Mega job fair 2023: விக்கிரவாண்டி தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்
Mega job fair 2023: விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தனியார் பொறியியல் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி துவக்கி வைத்து, தேர்வுபெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "தமிழ்நாடு முதல்வர் அவர்கள், தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கித்தரும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் புதியதாக தொழிற்சாலைகள் துவங்கிடும் வகையில், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு வழிவகுத்தார். மேலும், தமிழ்நாட்டில் அடுத்த வருடம் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, தொழில் முதலீடுகளை ஈர்த்து, பல்வேறு வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன் வாயிலாக, தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும். இதன் மூலம், தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பதற்கு வழிவகை ஏற்படும். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 100 தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திட உத்தரவிட்டிருந்தார்கள்.
அதனடிப்படையில் இன்றைய தினம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, 03 சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக இன்றைய தினம் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களின் தனித்திறனுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் தனியார்துறை சார்பில் வழங்கப்படவுள்ளது. எனவே, படித்த இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பினை பெற்றிடும் வகையில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவியர்கள் ஒவ்வொரு முறையும் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று தங்கள் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பினை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இதுகுறித்த வேலைவாய்ப்பு முகாம் தகவல்களை மற்றவர்களுக்கும் தெரிவித்து, அவர்களும் வேலைவாய்ப்பு பெற்றிட உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.