முட்டையில் மஞ்சள் கருவை சாப்பிடக் கூடாதா? உண்மை என்ன? மருத்துவர் அட்வைஸ்!
முட்டை என்றால் அது முழு முட்டையே.. அதில் வெள்ளை என்பது அதன் சட்டை மட்டுமே.. முட்டையை முழுதாக உண்போம் - மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
கோழி முட்டைகளில் மஞ்சள் கருவைச் சாப்பிடக் கூடாது என்று பகிரப்படும் தகவல்களில் உண்மை இல்லை, அதைக் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
’’கிளினிக்கில் தசை வலி, உடல் சோர்வு என்று என்னைச் சந்தித்த சகோதரி ஒருவரிடம் தாங்கள் தினமும் புரதச்சத்து தேவையான அளவு உட்கொள்கிறீர்களா? என்று கேட்டேன்.
’’ஆம் சார்.. தினமும் எங்க வீட்ல எல்லாரும் கண்டிப்பா ஆளுக்கு ஒரு முட்டை சாப்புடுறோம்’’ என்றார்.
ரொம்ப சந்தோசம் மா..
ஆனா.. முட்டை வெள்ளைக்கரு மட்டும்தான் சாப்டுவோம். மஞ்சள் கருவ சாப்ட மாட்டோம்.
அது ஏன்மா?
என் வீட்டுக்காரர் மஞ்சள் கரு சாப்ட்டா கொலஸ்ட்ரால் அதிகமாகிடும்னு சொல்லி என் புள்ளைங்களக் கூடசாப்ட விடமாட்டேங்கறாரு சார்.
அவரது வீட்டுக்காரரிடம் கேட்டேன்.
"ஏன் சார் இப்டி பண்றீங்க? கொலஸ்ட்ரால்னாலே கெட்டதுனு உங்களுக்கு யாரு சார் சொன்னது..?
நமக்கு தேவையான பல ஹார்மோன்கள், நம்ம செல்கள், நமது மூளைனு எல்லாத்துலையும் கொலஸ்ட்ரால் இருக்கு. கொலஸ்ட்ரால் நமக்கு இன்றியமையாத தேவை சார். நம்ம கொலஸ்ட்ரால் உணவு மூலமா சாப்டாட்டியும் நம்ம உடல் கொலஸ்ட்ராலை உற்பத்தி செஞ்சுக்கும்.
நம்ம உடம்புக்கு கெடுதினா.. ஏன் உடலே அதை உற்பத்தி செய்யணும்?"
"சரி சார் இனிமே முட்டையை முழுசா சாப்டுறோம்"
நான் விளையாட்டுக்காக "இனிமேலும் நீங்க முட்டையை மஞ்சள் கரு இல்லாம சாப்டுவீங்கன்னா தயவு செஞ்சு அந்த ஐந்து முட்டைகளோட மஞ்சள் கருக்களை வீணாக்காம என்கிட்ட கொண்டாந்து கொடுத்துருங்க.. ஃபீஸ்ல கூட கழிச்சுக்குறேன் " என்றேன்
அதற்கு அந்த சகோதரி கூறுகிறார்
"இல்ல சார் .. நாங்க தினமும் ஐந்து மஞ்சள் கருவ நாங்க வளர்க்குற நாய்க்கு சோறோட பிசஞ்சு வச்சுருவோம். சூப்பரா சாப்ட்டு இப்போ நல்லா இருக்கு சார்.."
முட்டை மஞ்சள் கருவுல
கண்ணுக்குத் தேவையான விட்டமின் ஏ
எலும்புக்கு தேவையான விட்டமின் டி
ரத்த உறைதலுக்குத் தேவையான விட்டமின் கே
ஆண்டி ஆக்சிடெண்ட் வேலை பார்க்கும் விட்டமின் ஈ
செல் வளர்ச்சிக்குத் தேவையான ஃபோலிக் அமிலம்
மூளைக்குத் தேவையான கோலின் லூடின், சியாசான்தின் ஆகிய ஆண்டி ஆக்சிடண்ட்…
இவ்வளவு தம்மாத்தூண்டு மஞ்சள் கருவுக்குள்ள ஒழிஞ்சுருக்கு ..
உங்க நாய்க்கும் கண்டிப்பா முட்டை கொடுங்க.
ஆனா இனிமே முழு முட்டையா நீங்களும் சாப்டுங்க... என்றேன்.

ஓகே.. ஓகே என்று தலையாட்டி குடும்பத்தோடு விடைபெற்றனர்..
முட்டை என்றால் அது முழு முட்டையே..
அதில் வெள்ளை என்பது அதன் சட்டை மட்டுமே..
முட்டையை முழுதாக உண்போம்
அதன் முழுப் பயனையும் முழுமையாகப் பெறுவோம்’’ என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.






















