் குழந்தைகள் மீது நம் அவசரத்தைத் திணிக்க வேண்டாம். குழந்தை அதன் இயல்பில் வளர நேரம் கொடுங்கள்.


- பேசுவோம்.