Health Tips: சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்..?
Health Tips: இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பானங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.
இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு, உடலால் ரத்தத்திலிருந்து சர்க்கரையை செல்களுக்கு அனுப்ப முடிவதில்லை என்பதையே காட்டுகிறது. இந்நிலை கண்டுக் கொள்ளப்படாமல் விடப்படும்போது அது நீரிழிவு நோயாக மாறுகிறது. இந்த டெக்னாலஜி யுகத்தில் உடற்பயிற்சிகள் இல்லாதது நீரிழிவு நோய்க்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
நம் உடல் உள்ளுறுப்புகள் தொடங்கி, சுரப்பிகள் வரை அனைத்தும் சீராக செயல்பட வேண்டும். இல்லையேல் நமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும். நீரிழிவும் நோயும் அப்படியே. இன்சுலின் அளவு அதிகமாவது அல்லது அதில் ஏற்படும் சீரற்ற தன்மை ஆகியவற்றினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
அடிக்கடி சிறுநீர் கழித்தல், எப்போதும் பசி ஏற்படுவது அல்லது பசிப்பது போன்ற உணர்வு, தண்ணீர் அதிகமாகக் குடிப்பது, பெரும்பாலும் சோர்வான உணர்வு இருக்கும், உடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுக்கும், காரணமில்லாமல் எடை குறைதல், மிகக் கூடுதல் எடை, கால் மரத்துப் போய் உறுத்துதல், மங்கலான பார்வை உள்ளிட்டவைகள் இவற்றின் அறிகுறிகளாக சொல்கிறது மருத்துவ உலகம்.
நீரிழிவு நோய்க்கான அறிகுகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துரை அணுகுவது முக்கியம். இன்றைய மருத்துவ உலகில் பல சிகிச்சைகள் இருந்தாலும் நோய் வராமல் தடுப்பதே சிறந்தது.
டைப் 1, டைப் 2, gestational நீரிழிவு நோய் என வெவ்வேறானவை இருப்பதாக மருத்துவ உலகம் சொல்கிறது.
இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவ நிபுணர்கள் சிலவற்றை பரிந்துரைக்கின்றனர்.
வெந்தய தண்ணீர்:
இந்திய சமையலில் தவறாமல் இடம்பெறுவது வெந்தயம். இதில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. தொடர்ந்து வெந்தய நீர் அருந்தி வந்தால் உடலில் இன்சுலின் சுரப்பு சீராக இருப்பது ஆய்வுகள் மூலம் நிரூபணம் ஆகியயுள்ளது. இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை கட்டுப்படுத்தவும் வெந்தயம் உதவுகிறது. இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுக்க ஊற வைத்து மறுநாள் காலை சாப்பிட வேண்டும்.
நெல்லிக்காய ஜூஸ்:
நெல்லிக்காய் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதில் ஆன்டி - ஆக்ஸிடண்ட் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமான திறன் அதிகரிக்கவும், இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருப்பதற்கும் உதவுகிறது. வைட்டமின் சி, குரோமியம் உள்ளிட்ட சத்துகளும் நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. தினமும் நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடுவது நல்லது.
சியா விதைகள்
ஊட்டச்சத்து மிகுந்த சியா விதைத்தேநீர் தயாரிக்க, உங்களுக்கு தேவையானது ஒரு பேக் கிரீன் டீ, தேன் மற்றும் சியா விதைகள் ஆகியன... தேவைப்பட்டால் கடைசியாகக் கொஞ்சம் பிரஷ்ஷான புதினா இலைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
சியா தேநீர் செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதித்த நீரில் க்ரீன் டீ பேக்கை 5-6 நிமிடங்கள் வரை வைக்கவும்.பின்னர் அதனை இறக்கி தனியாக வைக்கவும்.
சியா விதைகளை சுமார் 15-20 நிமிடங்கள் தண்ணீரில் தனியே ஊற வைக்கவும். பிறகு, கிரீன் டீயில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
கலந்ததும் கிரீன் டீயில் ஊறவைத்த சியா விதைகளை சேர்த்து மீண்டும் கலக்கவும்.இதனை சூடாகவும் அருந்தலாம் அல்லது சிறிதுநேரம் ஃபிரிட்ஜில் வைத்து குளிர்பானமாகவும் குடிக்கலாம்.
துளசி டீ
துளசி இலையில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. அவை ஒருவரின் சுவாச மண்டலத்துக்கு புத்துயிர் அளிப்பதோடு நமது நுரையீரலையும் சுத்தப்படுத்துகின்றன. துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. 300- க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும், வெண்துளசியைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். இதை பயன்படுத்தி டீ தயாரித்து அருந்துவது உடல் நலனுக்கு நல்லது.
கொத்தமல்லி விதை
கொத்தமல்லி விதையில் நார்ச்சத்து மற்றும் மினரல்கள் நிறைந்திருக்கிறது. செரிமானத்தை தூண்டுகிறது. மினரல்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. கொத்தமல்லித் தழையில் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகளும் நிறைந்திருக்கிறது. இது செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது
கொத்தமல்லி விதை டீ செய்வது எப்படி?
அடுப்பை சிம்மில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு கப் தண்ணீரில் போட்டு 10-`15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதனனை சுத்தமாக வடிகட்டி அருந்தவும்.