Summer Health Tips: கோடை காலத்தில் இதை மட்டும் செஞ்சா போதும் - டாக்டர் வழங்கும் டிப்ஸ் உங்களுக்காக
பொதுமக்கள் முடிந்த அளவிற்கு உச்சி வெயிலில் செல்ல வேண்டாம், அப்படி சென்றால் சிறுநீரக கோளாறு, சிறுநீரக பிரச்சனை, சிறுநீர் கடுப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் - மருத்துவர்
கோடைக் காலம்
கோடைக் காலம் அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வெயில் நம்மை வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்து கொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என விளக்கங்களை வழங்கியுள்ளார் பொது மருத்துவர் டாக்டர் பிரியா பத்மாசினி.
ஏன் பழச்சாறு குடிக்க வேண்டும் ?
முதலில் கோடை காலத்தில் முடிந்த அளவுக்கு அதிகமான தண்ணீரை குடிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடித்தாலே நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதன் பிறகு வெப்பத்தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளை ஈடுசெய்வதற்காக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர், தர்பூசணி, எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாற்றை அருந்த வேண்டும்.
முடிந்த அளவிற்கு நீர் சத்துக்கள், நார்ச் சத்துக்கள் நிறைந்த புடலங்காய் பீர்க்கங்காய் வெள்ளரிக்காய் வெண்டைக்காய், தர்பூசணி பழங்கள் சாத்துக்குடி, திராட்சை போன்ற காய்கறிகள் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். மாம்பழம் பப்பாளி பழம் தேவைக்கேற்ப சாப்பிட வேண்டும் அதிக அளவில் எடுத்துகொள்ள கூடாது.
உச்சி வெயிலில் செல்ல வேண்டாம்
பொதுமக்கள் முடிந்த அளவிற்கு உச்சி வெயிலில் செல்ல வேண்டாம். அப்படி சென்றால் சிறுநீரக கோளாறு, சிறுநீரக பிரச்சனை, சிறுநீர் கடுப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு முடிந்த அளவிற்கு அதிக தண்ணீரை குடிக்க வேண்டும். வீட்டிலேயே உப்பு கரைசல் (ORS) செய்து குடிக்கலாம். தங்கள் உடல் நலம் கருதி தேவைக்கேற்ப தலையில் எண்ணெய் வைத்து குளிக்கலாம். குறிப்பாக வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல்நிலைக்கு ஏற்றவாறு உணவுகளை உட்கொள்ள வேண்டும்
கோடைகாலத்தில் முடிந்த அளவிற்கு பருத்தி ஆடைகளே அணிவது சிறந்த வழிமுறையாகும். அவற்றில்கூட இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். மேலும் வெயில் காலத்தில் வெளியில் முகத்தில் சன்ஸ்கிரீன் போடுவது, குடையை பயன்படுத்துவது சிறந்த பழக்கமாகும், மேலும் உடல்நிலைக்கு ஏற்றவாறு உணவுகளை உட்கொள்ள வேண்டும் என பல அறிவுரைகளை டாக்டர் பத்மாசினி பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.