கனமழையும் விடுமுறை அறிவிப்புகளும் ரெட், ஆரஞ்ச் அலர்ட்டுகளும் என வரிசையாய் அச்சுறுத்தும் இந்த நேரத்தில் கைக்குழந்தை வைத்திருப்போரின் மனநிலையை சொல்லவே வேண்டியதில்லை. சளி பிடிக்காமல் பார்த்துக்கொள்ள நமக்குத் தெரிந்த அத்தனை முயற்சிகளையும் செய்துவிடுவோம். அப்படியும் நாம் கவனிக்கத் தவறும் சிலவற்றை இங்கே குறிப்பிடுவது சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. 


•உறிஞ்சும் ஷீட்டுகளில் உஷார்


படுக்கையின்மீது உறிஞ்சும் ஷீட்டுகள் போடுவதால் குழந்தை ஈரம் செய்கிறபோது அதன் இடுப்புத்துணியில் படுகிற ஈரத்தை கீழே இருக்கிற ஷீட்டுகள் உறிஞ்சிக்கொள்ளும். ஈரம் படப் பட துணிகளைத் தொடர்ந்து மாற்றுகிற நாம், ஷீட்டின் ஈரத்தை கவனிப்பதில்லை. மேற்புறம் வெல்வெட் துணியில் இருப்பதால் ஷீட்டின் ஈரம் பார்வைக்குத் தெரிவதில்லை. அதனால் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஷீட்டின் அடிப்பக்கத்தைப் புரட்டி அதிலிலுள்ள ஈரத்தின் அளவைத் தொட்டுப்பார்க்க வேண்டும்.


கைகளில் ஈரத்தை உணர்ந்தால் ஷீட்டை மாற்றுவது நல்லது. ஈரமான ஷீட்டில் ஒருநாள் முழுதும் தொடர்ந்து இருக்கிற குழந்தைக்கு சளி பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் ஷீட்டில் குழந்தையைக் கிடத்தும்போது குழந்தையின் இடுப்புக்குக் கீழ் மட்டும் ஷீட் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். தலையிலிருந்து கால்வரை விரிப்புபோல் ஷீட்டுகளைப் பயன்படுத்தக் கூடாது. அதன் சூடு குழந்தையின் உடலையும் சருமத்தையும் பாதிக்கும். 


•மின்விசிறிக்குக் கீழ் வேண்டாமே


குழந்தையைக் கிடத்தும் இடத்திற்கே நேர் மேலாக மின்விசிறி இல்லாதபடி கொஞ்சம் தள்ளிப் படுக்கையை அமைக்கலாம். ஒருவேளை நேர்மேலாகவோ தலையருகிலோ மின்விசிறியோ ஏ.சி.யோ இருப்பின் குழந்தையின் கொசுவலைமீது மெல்லிய துணியொன்றை விரித்து குழந்தையின் முகத்திற்கு நேராக காற்று வேகமாக வீசாதபடிக்கு போர்த்தி வைக்கலாம்.




வேகமாகக் காற்று வீசும்போது குழந்தையின் சின்னஞ்சிறு சுவாசப்பாதைக்கு சுவாசித்தலில் சிரமம் ஏற்படும். கவனம் இருக்கட்டும். 


•கிருமிநாசினிகள் பயன்படுத்துகிறீர்களா?


குழந்தையின் உடைகளைத் துவைக்கும்போது சட்டைகள், பால்துடைத்த துணிகள், ஈரம் செய்த துணிகள்,  போர்வைகள், இதர துணிகள் என தனித்தனியாகப் பிரித்துத் துவைக்கவேண்டும். எல்லாமே குழந்தைத் துணிதானே என்று ஒன்றாக ஊறவைக்கக்கூடாது.  மேற்குறிப்பிட்ட அதே வரிசையில் ஒரே நீரில்கூட ஒன்றன்பின் ஒன்றாக ஊறவைத்துத் துவைக்கலாம்.




ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5மி.லி வரை கிருமிநாசினி பயன்படுத்தினாலே போதுமானது. வெந்நீரைப் பயன்படுத்துவது கூடுதல் நலம்எதற்கும் இருக்கட்டும் கையுறை, காலுறை, டயாபர், பால் பவுடர், குளிராடை போன்றவை கைவசம் கூடுதலாக வீட்டில் இருக்கட்டும். கனமழை, கடைகளுக்குப் போகமுடியாத நேரத்திலும் ஓரளவு சமாளிக்க கூடுதலாக டயாபர் இருக்கட்டும். 


•காதுகளில் கவனம்


குழந்தையின் காதுப்பகுதிகளை காற்றுபுகாவண்ணம் போர்த்தி வைத்தாலே ஈரக்காற்றில் சளி பிடிக்காமல் இருக்கும். அதனால் காதோடு சேர்த்துப் போர்த்தும் போர்வைகள், ஸ்கார்ஃப், குல்லா போன்றவற்றைப் பயன்படுத்துங்கள். 




•மருந்துகள் தெரியுமா


மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளில் எவை எவற்றுக்கானவை என அழியா மை (permanent marker) கொண்டு எழுதிவைத்துவிடுவது நல்லது. மருந்துகள் அனைத்தும் பயன்படுத்த எளிதாக ஒரே இடத்தில் இருக்கட்டும். 


•பாலூட்டும் பெண்களுக்கு


நமக்கு சளியோ இருமலோ இல்லாமல் பார்த்துக்கொண்டாலே குழந்தையைப் பார்த்துக்கொள்வதைப் போன்றதே. அதேபோல் வீட்டில் யாருக்கும் சளி, காய்ச்சல் இருப்பின் அவர்கள் குழந்தையிடமிருந்து விலகியிருப்பது நல்லது. குழந்தையை முத்தமிடாமல் கொஞ்சினாலே சளித்தொற்றைத் தவிர்க்கலாம்.


மழையிலிருந்து கவனமாய் இருப்போம். பேசுவோம்…


”தாய்மை என்பதோர்” - 1 | பூ முகம் பார்க்கும் முதல் தருணம்.. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்..


தாய்மை என்பதோர் - 2 | குட்டி நிலா முகம் பார்த்துவிட்டீர்களா? தாயின் நலனில் இவையெல்லாம் முக்கியம்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண