Health Tips: சம்மர் சீசன் தொடங்கிடுச்சு... குளுகுளுனு சூப் குடிக்கலாமா? எப்படி செய்வது?
என்னதான் வெயில் அடித்தாலும் கோடையும் ஒரு ரசிக்கக் கூடிய காலம் தான். கோடையில் குடிக்க ஜூஸ் தவிர விதவிதமான சூப்களும் உள்ளன.
கோடை கொளுத்தத் தொடங்கிவிட்டது. என்னதான் வெயில் அடித்தாலும் கோடையும் ஒரு ரசிக்கக் கூடிய காலம் தான். கோடையில் குடிக்க ஜூஸ் தவிர விதவிதமான சூப்களும் உள்ளன. என்னது சூப் சூடாக குடிப்பதாச்சே என்று கேட்பவர்களுக்கு இதோ அட்டகாச ரெசிபிக்கள்.
குக்கும்பர் அண்ட் சிலாண்ட்ரோ (Cucumber and cilantro)
கோடை வெயிலின் கொடுமையைத் தணித்து புத்துணர்ச்சி தரக்கூடிய பானம் இது. இதைச் செய்வதும் எளிது. இரண்டு வெள்ளரிக் காய்களை எடுத்து தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அத்துடன் அரை கப் மல்லி இலை சேர்த்து மிக்ஸரில் ப்ளெண்ட் செய்து கொள்ளவும். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்க்கவும். கால் டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் அரை கப் யோகர்ட் சேர்க்கவும். இதில் கால் டீஸ்பூன் வெள்ளை மிளகுத் தூளும், உப்பும் சேர்க்கவும். மல்லி இலை தூவி விட்டு அதன் மீது கொஞ்சம் பிஸ்தா துண்டுகளைப் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். சிறிது நேரம் கழித்து பறிமாறவும்.
பூசணி தேங்காய் சில்லி லைம் (Pumpkin coconut chilli lime)
ஒரு அடி கனமான பாத்திரத்தை சூடு செய்யவும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெஜிடபிள் ஆயில் ஊற்றி சூடாக்கவும். பின்னர் அதில் கொஞ்சம் வெங்காயம், 4 முதல் 5 வெள்ளைப்பூண்டு சேர்த்து கண்ணாடி பதம் வரும்வரை வதக்கவும். பின்னர் அதில் ஒன்றரை கப் நறுக்கிய பூசணியை சேர்க்கவும். அதன் மீது கொஞ்சம் மஞ்சள் துருவிவிடவும். மூடிவைத்து மிதமான தீயில் வேகவிடவும்.
பூசணி மிருதுவானவுடன் அடுப்பை அனைக்கவும். இது குளிரவும் ப்ளெண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதை பாத்திரத்தில் மாற்றி அதன் மீது லெமன் கிராஸ் இடித்துத் தூவவும். பின்னர் இதில் கொஞ்சம் எலுமிச்சை இலை போட்டு உப்பும், மிளகாய் துகளும் சேர்த்து இறக்கவும். ஃப்ரிட்ஜில் சில மணி நேரம் வைத்துவிட்டு பரிமாறும் போது அதில் ஒரு ஸ்பூன் தேங்காய்ப்பாலும், லெமன் ஜூஸும் சேர்த்து கொடுக்கவும்.
மெலன் அண்ட் மின்ட் (Melon and mint)
ஒரு பசுமையான பானம். இது புத்துணர்ச்சி நல்கும். ஒரு தர்ப்பூசணியை எடுத்து தோல் நீக்கி விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி அதை கூழாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அந்த ப்யூரியில் புதினா இலைகள் சேர்த்து மீண்டும் ப்ளெண்டரில் சுற்றவும். இதை ஒரு வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
யோக்ஹர்ட் அண்ட் பீட்ரூட் சூப்: (Yoghurt and beetroot soup)
இரண்டு பீட்ரூட்களை கழுவி தோல் நீக்கி வெட்டிக் கொள்ளவும். இதை ஆலிவ் ஆயிலில் முக்கி எடுத்து அலுமினியம் ஃபாயில் சுற்றி 40 முதல் 45 நிமிடங்கள் ஓவனில் 175 டிகிரி சூட்டில் வேகவைக்கவும். பின்னர் அதனை வெளியில் எடுத்து குளிரவைக்கவும். பீட்ரூட்டை நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதில் உங்களுக்கு தேவையான காய்கறி சூப் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். இதை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு பின்னர் அதன் மீது அடிக்கப்பட்ட யோக்ஹர்ட் சேர்த்து மேலே சில புதினா இலைகளை தூவி பரிமாறலாம்.