Covaxin For Teens | 15 - 18 வயதினருக்கு கோவேக்சின் மட்டும்தான்.. திட்டவட்டமாக சொல்கிறது பாரத் பயோடெக்..
குழந்தைகளுக்கு அங்கீகரிக்கப்படாத தடுப்பூசிகள் அளிக்க வேண்டாம் என பாரத் பயோடெக் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், சுகாதாரப் பணியாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும், 15 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Covaxin வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தியது. புதிதாகத் தகுதி பெற்ற சுகாதாரக் குழுவிக்கள் குழந்தைகளுக்கு அனுமதிக்கப்படாத பிற தடுப்பூசிகளை செலுத்த வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
#covaxin #COVID19Vaccine #covaxinapproval #COVID19 #BharatBiotech #vaccination #healthcareworkers #covidwarriors #covaxinannouncement pic.twitter.com/sqPCLZZ4NG
— BharatBiotech (@BharatBiotech) January 7, 2022
"15-18 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கு மற்ற கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக பல அறிக்கைகள் எங்களுக்கு கிடைத்துள்ளன" என்று ஐதராபாத்தை மையமாக கொண்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது. "சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், 15 - 18 வயதுக்கு உட்பட்ட தனி நபர்களுக்கு கோவாக்சின் மட்டுமே வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்," என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
தெளிவுப்படுத்தும் விதமாக பாரத் பயோடெக் ஒரு அறிவிப்பும் வெளியிட்டுள்ளது, “கோவாக்சின் தடுப்பூசி எடுக்கும் குழந்தைகளுக்கு எந்த வலி நிவாரணிகளும் பரிந்துரைக்கப்படவில்லை. சில நோய்த் தடுப்பு மையங்கள் 3 பாராசிட்டமால் 500 மி.கி மாத்திரைகளை கோவாக்சினுடன் சேர்த்து குழந்தைகளுக்கு எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கின்றன என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி போட்டபிறகு, பாராசிட்டமால் அல்லது வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்படுவது இல்லை" என்று தெரிவித்துள்ளது.
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடமிருந்து (DCGI) நிறுவனம் ஒப்புதல் பெற்றவுடன், ஜனவரி 3 அன்று 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசியை இந்தியா தொடங்கியது. இதுவரை, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான பாதுகாப்பான தடுப்பூசியாக கோவாக்ஸினை மட்டுமே அரசு அங்கீகரித்துள்ளது.
இந்தியாவிலும் ஒமிக்ரான் தாக்கம் படிப்படியாக உயர்ந்து கொண்டிருப்பதால், குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ` ஜனவரி 3 ஆம் தேதி முதல் சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது' என்றார். மேலும், ஜனவரி 10ஆம் தேதி முதல் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய்கள் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து, 15 முதல் 18 வயதுக்குள் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான பதிவு தொடங்கிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
“அரசின் இந்த முடிவின் மூலம் சிறுவர், சிறுமிகளைப் பாதுகாக்க முடியும். இவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லும்போது தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதன்மூலம் அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கும் பரவும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நன்மையே அதிகம்” என்று மருத்துவர்கள் உறுதி அளித்தனர்.