Summer Health Tips : கொதிக்கும் வெயில் மண்டையை பிளக்கிறதா? தப்பிக்க என்ன செய்ய வேண்டும்...! இதோ டிப்ஸ்...!
கோடைகாலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.
சுட்டெரிக்கும் வெயில்
கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் அன்றாட வாழ்வில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை தாண்டியுள்ளது. சென்னை, கடலூர்,ஈரோடு, கரூர், பரமத்தி, மதுரை உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை சதம் அடித்தது. இந்த கடும் வெயிலில் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள் காணலாம்.
தண்ணீர்
கோடைக்காலத்தில் நீரைவிட இன்றியமையாதது வேறு எதுவும் இல்லை. அதிகப்படியான உஷ்ணம் காரணமாக உடலில் நீர் வற்றிப் போகும். இதனால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர் வற்றிபோகையில் நாம் பல சிக்கல்களை எதிர்கொள்கிறோம். அதனால் வெளியே செல்லும்போது கூடவே தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்வது மிகவும் பயனுள்ளது. நீர் உடலின் தட்பவெப்பத்தைக் குறைப்பது மட்டுமில்லாமல் உங்கள் சருமத்தை பொலிவாகவும் வைக்கும் அதேபோல் உனவு செரிமானத்திற்கும் மிகவும் உதவக்கூடியது ஒன்று.
எந்த உணவு எடுத்துக் கொள்ளலாம்?
வெயில் காலத்தை உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதன்படி, பழ வகைகள், தானிய வகைகள் போன்றவற்றை உட்கொண்டால் உடலை சீராக வைக்க உதவும். அதே நேரத்தில் சோடா, ஊறுகாய், பொரித்த உணவு வகைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை தினமும் சாப்பிடுவது உடலுக்கு நன்மைகளை தரும்.
தூக்கம்
வெயில் காலங்களில் வீட்டில் அனல் இருப்பதால் பொதுவாக நமது தூக்கம் வராமல் இருக்கும். ஆனால் அப்படி தூங்காமல் இருப்பது பல பிரச்சனைகளை வரவழைக்கும். அதன்படி, மன உளைச்சல், கண் எரிச்சல், சோர்வு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதானல் குறைந்தது 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். அதேபோன்று தூங்க செல்வதற்கு முன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். மேலும், செல்போன் பயன்படுத்துதை தவிர்க்க வேண்டும். அதில் உள்ள கதிர்வீச்சுகள் அதிகளவில் இருப்பதால் இன்னும் கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
ஆடைகள்
வெயில் காலத்தில் அதிக எடைக்கொண்ட ஆடைகளையோ, இறுக்கமான ஆடைகளையோ தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக இலகுரக ஆடைகளை அணிவது நல்லது. மேலும், அடர் நிறங்களை விட, வெளிர் நிற ஆடைகள் தான் கோடைக்கு ஏற்றவை. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் உடலில் நீர்சத்து குறைந்துவிடும். எனவே கோடையில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
இதுமட்டுமின்றி, பாலிஸ்டர் போன்ற உடைகள் அணிவதால் சிலருக்கு தோல் அரிப்புகள் வரும். ஆனால் காட்டன் அப்படி அல்ல. பருத்தினால் தோல் அரிப்புகளோ, தோல் வியாதிகளோ வராது. அதனால் இந்த அனைத்து விதமான உடல் வாகுகளுக்கு வெயில் காலத்தில் பருத்தி ஏற்றதாக இருக்கும்.