குழந்தை முகத்துக்கு பவுடரா?


குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது. அதனால் முகத்துக்கு லோஷன், க்ரீம், பவுடர் என எதையும் பயன்படுத்த வேண்டாம். குழந்தைக்கென கிடைக்கிற பிரபல பிரத்யேக லோஷனைப் பயன்படுத்திய ஓரிரு நாள்களிலேயே குழந்தையின் முகத்தில் ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட்டது. லோஷனை பயன்படுத்தாமல் ஓரிரு நாள்கள் தவிர்த்ததும் தானாகவே சரியாகிவிட்டது. அதிலிருந்து முகத்துக்கு மட்டும் பவுடர், லோஷன், க்ரீம் என எதுவும் பயன்படுத்திவதில்லை.




இதெல்லாம் இயல்புதான்!


பிறந்த முதல் மாதத்தில் குழந்தை எதற்கு அழுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவே சிரமமாகத்தான் இருந்தது. அதுவும் வீட்டுக்கு வந்த முதல்நாள் இரவு கொஞ்சமும் உறக்கமில்லை. இரவானதும் லேசாக அழத் தொடங்கிய குழந்தை நேரம் போகப்போக ஓயாமல் அழவும், எனக்கு ஒருபுறம் அழுகை பீறிட்டது.  "அதற்குள்ளாகவே மருத்துவமனையிலிருந்து அனுப்பிவிட்டார்களே இன்னும் ஓரிரு நாள்கள் நம்மை வைத்திருக்கக்கூடாதா" என்றெல்லாம் தோன்றியது. 'இதெல்லாம் இயல்பானது' என வீட்டிலிருப்போர் எத்தனை சொல்லியும் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. கோபமும் அழுகையும் மாறிமாறி வந்தது. இப்போது நினைத்தால் சிறுபிள்ளைத் தனமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது.


அழுகையை கவனியுங்கள்!


"ஓயாமல் அழுகிறது" எனப் பொதுவாய் பலரும் சொன்னாலும் கொஞ்சம் கவனித்துக் கேட்டால் குழந்தையின் அழுகையிலுள்ள வேறுபாடு புரியும். வெவ்வேறு உணர்வை வெளிப்படுத்த வெவ்வேறு குரலில் குழந்தை அழும். எறும்பு கடிக்கும்போது ஒருவிதமாக, பசிக்கு ஒருவிதமாக, பாசாங்குக்கு ஒரு விதமாக, உறக்கத்துக்கு ஒரு விதமாக, ஈரத்துக்கு ஒரு விதமாக என வெவ்வேறு வகையில் அழுகை இருக்கும். கூர்ந்து கவனித்தால் குழந்தை எதற்கு அழுகிறது என்பது புரிந்துவிடும்.


 




டாய்லெட் பிரச்சனை


முதல் ஆறுமாதங்களுக்கு திட உணவுகள் ஏதும் இல்லாததால் நாள்தோறும் குழந்தை டாய்லெட் போகவேண்டுமென எதிர்பார்க்க வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஏழு நாள்கள் வரையிலும் டாய்லெட் போகாமல் இருந்தாலும் குழந்தை சுறுசுறுப்பாகவும் இயல்பாகவும் இருக்கும்வரை இதுவொரு பிரச்சனை இல்லை என்கிறார்கள். குழந்தையின் நலனில் சந்தேகமிருந்தால் மருத்துவரை அணுகுவதே நலமே தவிர, கைவைத்தியமாக குழந்தைக்குக் குடிக்க ஏதும் மருந்துகளை நாமாகக் கொடுப்பதைத் தவிர்க்கலாம். அதேபோல் துணிதுவைக்கிற சோப்பினை முருங்கைக்குச்சியில் தடவி குழந்தையின் பின்புறம் செலுத்துகிற பழக்கமும் பலரிடமும் உள்ளது. மெல்லிய சருமமும் உடலும்கொண்ட குழந்தையின்மீது துணிசோப்பு படும்போது, குழந்தையின் சருமம் வெந்துபோக வாய்ப்பிருக்கிறது. கவனமாகக் கையாளுங்கள்.


ஒன் யூஸ் டயாபரில் எந்த வகை?!


குழந்தை மிகவும் சுறுசுறுப்பாகவும் துருதுருவெனவும் இருக்கிறதெனில், பேண்ட் ஸ்டைல் டயாபரே சரியான தேர்வு. குழந்தை உதைக்கிற உதைக்கு தாக்குபிடிக்க வேண்டுமெனில் பேண்ட் முறையே சிறந்தது. அமைதியான குழந்தைக்கு ஒட்டுகிற பெல்ட் வகையில் வாங்கலாம். டயாபர் பயன்படுத்தி அவிழ்க்கிறபோது அதன் அச்சு குழந்தைமீது படியாமல் இருப்பதே சரியான அளவென்று அறிக. எல்லா நேரங்களிலும் வைப்ஸ் பயன்படுத்தாமல் முடிந்தவரை வெந்நீரில் துணியை நனைத்துத் துடைத்துவிட்டு, இரவிலும் பயணங்களிலும் மட்டும் வைப்ஸ் பயன்படுத்துங்கள். ஒருமுறை வைப்ஸ் பயன்படுத்தினால் அடுத்தமுறை துணியைப் பயன்படுத்தித் துடைத்தெடுங்கள். பொது இடங்களுக்குச் செல்லும்போது பயன்படுத்திய டயாபர்களை அப்படியே கழட்டி எறியாமல் கையோடு ஒரு காகிதத்திலேனும் சுற்றிப் போடுங்கள். மண்ணும் மாடுகளும் காக்கைக் குருவி நாய்களோடு நம்மைப்போன்ற சகமனிதர்களான தூய்மைப்பணியாளர்களையும் மனதில் வையுங்கள்.


-பேசுவோம்.