- குளிராடை இருக்கிறதா?!
மழையும் குளிருமாய் இருக்கிற இந்த நாட்களில் குழந்தையைக் கதகதப்பாக வைத்திருப்பது அவசியம். அதில் பலரும் செய்கிற தவறு, ஒரே குளிராடையை (sweater) தொடர்ந்து அணியச் செய்வது. 'சட்டைக்கு மேலே தானே போடுகிறோம்' என்று மூன்று நான்கு நாட்களுக்குமேலாக தொடர்ந்து ஒரே குளிராடையைப் பயன்படுத்துகிறோம். குறைந்தது இரண்டு குளிராடையையாவது வாங்கி வைத்து, மாற்றிமாற்றி பயன்படுத்துவது நல்லது. பண்டிகை நாட்களில் கிடைக்கிற பளபளப்பான ஏனோ தானோ குளிராடைகளை கண்ணைப் பறிக்கும் வண்ணங்களைக் கண்டு வாங்கிவிட வேண்டாம். 'ஓவர்லாக்' போடப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து வாங்கவேண்டும். பின்னப்பட்ட குளிராடையெனில் உட்புறம் தையல் உறுத்தாதவண்ணம் இருக்கிறதா எனவும் வெல்வெட் துணியெனில் உட்புறம் பிசிறு இல்லாத ஆடைகளாகவும் பார்த்து வாங்குவது அவசியம். வெண்ணிற அல்லது மென்நிறங்களில் வாங்கினால் பூச்சி, எறும்பு ஏதும் ஊறினாலும் சட்டென கவனித்துவிடலாம்.
- தாய்ப்பாலூட்டத் தலையணை
பாலூட்டும் காலத்தில் நான் அதிகம் சார்ந்திருந்தது இந்தத் தலையணையைத்தான். அறுவைசிகிச்சையில் குழந்தை பிறக்க, முதுகுவலி ஒருபுறமும் தையல் போடப்பட்டிருந்த வலி மறுபுறமிருக்க, ஒருகையில் சலைன் ஏறிக்கொண்டிருக்க குழந்தையைக் கைகளில் தாங்கி வயிறோடு அணைக்க முடியுமா என்று அச்சமாக இருந்தது. பாலூட்டும் மனநிலையே இல்லை. அந்த நேரத்தில் எனக்குப் பெரிதும் உதவியது இந்தத் தலையணை தான். முதலில் வாகாக நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். இடுப்பின் இருபுறமும் தலையணையின் C வடிவப் பிடிமானம் லேசாக கவ்விக்கொண்டிருக்க, தலையணைமீது குழந்தையைக் கிடத்த, குழந்தையின் எடையை தலையணை தாங்கிக் கொண்டது. பாலூட்டல் இலகுவாக நடந்தது.
- நீங்கள் அமரும் முறை சரியானதா?
பாலூட்டும் அம்மாக்கள் படுத்துக்கொண்டு பாலூட்டக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். நமது sitting posture எனப்படும் அமரும் முறை பாலூட்டலில் முக்கிய பங்குவகிக்கிறது. வலியில்லாமல் முழுமையாகப் பாலூட்ட நாம் அமரும் முறையில் கவனம்செலுத்த வேண்டும். முடிந்தவரை நிறைய நபர்கள் சூழாமல் அமைதியான இடத்தில் பாலூட்டும்போது குழந்தையின் கவனம் சிதறாமல் இருக்கும். பாலூட்டும்போது செல்ஃபோனோ டி.வி.யோ பார்க்காமல் குழந்தையை வருடியபடியோ குழந்தையின் விரலைப் பிடித்தபடியோ பாலூட்டலாம். முழுக்கவனமும் குழந்தைமீது இருக்கும்போது பால் அதிகமாகக் குடித்து மூக்குவழியே வெளியேறுவது, புரையேறுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம். நர்சிங் உடைளைப் பயன்படுத்தும்போது குழந்தையின் முகம் நம் உடலோடு பொருந்தும்படி போதுமான அளவு திறந்திருக்க வேண்டும். குழந்தையின் வாய்ப்பகுதி நம் உடலோடு பொருந்தி அவர்களது தாடை நம் மார்புப் பகுதியோடு ஒட்டியபடி இருப்பதே சரியாக அமரும் முறை.
- தாயின் தூய்மையில் கவனம்!
குழந்தைக்கான முழு உணவும் தாய்ப்பால் மட்டுமே என்பதால் பாலூட்டுவதற்கு முன்பும் பின்பும் ஒவ்வொரு முறையும் வெதுவெதுப்பான ஈரத்துணியால் பாலூட்டும் பகுதியைத் துடைத்துவிட வேண்டும். பாலூட்டிய பிறகு குழந்தையின் உதடுகளையும் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். ஒரே துணியால் மீண்டும் மீண்டும் துடைப்பதைத் தவிர்த்துவிட்டு கையடக்கத் துணியைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு துணியைப் பயன்படுத்தி துடைக்கலாம். இதற்கென washcloths என்று மஸ்லின் துணியில் அளவாகத் தைத்த கையடக்கத் துணிகள் தனியே கிடைக்கின்றன. வேட்டிகளைப் பயன்படுத்துவதாக இருந்தால், பயன்படுத்திய வேட்டிகளைத் தவிர்த்துவிடுங்கள். புது வேட்டிகளையோ துண்டுகளையோ வாங்கி, கஞ்சிபோகுமளவுக்கு அலசிவைத்துக் கொள்ளுங்கள். பழைய துணிகளில் படிந்துள்ள வியர்வை குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
- பேசுவோம்