வீட்டில் நாய், பூனை வளர்க்கிறீர்களா… செல்லப்பிராணிகளுக்கு உரிமம், சுகாதாரம்ன்னு இவ்வளவு விஷயங்கள் இருக்கு!
செல்லபிராணி வளர்ப்பவர்கள் தினமும் வீட்டை ஒரு இடம் விடாமல் சுத்தப்படுத்துவது ஆரோக்கியமானது. டேபிள், நாற்காலி, படுக்கை விரிப்பு, தரை விரிப்பு ஆகியவற்றை வேக்கம் கிளீனர் மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.
பலருக்கும் செல்ல பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் இருக்கும். அவை செய்யும் சேட்டைகளை, அவை வழங்கும் எதிர்பார்புகளற்ற அன்பை ரசிப்பதில் அளவில்லாத ஆசை இருக்கும். அதற்கேற்ப அவை செய்யும் சேட்டைகள் பலவற்றை நாம் வீடியோவாக தினமும் சமூக வலைத்தளங்களில் கண்டிருப்போம். நம்மூரில் பொதுவாக செல்லப்பிராணிகள் என்றால் அதிகமாக இருப்பது நாய் மற்றும் பூனைகள்தான். கிளி, புறா போன்றவை வெகு சிலரே வைத்திருப்பார்கள். மீன் வளர்தலுக்கு அவ்வளவு பராமரிப்புக்கு தேவை இல்லை. ஆனால் நாய் பூனை வளர்க்கும்போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. குறிப்பாக இவற்றிற்கு முடிகள் கொட்டும், அவை வீட்டில் குப்பையாக சேரும் என்ற ஒன்று இருந்தாலும், வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கும் அவற்றின்மூலம் ஆபத்து உண்டு. இதுபோக அவற்றை வளர்ப்பதற்கு சட்ட விதிமுறைகளும் உண்டு.
முடி உதிர்தல்
செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பெரும் பிரச்சினையாக இருப்பது முடி உதிர்தல்தான். அவை நமது குடும்ப உறுப்பினர் போல வளர்வதால் நாம் இருக்கும் அனைத்து இடங்களிலும் அவர்களும் படுத்து உருண்டு விளையாடுகிறார்கள். அவற்றின் முடி நமது வீடு முழுவதும் கொட்டும், சில நேரங்களில் அவை உணவு பொருட்களில் விழ கூட வாய்ப்புள்ளது. அதனால செல்லபிராணி வளர்ப்பவர்கள் தினமும் வீட்டை ஒரு இடம் விடாமல் சுத்தப்படுத்துவது ஆரோக்கியமானது. டேபிள், நாற்காலி, படுக்கை விரிப்பு, தரை விரிப்பு ஆகியவற்றை வேக்கம் கிளீனர் மூலம் சுத்தப்படுத்த வேண்டும். பெரும்பாலும் சமயலறைக்குள் உங்கள் செல்லப்பிராணியை நுழைய விடாமல் இருப்பது சிறந்தது.
உணவு
நீங்கள் உணவு உண்ணும்போது உங்கள் செல்லப்பிராணி அருகில் இருந்தால் அவற்றிற்கும் அதே கையில் ஊட்டி விடும் பழக்கம் தற்போது பலருக்கும் இருக்கிறது. ஆனால், அப்படி செய்வது ஆரோக்கியமானது அல்ல. பொதுவாகவே ஊட்டிவிடுவது உங்களது செல்லப்பிராணிக்கும் நல்லதல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தடுப்பூசி
முறையாக செல்லபிராணிகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை செலுத்தி விட வேண்டும். அது அவற்றின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்துடன் சம்மந்தப்பட்டது. எப்போதாவது அவை யாரையாவது கடித்துவிட்டால் கூட பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.
சுத்தம்
வீடுகளை சுத்தப்படுத்துவதை போல் செல்லப்பிராணிகளையும் முறையாக குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் குளிப்பாட்ட வேண்டும். இது அவற்றிற்கும் நமக்கும் ஆரோக்கியமான விஷயமாகும். அவற்றால் நமக்கு பரவும் நோய்களில் இருந்து நம்மையும் பாதுகாக்கும். குறிப்பாக நமது செல்லபிராணிகளை குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இயற்கை உபாதைகளை கழிக்க கற்றுத்தர வேண்டும். நமக்குத் தெரியாத இடத்தில் அவை மலம் கழித்து வைத்திருந்தால் அது அங்கு வசிப்பவர்களுக்கு தேவையற்ற தொற்று நோய்களை பரப்ப வாய்ப்புள்ளது.
சட்ட விதிமுறைகள்
இந்தியாவில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்காகவே விதிமுறைகள் பல உள்ளன. அதற்கு முதலில் நீங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிக்கு முறையான உரிமம் வாங்க வேண்டும். அப்படி வாங்காமல் இருக்கும் பட்சத்தில், அவை தனியாக சாலைக்கு சென்றால், அரசே கூட அவற்றை பிடித்து காப்பகங்களுக்கு எடுத்து செல்ல அனுமதி உண்டு.