ருசியில் அசத்தும் நவாபி முட்டை குர்மா... நாவிலே நிற்கும் சுவை.. அசத்தலாக செய்வது இப்படித்தான்..!
சப்பாத்தி, நாண், பரோட்டாவுக்கு சைடிஷானன் முகாலாயர்களின் நவாபி முட்டை குர்மாவை செய்து சாப்பிட்டு மகிழலாம்.
ஞாயிறு விடுமுறை என்றாலே கறி எடுத்து சமைக்காமல் இருக்க முடியாது. வழக்கம்போல், சிக்கன், மீன், மட்டன் என எடுத்து சமைத்து அலுத்தவர்கள், கொஞ்சம் ராயல் லுக்கில், மிகுந்த சுவையான ஒரு டிஷ் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்...?
ஒவ்வொரு உணவுக்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த வகையில் முகலாயர்கள் காலத்தில் அவர்கள் உண்ட உணவுகள் குறித்த சில குறிப்புகள் உள்ளன. முகாலய மன்னர்கள் அசைவ உணவுகளை பெரும்பாலும் விரும்பியவர்கள். அவர்களின் உணவு முறைகளை ஒருமுறையேனும் ருசித்து பார்க்காமல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு உணவு தான் நவாபி முட்டை குர்மா. ராயல் லுக்கில் ஒரு ரிச் உணவு சாப்பிட விரும்பினால் நவாபி முட்டை குர்மாவை ருசி பார்க்கலாம்.
நவாபி முட்டை குர்மா செய்வதற்கு தேவையான பொருட்கள்
முந்திரி -15, பாதாம் -10( ஊறவைத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்), வெள்ளரி விதை - 2 டேபிள் ஸ்பூன், வெள்ளை மிளகு - 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் -3, பால் - 2 கப், பட்டை - , மிளகு, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய் - தாளிப்பதற்கு ஏற்றளவு எடுத்து கொள்ள வேண்டும், பெரிய வெங்காயம் - ஒன்று, இஞ்சி, பூண்டு விழுந்து - 2 டேபிள் ஸ்பூன், தயிர் - ஒரு கப், மிளகு தூள் - 2 டேபிள் ஸ்பூன், கஸ்தூரி மெத்தி- 1 டேபிள் ஸ்பூன், ஃபிரஷ் கிரீம் அல்லது மலாய் - ஒரு கப், சீஸ் - ஒரு சிறிய துண்டு, முட்டை - 5, கொத்தமல்லி, எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு
நவாபி முட்டை குர்மா செய்யும் முறை
முதலில் 5 முட்டையை வேக வைத்து கொள்ள வேண்டும். முட்டை வேகும் நேரத்தில் மேலே குறிப்பிட்ட அளவுள்ள முந்திரி, பாதாம், வெள்ளரி விதை, வெள்ளை மிளகு, 3 பச்சை மிளகாயை மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு கப் பாலை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். முட்டையை தோல் உரித்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் வானொலியை வைத்து, தோலுத்து வைத்துள்ள முட்டைகளை கீறி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதே எண்ணெய்யில், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, இலை, 10 மிளகு போட்டு தாளிக்க வேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் அல்லது மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்த ஒரு வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். எண்ணெய்யில் வெங்காயம் பொன்னிறமானதும் அதனுன் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
இஞ்சி, பூண்டு வதங்கியதும், ஒரு கப் தயிரை அதில் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர், 2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு, கஸ்தூரி மெத்தி சேர்த்து கலவையை நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் அரைத்து வைத்திருக்கும் முந்திரி, பாதாம், பால் கலவையையும் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த கலவை ஒரு நிமிடங்கள் கொதித்ததுடன், ஒரு கப் ஃபிரஷ் கிரீம் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்த மலாய், ஒரு துண்டு சீஸ் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். ஒரு நிமிடம் ஆனதும், கிரேவிக்காக ஒரு கப் பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பால் இல்லை என்றால் ஒரு கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடலாம். இந்த கலவை சிறிது கொதித்ததும், வறுத்து வைத்திருக்கும் அவித்த முட்டையை அந்த கலவையில் போட்டு நன்றாக கிளறி விட வேண்டும். 5 நிமிடங்கள் மலாசாவில் முட்டை வேக வேண்டும். பின்னர், ஒரு பிடி கொத்தமல்லி மற்றும் 3 பச்சை மிளகாயை கீறி குர்மா மீது தூவி கிளறிவிட்டு ஒரு நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதன்பிறகு ரெடியான நவாபி முட்டை குர்மாவை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடலாம்.
நவாபி முட்டை குர்மா:
இந்த நவாபி முட்டை குர்மாவை ரொட்டி, சப்பாத்தி, நாண், பரோட்டாவுக்கு சைடிஷாக சாப்பிடலாம். பால், கிரீம், பாதாம் எல்லாம் பயன்படுத்துவதால் நாவாபி முட்டை குர்மாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் முந்திரி, பாதாம், பால், முட்டை, மிளகு பயன்படுத்துவதால் புரோட்டீன் சத்துகள் அதிகம் உள்ளன. இதனால் சுவை மட்டுமின்றி உடலுக்கு ஆரோக்கியமான உணவாகவும் நவாபி முட்டை குர்மா உள்ளது. இப்படி ருசியில் அசத்தும் நவாபி முட்டை குர்மாவை செய்து ஞாயிறு விடுமுறையை கொண்டாடலாம்.