Corn Palak Pulao: பாலக்கீரையில் சுவையான புலாவ் செய்து அசத்துங்க - இதோ ரெசிபி!
பாலக்கீரை, ஸ்வீட்கார்ன் புலாவ் செய்வது என்பதை இங்கே காணலாம்.
கீரை வகைகளில் சாதம் செய்து அசத்தலாம். பாலக்கீரை, ஸ்வீட்கார்ன் சேர்த்து புலாவ் செய்யலாம். வாரத்தில் இரண்டு நாள் கீரை சாப்பிடுவது உடல்நலனுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பாலக்கீரை ஸ்வீட்கார்ன் புலாவ்
என்னென்ன தேவை?
அரிசி - ஒரு கப்
வெங்காயம் - 2
ஸ்வீட்கார்ன் - ஒரு கப்
பாலக்கீரை - ஒரு கட்டு
தேங்காய் பால் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
சீரகம் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி - கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
பிரியாணி இலை, பட்டை, கிராம்பு - தலா 1
செய்முறை
அரிசியை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 15-30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். கீரையை நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து அதை நறுக்கை வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு எல்லாம் சேர்த்து அதோடு சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு சேர்க்கவும்.
இதோடு, ஸ்வீட்கார்ன், நறுக்கிய பாலக்கீரை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையெனில் மிளகாய் பொடி சேர்க்கலாம். பின்னர், அரிசி, தேங்காய் பால், சேர்த்து நன்றாக கலக்கவும். குக்கரை மூடி 3 விசில் விடவும்.ஸ்வீட்கார்ன் பாலக்கீரை புலாவ் ரெடி.
இதை முழுவதுமாக தேங்காய் பாலில் செய்யலாம். இல்லையெனில், செய்யும் அரிசியின் அளவுக்கு ஏற்றவாறு பாதி தேங்காய் பால், மீதி தண்ணீர் சேர்க்கலாம். இதை செய்ய இன்னொரு முறையும் இருக்கிறது. தேங்காய் பால் சேர்க்காமல் செய்யலாம். வேக வைத்த சாதத்தோடு, தேவையான பொருட்களை வதக்கி அதோடு கலந்தும் செய்யவும். சுவை மாறுபடும். இதற்கு தக்காளி சேர்ப்பது கூடுதல் சுவையை தரும்.
பாலக்கீரையுடன் கொண்டைக்கடலை சேர்த்தும் ரைஸ் செய்யலாம். எளிதான செய்முறையை இங்கே காணலாம்.
இரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை நன்றாக வேகவைத்து தனியே வைக்கவும். சுத்தம் செய்யப்பட்ட பாலக்கீரையை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
குக்கரில் செய்வதென்றால், அடுப்பில் மிதமான தீயில், குக்கரை வைத்து எண்ணெய் அல்லது நெய் 4 டேபிள் ஸ்பூன் ஊற்றவும். நெய் சூடானதும் அதில், பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, சீரகம், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பாலக்கீரை விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பாலக்கீரை கொஞ்சம் நிறம் மாறியதும் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து, கரம் மசாலா, உப்பு சேர்த்து கலக்கவும். இதோடு, ஊற வைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விடவும். கொண்டைக்கடலை பாலக்கீரை சாதம் ரெடி.