Plantain Masala Fry: வீட்டில் பூஜையா? தயிர், சாம்பார் சாதத்துக்கு ஏற்ற சுவையான மசாலா வாழை வறுவல்..
சுவையான மசாலா வாழைக்காய் வறுவல் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு வறுவலை விரும்பும் அளவுக்கு வாழைக்காய் வறுவலை பெரும்பாலானோர் விரும்புவது இல்லை இதற்கு காரணம் இதன் சுவை தான். ஆனால் நீங்கள் இந்த மாதிரி ஒரு முறை வாழைக்காயை வறுத்து கொடுத்து பாருங்க.. உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் வாழைக்காயை விரும்பி சாப்பிடுவர்.
பூஜை நேரத்தில், சாம்பார் மற்றும் தயிர் சாதத்துடன் வைத்து சாப்பிட இது ஒரு நல்ல காம்பினேஷனாக இருக்கும். வாங்க இந்த வாழைக்காய் வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இரண்டு வாழைக்காயை தோல் நீக்கி வட்ட வடிவில் மீடியம் ஸ்லைஸ்களாக வெட்டி எடுத்து இதை ஒரு கடாயில் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து சிறிது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து அரைவேக்காடு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு தட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் இரண்டு ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள், அரை ஸ்பூன் சீரக தூள், அரை ஸ்பூன் மிளகுத்தூள், சிறிது பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் குழைத்து வாழைக்காயில் பூசி விட வேண்டும்.
இதை ஒரு 10 நிமிடம் ஊற விட வேண்டும். இதற்கிடையே 10 பூண்டு பற்களை தோலுடன் நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் சிறிது கடுகு சேர்க்கவும் பொரிந்ததும் நசுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை எண்ணெயில் சேர்க்கவேண்டும். இதனுடன் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் இதனுடனேயே மசாலா தடவிய வாழைக்காய்களை வைத்து இரண்டு புறமும் திருப்பி விட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலை மற்றும் பூண்டு வாழைக்காய்க்கு நல்ல ஒரு ஃப்ளேவர் கொடுக்கும்.
வாழைக்காய் நான்றாக எண்ணெயில் வெந்ததும். இந்த பூண்டு கறிவேப்பிலை வாழைக்காய் ஆகியவற்றை ஒரு தட்டுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் வறுவல் தயார். இதன் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்.