Heart Health : இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க அவசியம் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் இதோ..
உடற்பயிற்சி ,உணவு பழக்க வழக்கங்கள், சரியான தூக்கம் போன்றன இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன .
வாழ்க்கை முழுதும் உடலின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர். ஒவ்வொருவருக்கும் உடலில் ஏதாவது ஒரு குறை, நோய் இருந்துகொண்டேதான் இருக்கிறது .இது மனிதனின் வாழ்க்கை முறை பிரச்சனையும் ,அவனுடைய உணவு பழக்க வழக்கங்களும் ,அன்றாட செயல்பாடுகளுமே இதற்கு காரணமாக இருக்கின்றன.
ஆகவே மனிதனுடைய இயக்கத்திற்கும், அவருடைய வாழ்நாளை சீராகக் கொண்டு செல்வதற்கும் முக்கியமானது ஆரோக்கியமான இதயமாகும்.
உடற்பயிற்சி ,உணவு பழக்க வழக்கங்கள், சரியான தூக்கம் போன்றன இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என அமெரிக்காவை சேர்ந்த ஹார்ட் அசோசியேஷன் தெரிவித்திருக்கிறது.
ஆகவே ஒருவருடைய உடலின் தன்மையைப் பொறுத்து மிதமான தினசரி உடற்பயிற்சிகள் அல்லது கொஞ்சம் கடினமான உடற்பயிற்சிகளை செய்யலாமா என உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
இதயம் உடலில் உள்ள உறுப்புகளுக்கு இரத்தத்தை அனுப்புகிற அதேவேளை உடலுக்கு ஆக்ஸிஜன் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கிறது. இதயத்தின் இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டால் மூளையில் தொடங்கி உடலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்புகளும் செயலிழந்துவிடும் அபாயம் உள்ளது.
ஆகவே குறிப்பாக உலக அளவில் அதிகளவான இறப்புகள் இதய நோயினால் ஏற்படுவதாகவே ஆய்வுகள் கூறுகின்றன. ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள , சிறந்த பழக்க வழக்கங்களின் ஊடாக இதயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. நமது அன்றாட வாழ்க்கை முறை இதய நாளங்களை அடிக்கடி பாதிக்கிறது. பல ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் இருதய நோய்கள் ஏற்பட முக்கிய காரணிகளாகக் கூறப்படுகிறது.
முறையற்ற உணவு பழக்க வழக்கம்,போதிய தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை மற்றும் புகையிலை பாவனை மற்றும் மது அருந்துதல் போன்றன இதய நோய் ஏற்பட வழி வகிக்கின்றன. ஆகவே சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் இதய நோய் ஏற்படுவதை நாம் தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பல எளிய வழிமுறைகள் இருப்பதாகவே தெரிவிக்கின்றனர்.
ஆகவே ஒருவர் இதயத்தை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் ,அதற்கான வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம்.
நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள்:
பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த கலோரிகள் இருப்பதால் இது உடலில் போதுமான எடையை பராமரிக்க உதவுகிறது.காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக வைட்டமின்களும், குறைந்த அளவிலான கொழுப்பும் இருப்பதால் இது இதய நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. பழங்கள், தானிய வகைகள் அடங்கிய உணவு இதயத்தை வலுவாக வைத்திருக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சீரான உடற்பயிற்சி செய்யுங்கள்:
தினசரி சீரான உடற்பயிற்சி உடல் நலத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அன்றாட வேலைப்பளுவை பொறுத்து இலகுவான உடற்பயிற்சி அல்லது கொஞ்சம் கடினமான உடற்பயிற்சிகளை தினசரி செய்து வந்தால் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் செயல்படும் என கூறப்படுகிறது. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனவும் அல்லது வாரத்திற்கு 75 நிமிட சற்று தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்திருக்கிறது.
பாதாம் மற்றும் வால்நட்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்:
பாதாம் மற்றும் வால்நட்ஸ் போன்ற பருப்பு வகைகளில் உடலுக்கு தேவையான அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. பாதாம் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துவதோடு, கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது. வால்நட்ஸ் பருப்பில் ஒமேகா -3 ,கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், இது இதயத்தமனி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆகவே பாதாம், வால் நட்ஸ் போன்ற உடலுக்கு நன்மை தரும் உணவுகளை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் இதய ஆரோக்கியத்தை நாம் மேம்படுத்தலாம்.
மது மற்றும் புகையிலை பொருட்களை குறைக்கவும்:
ஆரோக்கியமான இதயத்தை பேண மது மற்றும் புகையிலை பொருட்கள் உட்கொள்வதை நிறுத்துமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிக அளவு மதுபானங்களை உட்கொள்வது ஒழுங்கற்ற இதய செயற்பாட்டை தோற்றுவிக்கும் எனவும் , உயர் இரத்த அழுத்தம், இதய தசை சேதம் மற்றும் பக்கவாதம் போன்ற பிற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆரோக்கியமான சமையல் :
நீராவியில் அவித்தல்,
சுடுதல், வேகவைப்பது போன்ற முறைகளில் சமையல் செய்து உண்ணும் போது ,காய்கறிகளின் ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது. உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் போது உப்பு, சர்க்கரை மற்றும் மசாலாப் பொருட்களை குறைந்த அளவு மட்டுமே சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மேற்கூறிய அனைத்தும் பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. ஒவ்வொரு நபரின் உடலும் தனித்துவமானது. உணவு குறித்த ஆலோசனைகள் உணவு நிபுணர்களிடமும், மருத்துவர்களிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு அதை பின்பற்றவும்