குழந்தை பெரும்பாலும் அழுவது குளிப்பதற்காகத்தான் இருக்கும். தொடக்கத்தில், மேலே ஈரம் பட்டாலே அழத் தொடங்குகிற குழந்தை நாளடைவில் முகத்திலோ தலையிலோ தண்ணீர்படும்போது மட்டுமே சிணுங்கும். கொஞ்சம் தலையையும் உடலையும் திருப்பத் தெரிந்தபிறகு, குழந்தையைக் குளிக்கவைப்பது சற்றே சிரமமானதுதான்.
தலையை அலசும்போது குழந்தையின் காதுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடக்கூடாது. அதேபோல் முகத்தைக் கழுவும்போது மூக்கினுள் குழந்தை தண்ணீரை உறிஞ்சாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். கை கால்களை ஆட்டி உதைத்து அசைக்கிற குழந்தையை ஓரிடத்தில் வைத்து குளிக்க வைப்பதில் சில எளிய நுணுக்கங்களைக் கையாளலாம். உதாரணத்துக்கு, நீரில் மிதக்கக்கூடிய ரப்பராலான வழவழப்பான பொம்மைகளை குழந்தையின் குளியல் டப்பிற்குள் போட்டுவைக்கத் தொடங்கலாம். குளியலறைக்குள் தூக்கிவரும்போதே இந்தப் பொம்மைகளைப் பார்க்கிற குழந்தைக்கு இயல்பாகவே உற்சாகமும் மகிழ்வும் கூடிப்போகும்.
குழந்தையின் கவனம் முழுதும் பொம்மையைக் கைகளால் பிடிப்பதிலும் வாய்க்குள் வைப்பதிலுமே இருக்கும்போது குளிக்கவைப்பது எளிதாகும். கூடுதலாக, ஏதாவது ஒரு பாடலை குளிக்கவைக்கும்போது பாடுவதையோ அல்லது ஒலிக்கவிடுவதையோ வழக்கமாக வைத்திருங்கள். இதுவும் குளிக்கிற மனநிலைக்கு குழந்தையைக் கொண்டுசெல்லும்.
குளிக்கவைத்தபின் குளியல் தொட்டிக்குள் குழந்தையின் இடுப்பளவுக்கு சற்றே குறைவான தண்ணீர் வைத்து அதனுள் குழந்தையை உட்காரவைத்து சிறிதுநேரம் விளையாட வைக்கலாம். நீரின் தன்மையைத் தொட்டு உணரத் தொடங்கும் குழந்தைக்கு கொஞ்சம் விளையாட்டாய்க் குளிக்க நேரம் கொடுங்கள். அடுத்து மருந்து கொடுக்கணும்; அடுத்து பால் கொடுக்கணும்; அடுத்து தூங்க வைக்கணும்; அடுத்து சமைக்கணும் போன்ற இந்த 'அடுத்து' அட்டவணைக்காக குழந்தையை அவசரப்படுத்தாமல் அந்தந்த நேரத்து செயல்களை குழந்தைய கவனிக்கவும் உணரவும் நேரம் கொடுப்போம்.
குழந்தை தூங்கும்போது....
வெளியிலிருந்து வருகிறவர்கள் குழந்தையைத் தூக்கும்முன் அவர்தம் கைகளை சோப்பினால் கழுவ வேண்டும். குறைந்தபட்சம் நீரினால் சுத்தம் செய்தபிறகே குழந்தையைத் தூக்க வேண்டும். சேனிடைசர் பயன்படுத்திவிட்டு குழந்தையைத் தூக்குவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சேனிடைசரிலுள்ள வேதிப்பொருள் குழந்தையின் மென்மையான சருமத்தில் தடிப்புகளையோ ஒவ்வாமையையோ ஏற்படுத்தக்கூடும். தவிர, பிளாஸ்டிக் உறிஞ்சு ஷீட்டுகளைப் பயன்படுத்தும்போது குழந்தையின் இடுப்புப் பகுதி மட்டும் ஷீட்டில் இருந்தால் போதும். முழு உடலும் ஷீட்டில் படும்படி படுக்க வைக்கக் கூடாது. நகங்களோடு அழுந்தப்பிடித்து குழந்தையைத் தூக்கினாலும் குழந்தையின் சருமத்தில் தடிப்புகள் ஏற்படலாம். கொஞ்சம் கவனமாக இருப்போம்.
