4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக தோஷிபா நிறுவனம் அறிவித்துள்ளது. நிதி நெருக்கடியால் உலகின் முன்னணி நிறுவனங்கள் சிரமத்தை சந்தித்து வரும் சூழலில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 4000 பணியாளர்களை வேலையில் நீக்கம் செய்வதாக தோஷிபா நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தோஷிபா நிறுவனம்:
தோஷிபா நிறுவனம் தனது அலுவலக பணிகளை மத்திய டோக்கியோவிலிருந்து கவாசாகி நகருக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குள் 10% லாபம் எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையில் உலகின் முன்னணி நிறுவனங்களும் சிக்கியுள்ளன. இதனால், செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. 2024ஆம் ஆண்டில் பணிநீக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்கும் என்று நினைத்தால், ஆரம்பமான சில நாட்களிலேயே நிறுவனங்கள் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தொடங்கிவிட்டன. மேலும், வருங்காலத்திலும் இந்த பணிநீக்கங்கள் தொடரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெரு நிறுவனங்கள்:
இந்த நிலையில், ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை தோஷிபா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 4000 ஊழியர்களை வேலையில் நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம்தான், பங்கு சந்தையில் இருந்து தோஷிபா நிறுவனத்தின் பங்குகள் வாபஸ் (பங்கு சந்தையில் இருக்கும் பங்குகளை நிறுவனமே திரும்ப பெற்று கொள்வது) பெறப்பட்டன.
பல்வேறு சிக்கல்கள் காரணமாக நிலைகுலைந்திருந்த தோஷிபா நிறுவனத்தை தனியார் நிறுவனமான ஜப்பான் தொழில்துறை பங்குதாரர்கள் (JIP) 13 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினர். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் பங்கு சந்தையில் இருந்து திரும்ப பெறப்பட்டன.
தோஷிபா நிறுவனதத்தை சீரமைக்க அதன் புதிய உரிமையாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மொத்த பணியாளர்களில் 6 சதவிகிதம் பேரை பணியில் இருந்து நீக்க உள்ளது.
தொடரும் பணி நீக்கங்கள்:
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஜெராக்ஸ் நிறுவனம் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்யும் இந்த நிறுவனத்தில், 3 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது ஜெராக்ஸ். இந்த பணிநீக்கத்தைத் தொடர்ந்து, ஜெராக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 12 சதவீதம் சரிவை கண்டது.
மேலும், கூகுள் நிறுவனம் 30 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் கூட, பேடிஎம் நிறுவனம் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஊழியர்களின் செலவினத்தில் 10 முதல் 15 சதவீதம் சேமிக்க முடியம் என்பதால் பேடிஎம் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.