Aadi Amavasai Thaligai: ஆடி அமாவாசை பூஜைக்கு செய்யவேண்டிய தளிகை உணவு வகைகள் என்ன?
Aadi Amavasai 2023 Special Food: ஆடி அமாவாசை தினத்தில் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் வழிபாடுகள் அதிகம் உள்ளதாக இருக்கும். ஆடிப்பெருக்கு, ஆடி கிருத்திகை போலவே ஆடி அமாவாசை மிகவும் முக்கியத்துவமான நாள் ஆகும். அன்றைய தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம்(Tharpanam) அளிக்கும் நாள் ஆகும். நடப்பாண்டில் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வருகிறது. ஜூலை மாதம் 17-ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 16-ஆம் தேதியும் அமாவாசை வருகிறது. அன்றைய தினம் நமது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் அளிப்பது வழக்கமாக உள்ளது. ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எந்த அமாவாசையில் தர்ப்பணம் தருவது?
இந்த இரண்டு நாட்களில் எப்போது, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் அளிக்கலாம் என்று பக்தர்களுக்கு சந்தேகம் ஏற்படலாம். வழக்கமாக, இதுபோன்ற மாதங்களில் முதலில் வரும் அமாவாசையை காட்டிலும் 2-வது வரும் அமாவாசை தினத்தில்தான் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்று ஆன்மீக பெரியோர்களும், ஜோதிட நிபுணர்களும் கூறுகின்றனர்.
இதனால், வரும் ஆகஸ்ட் 16-ந் தேதி வரும் அமாவாசை தினத்திலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரைகளில், ஆற்றுப்பகுதிகளில், கோயில் குளங்களில் திதி, தர்ப்பணம் அளிப்பது சிறந்தது ஆகும். ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் அருகே உள்ள கடல் மற்றும் ஆற்றுப்பகுதியில் மக்கள் அலைகடலென திரண்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி அளிப்பதற்காக குவிவது வழக்கம் என்பது கருதப்படுகிறது.
வழக்கமாக, ஒரே மாதத்தில் இதுபோன்ற 2 அமாவாசை, 2 பௌர்ணமி வரும்போது சிலர் அந்த மாதங்களில் சுபகாரியங்களை தவிர்த்துவிடுவார்கள். பொதுவாக விஷ மாதத்தில் திருமணத்தை தவிர இதர சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம். ஆனாலும், தனிப்பட்ட ஜாதக பலன்கள், ஜோதிட பலன்கள் ஆகியவற்றை தக்க ஜோதிட நிபுணர்களிடம் ஆலோசித்து மேற்கொள்வது நல்லது ஆகும் என சொல்லப்படுகிறது
அமாவாசை சமையல் - விரத முறை
ஆடி அமாவாசையன்று முன்னோர்களை வழிபடுவதோடு, உணவு படைக்க வேண்டும். அதற்கு முன், யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம் அல்லது உணவு படைக்கும் வரை சாப்பிடாமல் இருந்து விளக்கேற்றி கற்பூர ஆராதனை செய்து வழிப்பட்டுவிட்டு சாப்பிடலாம் என நம்பப்படுகிறது
காகம் என்பது முன்னோர்களின் அம்சமாக கருதப்படுகிறது. எனவே, வீட்டில் சமைத்து உணவு படைப்பவர்கள், முதலில் காகத்துக்கு உணவு படைக்க வேண்டும். வெடித்த சோறு, காய்கறி, குழம்பு, நெய், சேர்த்து காகத்துக்கு வைக்க வேண்டும் என பின்பற்றப்படுகிறது
பாகற்காய், பிரண்டை, பலாக்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாழைக்காயையும் சேர்ப்பது அவசியம். புடலங்காய், அவரைக்காய், கொத்தவரைங்காய், சேனைக்கிழங்கு உள்ளிட்டவற்றை சேர்க்கலாம். துவரம் பருப்பிற்கு பதிலாக பாசிப் பருப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.கீரை, முள்ளங்கி, உருளை, பீன்ஸ், கத்திரிக்காய், முட்டைக்கோஸ், சுரைக்காய், முருங்கை, கோவக்காய் உள்ளிட்ட காய்கள் பயன்படுத்தக் கூடாது. அகத்திக் கீரை மட்டும் சேர்க்கலாம் என நம்பப்படுகிறது. அன்றைய தினத்தில் பயன்படுத்த வேண்டிய உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவைகளை தவிர்ப்பது நல்லது.
ஆடி செவ்வாய் விரதம்:
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை என்பது மிகமிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமைகளில் பெண்கள் அம்மனை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் பல.
பூஜை செய்வது எப்படி?
ஆடி செவ்வாய் கிழமைகளில் காலையிலே எழுந்து குளித்துவிட வேண்டும். பின்னர், பூஜையறையை நன்றாக நீரால் சுத்தம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். ஆடி செவ்வாய் தினத்தன்று வீட்டின் பூஜையறையில் 2 குத்து விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும்.
வாழை அல்லது வெற்றிலையில் அம்பிகை நாமத்தை சொல்லி குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த குங்குமத்தை 11 சுமங்கலி பெண்களுக்கு அளிக்க வேண்டும்.
ஆடி செவ்வாய் கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு விரதம் இருந்து வழிபடுதல், அம்மனுக்கு பால்பாயாசம் படைத்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.