(Source: ECI/ABP News/ABP Majha)
Navratri 2023 Recipes: நவராத்திரி அமிர்தம், முத்து சுண்டல், கோல்டன் ரிங்க்ஸ் எப்படி செய்வது?
Navaratri 2023: நவரத்திரி பண்டிகை நெருங்கும் நிலையில், நவராத்திரிக்கு மூன்று வகையான ஸ்பெஷல் ரெசிபிக்களை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
நவராத்திரி அமிர்தம்
தேவையான பொருட்கள்:
ஆப்பிள்-1, மாம்பழம்-1, சப்போட்டா-1, அத்திப்பழம் -1, வாழைப்பழம் - 1, முந்திரி 10, திராட்சை- 10, பாதாம்-12, பேரீச்சைப்பழம் - 10, நெய்- தேவையான அளவு, தேன் - தேவையான அளவு.
செய்முறை:
ஆப்பிள், மாம்பழம், அத்திப்பழம், சப்போட்டா ஆகியவற்றை துண்டுகளாக்கி கொள்ளவும். வாழைப்பழத்தை தோலுரித்து அதையும் துண்டு களாக்கவும். முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றை நெய்யில் வறுத்து, துண்டுகளாக்கிய பழ துண்டுகளுடன் சேர்க்க வேண்டும். மேலும் இதனுடன் தேன் சேர்த்துக் நன்றாக மிக்ஸ் செய்து நிவேதனம் செய்ய வேண்டும்.
முத்து சுண்டல் :
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1 கப், கடுகு - தாளிக்க தேவையான அளவு, பெருங்காயம்-தேவையான அளவு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் –கால் கப், எலுமிச்சைச் சாறு – சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 4, மஞ்சள்தூள்- தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதலில், ஜவ்வரிசியை வறுத்து இரண்டு பங்கு வெந்நீர் ஊற்றி ஊறவிட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து நீரை வடித்துவிட்டு ஜவ்வரிசியை பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மஞ்சள்தூள், காய்ந்த மிளகாய் சேர்த்துக் கிளறி, அதனுடன் ஊற வைத்த ஜவ்வரிசி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால், முத்து சுண்டல் ரெடி. சுண்டல் ஆறிய பின் அதன் மீது, எலுமிச்சைச் சாறு பிழிந்து விட்டு, கலந்து பரிமாறலாம்.
கோல்டன் ரிங்ஸ்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு , உப்பு- தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, மிளகுத்தூள், சீரகம், பெருங்காயத்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலந்து, சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ள வேண்டும். பிசைந்த மாவில் இருந்து சிறிய கோலி உருண்டை அளவு எடுத்து ஒரு இன்ச் அளவு பென்சில் போல நீளமாக தேய்த்து, அதன் இரு முனைகளையும் ஒன்று சேர்த்து ரவுண்ட் ஷேப்பில் கொண்டு வர வேண்டும். கடாயில் இதை பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். தயார் செய்து வைத்துள்ள வளையங்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.