கொரோனா பரவல் சூழல் : எதையும் எதிர்கொள்ளத் தயார் - முதல்வர் ரங்கசாமி
கொரோனா பரவல் குறித்து மத்திய அமைச்சர்கள் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
கொரோனா பரவல் குறித்து மத்திய அமைச்சர் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். புதுவையில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிடுகிடுவென உயர்ந்தது. இந்திய அளவில் இந்த தொற்று பரவல் கவனிக்கத்தக்கதாக இருந்தது. இதைத் தொடர்ந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது.
இந்தநிலையில் தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை மற்றும் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பொதுசுகாதார தயார் நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா தலைமை தாங்கினார். புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் சட்டசபை கேபினெட் அறையில் இருந்தபடி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, புதுவையில் கொரோனா தொற்று பரவல் நிலவரம், அதை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது ரங்கசாமி கூறியதாவது:-
புதுச்சேரியில் இதுவரை 21 லட்சத்து 48 ஆயிரத்து 805 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இப்போது 14 ஆயிரத்து 293 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 236 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இறப்பு 1.2 சதவிதமாக உள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 1,945 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும், 1,464 ஆக்சிஜன் படுக்கைகளும், 171 வென்டிலேட்டர் படுக்கைகளும் உள்ளன. இவற்றில் 1,730 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும், 1,301 ஆக்சிஜன் படுக்கைகளும், 125 வென்டிலேட்டர் படுக்கைகளும் காலியாக உள்ளன.
மாநிலத்தில் இதுவரை 88 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 60 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 51 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 728 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர். எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவில் உள்ளன என முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உள்பட சுகாதார அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்