Yes Bank lays off: அச்சச்சோ..! 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த எஸ் பேங்க் - மறுசீரமைப்பு நடவடிக்கை என தகவல்
Yes Bank lays off: மறுசீரமைப்பு நடவடிக்கையாக எஸ் பேங்க் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Yes Bank lays off: தங்களது ஊழியர்களில் 500 பேரை எஸ் பேங்க் நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணிநீக்கம் செய்த எஸ் பேங்க்:
தனியார் வங்கியான எஸ் பேங்க் மறுசீரமைப்பு நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பணிநீக்கங்கள் மொத்த விற்பனை, ரீடெயின் மற்றும் கிளை வங்கிப் பிரிவு வரை பல முனைகளில் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணிநீக்க நடவடிக்கைகள் மேலும் தொடரும் எனவும் பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, மூன்று மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய ஒரு செய்தித் தொடர்பாளர், பணியாளர்களை மேம்படுத்துவதன் மூலம் நிறுவனம் செயல்திறனுடன் செயல்படுவதை நிர்வாகம் எதிர்பார்க்கிறது. ஒரு பன்னாட்டு ஆலோசகரின் ஆலோசனையின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
எஸ் பேங்கின் விளக்கம்:
மேலும், "மெலிந்த, வேகமான, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட மற்றும் செயல்பாட்டுத் திறன் கொண்ட ஒரு சுறுசுறுப்பான, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் நிறுவனமாக மாறுவதற்கான எங்கள் முயற்சியில், நாங்கள் செயல்படும் விதம் மற்றும் எங்கள் பணியாளர்களை மேம்படுத்தும் விதத்தை அவ்வப்போது முழுமையாக மதிப்பாய்வு செய்கிறோம்," என்று எஸ் பேங்கின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எஸ் பேங்க் விவரம்:
மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய நாளின் முடிவில் எஸ் பேங்க் பங்கின் மதிப்பு ரூ.24.02க்கு சமமாக முடிந்தது. முந்தைய நாளின் முடிவில் அது ரூ.23.95 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வங்கியின் சந்தை மதிப்பு ரூ.75,268 கோடியாக உள்ளது. எஸ் பேங்க் டிஜிட்டல் பேங்கிங்கில் கவனத்தை செலுத்துவதன் மூலம், செலவைக் குறைக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. 2023 மற்றும் 2024 நிதியாண்டுகளுக்கு இடையில், இந்நிறுவனத்தின் ஊழியர்களின் செலவுகள் 12 சதவீதத்திற்கு மேல் அதிகரித்ததால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2023 நிதியாண்டின் இறுதியில் ரூ.3,363 கோடியிலிருந்த செலவுகள், 2024 நிதியாண்டின் இறுதியில் ரூ.3,774 கோடியாக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிர்வாக இயக்குநரான பிரசாந்த் குமார் 2020 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றபோதும், இதேபோன்ற பணிநீக்க நடவடிக்கையை எஸ் பேங்க் நிர்வாகம் மேற்கொண்டது. அந்த காலகட்டத்தில் சரிவை சந்தித்து வந்த எஸ் பேங்க், ரிசர்வ் வங்கி தலையிட்டு மேற்கொண்ட நடவடிக்கைகளால் மீண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.