குறட்டைவிடுபவரா நீங்கள்? அப்போ இதையெல்லாம் கவனிங்க.. அரசு சித்த மருத்துவரின் அட்வைஸ்..
"குறட்டை நம்மை சுற்றி உள்ளவர்களை மட்டும் அல்ல நம்மையும் உடல் அளவில் பாதிப்பை உண்டாகும் மிகப்பெரிய பிரச்னையே"
குறட்டை
பலரின் வாழ்வில் குறட்டை என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது, குறட்டை அப்படிங்கிறது யுனிவர்செல் பிரச்னை என்றுதான் சொல்லப்படுகின்றது, அதாவது படுத்த உடனே நல்லா குறட்டைவிட்டு தூங்குவதால் அடுத்த நாள் ரொம்ப சோர்வாக இருப்பதாக பலர் கூறுகின்றனர்.
இது குறித்து அரசு சித்த மருத்துவர் விக்ரம் கூறும் அறிவுரைகள் என்னவென்றால், "நன்றாக குறட்டை விட்டு தூங்கினால் நிச்சயமாக அடுத்த நாள் சோர்வை உண்டாக்கும், அது மிகப்பெரிய பிரச்னை தான், பலர் குறட்டை விட்டு தூங்கினால் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக நினைக்கின்றனர், இது மிகப்பெரிய தவறு.. ஆங்கில் "Sound Sleep" என்ற வார்த்தை உள்ளது. அதனை "ஆழ்ந்த உறக்கம்" என்று சொல்வர், ஆனால் குறட்டை விடுவது நிச்சயமாக Sound Sleep கிடையாது, அதனை "Sound inducing Sleep" என்றுதான் சொல்ல வேண்டும், குறட்டை விடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.
குறட்டை ஏன் ஏற்படுகிறது ?
நமது வாய்ப்பகுதியில் உள்ள மென் அன்னம், உள்நாக்கு ஆகிய இரண்டுமே நாம் உறங்கும் நேரத்தில் நெகிழ்ச்சி அடையும், அந்த நேரத்தில் நம்முடைய மூச்சுக்காற்றை உள்ளே போகும் பொழுது நமக்கு குறட்டை ஏற்படுகின்றது, ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்னைகள் இருந்தாலும், மூக்குப்பகுதி வளைந்து இருந்தாலும், தொண்டை பகுதியில் திசுக்கள் தாபிதம் அடைந்து இருந்தாலும் குறட்டை என்பது ஏற்படலாம். இதுபோன்ற குறட்டைகளை மருத்துவ முறை மூலம் தீர்த்துக்கொள்ள முடியும், அதே போல புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், மது பழக்கம் உள்ளவர்களுக்கு நிச்சயமாக குறட்டை வரும், அதே போல உடற்பருமனாக இருந்தாலும் குறட்டை என்பது வரும், இதனை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன.
குறட்டையை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
சித்த மருத்துவத்தில் இருக்கும் சவுரிபல தைலம் என்று சொல்வர். சவுரி பலத்தை நல்லெண்ணெயில் விட்டு நன்கு காய்ச்சி தயாரிக்கப்படும் தைலத்தை எண்ணெய் குளியல் போன்று பயன்படுத்த வேண்டும், அதே போல நசியம் என்பது நல்ல பலன் தரக்கூடியது ( மூக்கில் மூலிகை சாறுகளை விடுவது ), தும்பை பூவின் சாறை பிழிந்து ஒவ்வொரு மூக்கிலும் ஒரு சொட்டு விடலாம், இதேபோன்று மருத்துவ எண்ணெய்களையும் நசியம் செய்யலாம், எண்ணெய் குளியலும் குறட்டை விடுவதை தடுக்க நல்ல பலன் தரும், சுக்குதைலம், நொச்சி தைலம் போன்றவற்றை தலைக்கு தேய்க்கும்பொழுது தொண்டை பகுதியில் உள்ள தாபிதம் குறையலாம், கபம் சார்ந்த பிரச்னைகள் குறைந்து குறட்டை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது,
அதே போல மருந்துகள் என்று சொன்னால் தாபிதம் வராமல் தடுக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய சீந்தில் சூரணம், திரிபலா சூரணம், திரிகடுக சூரணம் இதனை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம், அதே போல உணவாக தூதுவளை ரசம், தூதுவளை சட்னி போன்றவற்றை எடுத்து கொள்ளலாம், கற்பூரவல்லியை சுரசம் செய்து சாப்பிடலாம், அதாவது கற்பூரவல்லியை இடித்து சாறு பிழிந்து சுண்டசெய்து சமஅளவு தேன் சேர்த்து அதனை எடுத்து வரலாம், உள்நாக்கு பகுதியிலும் அதனை தடவலாம், துளசி இலை சாறையும் குடித்து வந்தால் நல்ல பலன் தரும், உடல் எடையை குறைக்கும் வழிமுறைகளை செய்து திரிபலா சூரணத்தையும் எடுத்து கொண்டால் உடல் எடை குறையும், குறட்டையையும் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
குறட்டை வருவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன?
தொண்டை வறண்டு போகலாம், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம், தொண்டையில் புண் ஏற்படலாம், இதெல்லாம் குறட்டையினால் வரக்கூடிய பிரச்சனைகள் என்றுதான் சொல்ல வேண்டும், ஆரம்ப நிலையிலேயே இது போன்ற பிரச்சினைகள் வருவதை தீர்ப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தேவையில்லாத மருந்துகளை சாப்பிடுவதால் குறட்டை வரலாம், மன அழுத்தம் காரணமாக வரலாம், உடற்பருமனை குறைத்து, இயற்கை மருந்துகளை எடுத்து ஆரோக்கியமாக இருந்தோம் என்றால் குறட்டை விடுவதை தவிர்க்கலாம், குறட்டை பக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பிரச்சனை இல்லை, உடலுக்குள்ளும் பிரச்சனையை ஏற்படுத்தும், நீங்கள் குறட்டை விடுபவர்களாக இருந்தால் இந்த வழிமுறைகளையெல்லாம் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை இன்றே வாழ துவங்குங்கள்.