நெய், மோர், கருணைக்கிழங்கு.. ஆயுர்வேதம் என்ன சொல்கிறது? விளக்கும் மருத்துவர் வனிதா..
அமிர்தத்திற்கு இணையாக நம் முன்னோர்கள் மோரினைப் பயன்படுத்தி வந்ததாகவும், இதனைச் சாப்பிடும் போது உடலில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்காது என்றார்
நெய்யை நாம் உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளும்போது இளமையாக இருக்க முடியும் எனவும், அதோடு 10 ஆண்டுகள் ஆனால் நெய்யைப் பயன்படுத்தும் போது மனோவியாதியைக் கூட குணப்படுத்த முடியும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.
உணவு, நீர் என்பது நம்முடைய வாழ்வில் மிகவும் இன்றியமையாதது. ஆனால் இதனை நம்முடைய உடல் நலத்திற்கு ஏற்றவாறு எப்படி உபயோகிக்க வேண்டும் எனவும், நம் முன்னோர்கள் என்ன மாதிரியான வாழ்க்கை முறையைப்பின்பற்றி வந்தார்கள் என்பது குறித்த சில சுவாரஸ்சியமான விஷயங்களை நம்முடன் பகிர்கிறார் மத்திய இந்திய மருத்துவக்கழக்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் ஸ்ரீ சாய்ஷா ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியின் தலைவர் வனிதா முரளிக்குமார்.
முதலில் மக்களின் உணவு முறை குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துக்கொண்ட வனிதா முரளிக்குமார், இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் என்ன உணவை சாப்பிட வேண்டும்? எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ?என அனைத்து விஷயங்களையும் வாட்ஸ் அப்பில் வரும் தகவலைப்பார்த்து தான் மக்கள் அறிந்துகொள்கின்றனர். ஆனால் முன்னதாக நாம் அந்த விஷயங்களை ஆராயாமல் தொடங்கிவிடுகிறோம்.
உதாரணமாக தண்ணீர் குடிக்கும் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு தினமும் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அந்தளவிற்கு தண்ணீர் நம்மால் குடிக்க முடியாது. குடிக்கவும் கூடாது என்கிறார் ஆயுர்வேத மருத்துவர். “நம் உடலுக்கு எப்போது தண்ணீர் தேவை என்பதை நம்முடைய தாகமே நமக்கு உணர்த்தும்,. அப்போது நாம் தண்ணீர் பருகினாலே போதும்“. அதைவிட்டு விட்டு அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகும் போது தலைவலி, உடல்வலி போன்ற தேவையற்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். ஒருவேளை உடலுக்கு தேவையான நீர்ச்சத்து உங்களுக்கு தேவை என நீங்கள் நினைத்தால் அதிகளவு தண்ணீர் குடிக்காமல், பழங்கள் மற்றும் பழச்சாறாக நீங்கள் பருகலாம். இது உங்களுக்கு ஆரோக்கியமான உணர்வை ஏற்படுத்தும்” என்றார்
தயிர் அல்லது மோர் எது சாப்பிடுவது நல்லது?
தயிர் மற்றும் மோர் இரண்டுமே பாலில் இருந்துதான் வருகிறது என்றாலும் இவை இரண்டிற்குமே எதிர்மறை செயல்கள் உள்ளது என கூறுகிறார் ஆயுர்வேத மருத்துவர் வனிதா. பொதுவாக தயிரை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது தேவையற்ற கொழுப்பு உடலில் அதிகளவில் ஏற்படும். இதோடு மூட்டு இணைப்பு வலியையும் நமக்கு ஏற்படுவதாக எச்சரிக்கிறார். ஆனால் சிறுநீரக கடுப்பு பிரச்சனைக்கு தயிர் சிறந்த தீர்வாக உள்ளது என்கிறார்.
இதே சமயம், அமிர்தத்திற்கு இணையாக நம் முன்னோர்கள் மோரினைப் பயன்படுத்தி வந்ததாகவும், இதனைச்சாப்பிடும் போது உடலில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்காது. குறிப்பாக இரத்தச்சோகை என்பது பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், இதனை சரிசெய்ய கரிசிலாங்கண்ணியை மோரில் அரைத்துக்குடித்தால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் என்கிறார். எனவே நாம் தயிர்க்குப் பதிலாக அதிகளவில் மோரினை நம்முடைய உணவு முறையில் சேர்த்துக்கொள்ளலாம்.
60 ஆம் நூற்றாண்டில் வந்ததுதான் சாம்பார் சாதம்:
நம்முடைய முன்னோர்கள் உணவே மருந்து என்ற ஒற்றை தாரக மந்திரத்தை மனதில் வைத்து தான் உணவு முறைகளைப்பின்பற்றி வந்தனர். குறிப்பாக மோர்க்குழம்பு மற்றும் கருணைக்கிழங்கு பொரியல் தான் அதிகளவில் மக்கள் உபயோகித்துள்ளனர். இது மூல வியாதிகளுக்கு சிறந்த தீர்வாக அமைந்திருந்ததாக கூறும் மருத்துவர் சாம்பார் என்பது 60 ஆம் நூற்றாண்டில் வந்தது என்ற தகவலையும் பகிர்கிறார்.
இதோடு தினமும் நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, உடல் இளமையாக இருப்பதோடு பித்தத்தைக்குறைக்கும் தன்மை உள்ளது. மேலும் நெய்யை பாட்டிலில் அடைத்துவைத்து 10 ஆண்டுகள் கழித்து உபயோகிக்கும் போது மனவியோதிகளுக்கு சிறந்த மருந்து என்கிறது புராணகிர்தம். அதே போன்று 100 ஆண்டுகள் ஆன நெய் எந்த நோயைக்குணப்படுத்தவும் உதவியாக உள்ளது.
இப்படி நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மனதில் வைத்து முன்னோர்கள் உணவுமுறையைப்பின்பற்றி வந்தனர். ஆனால் என்ன இன்றைய தலைமுறைக்கு பாராம்பரிய உணவு என்பது பிடிக்கவில்லை. ஆனால் இதனைக் கொஞ்சம் பின்பற்ற வேண்டும் என்பதோடு அதிக பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது எனவும் அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.