- பிரசவத்துக்குப் பிறகான மனநலம்
குழந்தை வயிற்றிலிருந்தபோது எந்த அளவுக்கு நம்மை கவனித்துக்கொண்டோமோ அதற்கு முற்றிலும் மாறாக நம்மைக் கொஞ்சமும் கவனிக்காமல் விடுகிற காலம் பேறுகாலத்துக்குப் பிறகானவை. "அப்படியே படுத்தால் போதும் வேறெதும் வேண்டாம்" என்கிற மனநிலையில் இருப்போம். அதிலும் postpartum depression என்று சொல்லப்படுகிற பேறுகாலத்துக்குப் பிந்தைய உளச்சோர்வை உளவியல் ரீதியான மாற்றம் என எந்த மகப்பேறு மருத்துவமனைகளும் நமக்குச் சொல்லி அனுப்புவதே இல்லை. இந்த உடலியல் உளவியல் மாற்றங்களை எதிர்கொண்டு சமாளிப்பது சற்று கடினமாகவே இருக்கிறது.
இனம்புரியா வெறுப்பும் கோபமும் அழுகையும் ஆற்றாமையும் மாறி மாறி படுத்தியெடுத்தாலும் இவை பேறுகாலத்துக்குப் பின்பான pp depression மட்டுமே. நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நம் மனதுக்கு நாம் சொல்லிக்கொண்டே இருப்பது அவசியமாகிறது. சமாளிக்கவே முடியாத நேரங்களில் உளவியல் ஆலோசகரை அணுகுவதில் எந்தத் தவறும் இல்லை. போதுமான அளவு உறக்கமே உடலைப் பெருமளவு உற்சாகப்படுத்தும்.
இரவு பாலூட்ட விழிக்க நேர்ந்தால் பால் புகட்டிய பிறகு, குழந்தையை இணையிடம் கொடுத்துவிட்டு நீங்கள் உறங்குங்கள். Parenthood என்று வளர்ந்த நாடுகளில் செயல்படுத்தப்படுகிற வேலைப்பகிர்வு இந்தியக் குடும்பங்களில் மட்டும் Motherhood என்று சுருங்கிப்போயிருப்பது இந்த Motherhood செயல்பாடுகளை நாம் புனிதப்படுத்தியிருப்பதால்தான். தாயின் வேலையைத் தந்தையும் இயன்றவரை பகிர்ந்து செய்யலாம். சேயோடு கூடவே தாயும் நலமோடு இருக்கட்டும்.
- பேசுவோம்.
முந்தைய தொடர்கள்:
”தாய்மை என்பதோர்” - 1 | பூ முகம் பார்க்கும் முதல் தருணம்.. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்..
தாய்மை என்பதோர் - 2 | குட்டி நிலா முகம் பார்த்துவிட்டீர்களா? தாயின் நலனில் இவையெல்லாம் முக்கியம்..
தாய்மை என்பதோர்” - 3: தொடர் மழை.... கைக்குழந்தை வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
தாய்மை என்பதோர் - 4 | தொப்புள் காயம்...குழந்தையின் ஈரம்... கவனம்!
தாய்மை என்பதோர் 5 : குழந்தைகளின் சருமமும், அழுகையும், டயாப்பரும்...!
தாய்மை என்பதோர் 6 : பால் கட்டுதல் வலி நிவாரணமும், குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகளும்..
தாய்மை என்பதோர் 7 : குழந்தையின் முகத்தை கவனியுங்கள், மென்மையாக நடந்துகொள்ளுங்கள்...!