* குழந்தை குப்புறக் கவிழும்போது...


குழந்தை குப்புறக்கவிழும்போது மூக்குப்பகுதியில் அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்குப் பாலூட்டிய உடனேயே கீழே படுக்கவைக்காமல் கொஞ்சநேரம் மடியிலோ தோளிலோ வைத்து ஏப்பம் வந்தபிறகு படுக்க வையுங்கள். குப்புறக் கவிழத் தொடங்கிவிட்டதால் குடித்த பால் அப்படியே வெளிவர வாய்ப்பு இருக்கிறது. நீண்டநேரம் குப்புறக் கவிழ்ந்திருக்கும்போது சிலநேரங்களில் குழந்தைக்குச் சிரமமாக இருக்கும். குழந்தை முக்கினாலோ சிரமப்பட்டாலோ உடனே தூக்கிவிட வேண்டும். அல்லது புரட்டிப் படுக்கவைக்க வேண்டும். 


* கலகல விளையாட்டு


கால்களை நன்றாக உதைக்கத் தொடங்கியிருக்கிற குழந்தைக்கு உதைப்பதற்கு மென்மையான, உதைத்தால் ஒலி எழுப்பக்கூடிய விளையாட்டுப் பொருள்களை அறிமுகம் செய்யலாம். மகனுக்கு மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் மேற்சொன்னபடியான விளையாட்டுப் பொருளை வாங்கியிருந்தோம். அதை உதைத்து உதைத்து மகிழ்ந்திருந்தார் மகன். இது psychomotor எனப்படும் உடலியக்கத் திறன் மேம்பட உதவும். 


* பொம்மைகள் வாங்கும்போது...


பளிச் பளிச் நிறங்களில் பொம்மைகள் வாங்குவது சிறந்தது. பெண் குழந்தைக்கு 'பிங்க்', ஆண் குழந்தைக்கு 'ப்ளூ' என நாமாக ஒரு வரையறை வைத்து அவர்களின் உலகத்தைச் சுருக்காமல், எல்லா நிறங்களையும் அறிமுகப்படுத்தலாம். வண்ணம் உரியாதவகையில் ரசாயனம் குறைவாக கலக்கப்பட்ட மரப்பொருள்களே எங்களது பிரதான விருப்பம். குழந்தை வாயில் வைக்கும் பொருள் நெகிழியாக இருக்கக்கூடாது என முடிவுசெய்ததால், முடிந்தவரை நெகிழி பொம்மைகளைத் தவிர்த்தோம். மரக் கிளுகிளுப்பைக்கும் நெகிழிக் கிளுகிளுப்பைக்கும் இடையே ஒலி மாறுபாடு உள்ளது. மரத்தில் ஒலிக்கும்போது இதமாகவும் நெகிழியில் இரைச்சலாகவும் ஒலிக்கிறது கிளுகிளுப்பை. அதனால் குழந்தையை ஆற்றுப்படுத்த இதமான மென்னொலிகளை ஏற்படுத்துகிற பொருள்களையே வாங்குங்கள். 




* தொட்டுணரத் தொடங்கியாச்சா?!


கட்டைவிரலைத் தனியாக மடக்கி விரிக்கவும் மீதமுள்ள நான்கு விரல்களை மடக்கவும் முயன்று முயன்று கற்கிற குழந்தைகள் தற்போது கைகளை விரித்து பொருள்களைத் தொட்டு உணரப் பார்ப்பார்கள். இந்நேரத்தில் சொரசொரப்பான, வழுவழுப்பான, மென்மையான, முள்முள்ளான, ஜெல்லி மாதியான என வெவ்வேறு தன்மையுள்ள புலன்சார் பொருள்களை  (sensory toys) அறிமுகம் செய்யலாம். உங்கள் பர்சேஸ் இதுசார்ந்து இருக்கட்டும்.


* கவனித்தீர்களா?


முகம் பார்த்து சிரிக்கத் தொடங்கியிருக்கிற குழந்தையை முகத்துக்கு முகம் பார்த்துக் கொஞ்சுங்கள். உரையாடிக்கொண்டே இருங்கள். நம் முகக்குறிப்பை உணர்ந்து எதிர்வினையாற்றும் குழந்தைகளிடம் முடிந்தவரை மென்மையாக பேசப் பாருங்கள். ஏதோ அசௌகர்யத்தால் குழந்தை அழும்போது நீங்களும் கோபத்தில் குரலை உயர்த்தினால் அது குழந்தையை மேலும் அழவைக்கும். அல்லது உங்கள் குரலுக்கு பயந்து குழந்தை அசௌகர்யத்தை வெளிப்படுத்தாமல் அடக்கிக்கொள்ளும். இவை இரண்டுமே குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். அதனால் குழந்தையின் முகத்தை கவனியுங்கள். குழந்தையிடம் மென்மையாக நடந்துகொள்ளுங்கள்.


* பேட்டரி பொம்மைகளா?!


குழந்தைகளது கற்பனைத் திறனையும் பார்க்கும்திறனையும் பெரிதும் பாதிக்கக்கூடியவையாக சொல்லப்படுகின்றன பேட்டரி பொம்மைகள். அதன் மினுமினுப்பும் ஓயாத ஒலியும் குழந்தையின் சின்னச்சிறு கண்களைக் கூசச் செய்வதோடு கேட்கும்திறனையும் குறைக்கும் என்கிறார்கள் குழந்தைநல மருத்துவர்கள். பேட்டரி பொருத்தப்பட்ட பொருள்களைக் குழந்தையின் கைகளில் கொடுக்கும்போது அவற்றைத் திரும்பத்திரும்ப குழந்தை பார்க்குமேதவிர, அதிலிருந்து கற்றுக்கொள்ள குழந்தைக்கு எதுவுமிருக்காது. Open ended என்று சொல்லக்கூடிய குழந்தையின் கற்பனைக்குப் பரந்தவெளியைத் தரக்கூடிய பொருள்களை குழந்தைக்குக் கொடுங்கள். குழந்தையின் கற்பனைக்கு சிறகு முளைக்கட்டும்!