World Biryani Day: பிரியாணி அனைவருக்குமானது! அருமையும் பெருமையும் சொல்லி மாளாது...!
வழக்கம் போல இன்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலரும் தங்களுக்குப் பிடித்த பிரியாணியைச் சாப்பிடக்கூடும். எனினும், இன்று பிரியாணி உண்பதற்குக் கூடுதல் சிறப்பு உண்டு.
வழக்கம் போல இன்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலரும் தங்களுக்குப் பிடித்த பிரியாணியைச் சாப்பிடக்கூடும். எனினும், இன்று பிரியாணி உண்பதற்குக் கூடுதல் சிறப்பு உண்டு. ஏனெனில் இந்தியாவின் பிரபலமான பாஸ்மதி அரிசி பிராண்ட் `தாவத்’ ஜூலை 3 அன்று `உலக பிரியாணி தினம்’ கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
`தாவத்’ அரிசி பிராண்ட் சார்பில் வெளியிடப்பட்ட யூட்யூப் ப்ரோமோ ஒன்றில் நடிகர் பூபேந்திர ஜடாவத் இதனை முன்னிறுத்தியுள்ளார். இந்த பிராண்டைத் தயாரித்து வரும் எல்.டி.ஃபுட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்வனி குமார் அரோரா, `பிரியாணி மீதான பிரியம் என்பது சர்வதேச அளவிலான உணர்ச்சியாக இருக்கிறது.. நாடுகள் கடந்து, கலாச்சாரங்கள் கடந்து அனைத்து வயதினருக்குமாக இருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.
அவர் கூறியதைப் போலவே, எந்தவொரு உணவுப் பொருளுக்கும் பிரபல்யம் தேடித் தருவது அது அனைவருக்குமானதாக இருக்கும் போது தான். ஒரு உணவுப் பொருள் ஒரு தேசம் முழுவதும் விரும்பி உண்ணப்படுமானால் அது பிரியாணியாகத் தான் இருக்க முடியும். மேலும், சமீபத்திய தகவல்களின்படி, ஸ்விக்கி, ஜொமாட்டோ ஆகிய செயலிகளில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டதும் பிரியாணி தான். கொரோனா பெருந்தொற்று காலத்திலும் க்ளவுட் கிட்சன்களில் பிரியாணி ஆர்டர் செய்து உண்டு மகிழ்ந்திருக்கிறது இந்தியச் சமூகம்.
டெல்லியின் முகலாய மன்னர்களின் சமையல் கூடங்களில் கடந்த 16ஆம் நூற்றாண்டில் உருவானதாக `பிரியாணி’ பற்றி கூறப்பட்டிருந்தாலும், டெல்லி பிரியாணியை விட, ஹைதராபாத் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாட் சீரக சம்பா பிரியாணி, தலச்சேரி பிரியாணி என வெவ்வேறு வகைகளில் மக்களுக்குப் பிடித்தமான உணவாக இருந்து வருகிறது பிரியாணி.
பிரியாணி பிரியர்கள் பலரும் எந்த ஊர் பிரியாணி நன்றாக இருக்கும் என மேற்கொள்ளும் விவாதங்கள் முடிவற்றவை. எனினும் இறைச்சி உண்ணாதவர்கள் தங்கள் `புலாவ்’ சோற்றை `பிரியாணி’ என சொன்னால், அனைத்து வகை பிரியாணி பிரியர்களும் போர் தொடுத்துவிடுவார்கள். பிரியாணியின் இதயம் என்பதே அதில் ஊறும் இறைச்சி தான். எனவே எந்த வகை பிரியாணியாக இருந்தாலும், அது மக்களை இணைத்துவிடும்.
ஒருபக்கம் அனைவரையும் இணைக்கும் உணவாக பிரியாணி இருக்கும் அதே வேலையில், கடந்த சில ஆண்டுகளாக பிரியாணியையும் இறைச்சியையும் வைத்து பிரிவினைவாதத்தை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் முயற்சி மேற்கொள்ளாமலில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி சட்டமன்றத் தேர்தல்களின் போது, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது கட்சியைச் சேர்ந்த டெல்லி முதல்வர் வேட்பாளராக இருந்த மனோஜ் திவாரிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போது, துப்பாக்கி தோட்டாக்களையும், பிரியாணியையும் ஒப்பிட்டுப் பேசினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசையும், அப்போது டெல்லி ஷாஹீன்பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களையும் இணைத்துப் பேசிய யோகி ஆதித்யநாத், `நாங்கள் ஒவ்வொரு தீவிரவாதியையும் கண்டறிந்து, அவர்களுக்கு பிரியாணி வழங்காமல் தோட்டாக்களை வழங்கி வருகிறோம்’ எனக் கூறினார்.
தேர்தல் ஆணையம் யோகி ஆதித்யநாத்தின் இந்த வெறுப்புப் பேச்சைக் கண்டித்து நோட்டீஸ் விடுத்தது.
பிரியாணியின் வரலாற்றுத் தோற்றம் குறித்து பெரும்பாலும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய சூழல் உருவாகி வருகிறது. வெவ்வேறு வகையான பிரியாணி இருந்தாலும், உணவுப் பிரியர்கள் `எங்கள் பிரியாணி தான் சிறந்தது’ எனக் கோரினாலும், ஒரு உண்மை மட்டுமே எப்போதும் மாறாது - பிரியாணி என்பது அனைவருக்குமானது!