Lifestyle: ’குறைஞ்சது 40 நிமிஷம் செஞ்சா தான் ஒர்க் அவுட்...’ - காரணம் சொல்லும் ஊட்டச்சத்து நிபுணர்!
”ஒர்க் அவுட்டின் முதல் 20 நிமிடங்கள் வார்ம் அப் தான். அதற்கு அடுத்த 20 நிமிடங்கள் தான் உங்கள் உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்கும்” - ஊட்டச்சத்து நிபுணர்
இன்றைய நவீன உலகில், ஒரு நபர் தன் தினசரி வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சி குறித்து மருத்துவர்கள், ஜிம் பயிற்சியாளர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் எனப் பலரும் நாள்தோறும் எடுத்துரைத்து வருகின்றனர்.
தினசரி 40 நிமிடங்கள் அத்தியாவசியம்!
அந்த வகையில், ஒரு மனிதன் தன் தினசரி நாளில் குறைந்தது 40 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதோ அல்லது உடலுக்கு வேலை தருவதோ அவசியமானது மற்றும் ஆரோக்கியமானது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
முன்னதாக மாமி அகர்வால் எனும் ஊட்டச்சத்து நிபுணர், இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ”ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது ஏன் அவசியம் என்பதற்கு ஒரே காரணம் கூறுகிறேன்” எனக் கூறி இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
முதல் 20 நிமிஷம் ஒர்க் அவுட்டே இல்லை...
”பொதுவாக நீங்கள் மேற்கொள்ளும் ஒர்க் அவுட்டின் முதல் 20 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு நம்மை தயார்படுத்திக்கொள்ளுதல் எனும் வார்ம் அப் தான். அதற்கு அடுத்த 20 நிமிடங்கள் தான் உங்கள் உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்கும்” என இந்த வீடியோவில் அவர் விளக்கியுள்ளார்.
மேலும், ”உடல் கொழுப்பை கட்டாயம் எரிக்க வேண்டும் என விரும்புபவர்கள், நிச்சயம் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்” எனப் பரித்துரைக்கும் மாமி அகர்வால், உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது உடல் எடையைக் குறைப்பதில் மட்டும் பங்காற்றாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் பங்காற்றும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
உடற்பயிற்சி மட்டுமல்ல மனதுக்கும் நன்மை!
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகளின்படி, தினசரி உடற்பயிற்சி செய்வது கவலை, மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட 24 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி உடற்பயிற்சிக்குப் பின் இவர்களது அன்றாட வாழ்வில் மனச்சோர்வு கணிசமாகக் குறைந்துள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.