கொரோனா தாக்கியவர்களை அச்சுறுத்தும் புதிய எலும்பு நோய் - ஏவிஎன் என்றால் என்ன?
கொரோனா காலத்தில் மற்றொரு அச்சுறுத்தும் எலும்பு நோய் ஒன்று அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று கடந்த 18 மாதங்களுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் பல நாடுகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தில் மக்களை வேறு சில நோய்களும் அதிகமாக தாக்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கருப்பு புஞ்சை நோய் பாதிப்பு கொரோனா நோயாளிகள் சிலரை பாதித்துள்ளது.
அதேபோல் கொரோனா பாதிப்பு காரணமாக வேறு சில நுரையிரல் பிரச்னைகளும் மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது புதிதாக மற்றொரு எலும்பு நோய் ஒன்று கொரோனா காலத்தில் அதிகமாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஏவாஸ்குலர் நெக்ரோசிஸ் என்ற எலும்பு நோய் தற்போது அதிகரித்துள்ளது.
ஏவாஸ்குலர் நெக்ரோசிஸ் என்றால் என்ன?
ஏவாஸ்குலர் நெக்ரோசிஸ்(ஏவிஎன்) நோயின் போது எலும்பின் திசுக்களுக்கு உரிய இரத்த ஓட்டம் இல்லாமல் இறந்து விடும் சூழல் உருவாகும். அதாவது முதலில் திசுவை லேசாக உடைத்து சிறிது சிறிதாக கொள்ளும். குறிப்பாக இடுப்பு பகுதியில் இந்த பிரச்னை மிகவும் ஆபத்தாக அமையும். இந்த நோயால் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.
ஏவிஎன் நோய்க்கும் கொரோனாவிற்கும் என்ன தொடர்பு?
கொரோனா நோய் தொற்று ஏற்படும் போது இரத்த நாளங்களில் அடைப்பு அல்லது அழுத்தம் அதிகமாகும் சூழல் உண்டாகும். இதனால் இரத்தம் அங்கு உறையும் நிலை ஏற்படும். இப்படி இரத்த கட்டு ஏற்படும் போது சரியான இரத்த ஓட்டம் இல்லாமல் நெக்ரோசிஸ் நோய் உண்டாகும். கொரோனா நோய் தொற்றின் போது அதிகளவில் ஸ்டிராய்டு மருந்துகள் நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. இந்த ஸ்டிராய்டு மருந்துகள் நெக்ரோசிஸ் வர முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக தான் உலகம் முழுவதும் தற்போது இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏவிஎன் நோய் ஏற்படும் மற்ற வழிகள்?
பொதுவாக அதிக புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஸ்டிராய்டு பயன்பாடு ஆகியவை காரணமாக ஏவிஎன் நோய் தாக்கும். எலும்பில் ஏற்படும் சில பிரச்னைகளாலும் இந்த ஏவிஎன் நோய் தாக்கும் நிலை உருவாகலாம். இவை தவிர புற்றுநோய் உள்ளவர்களுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம்.
ஏவிஎன் எந்த வயதினரை தாக்கும்? அதன் அறிகுறிகள் என்ன?
ஏவிஎன் நோய் குறிப்பாக 30-50 வயது மதிக்க தக்க நபர்களை அதிகம் தாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் எக்ஸ்ரே மூலம் கண்டறிய முடியாது. ஒருவருக்கு இடுப்பு பகுதியில் அதிக வலி ஏற்பட்டால் இந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதாவது படுக்கையில் படுத்து இருக்கும் போது இடுப்பு பகுதியில் அதிகமாக வலி ஏற்பட்டால் அப்போது இந்த நோய்க்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். இடுப்பு பகுதி தவிர தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் வலி ஏற்படும்.
கொரோனா நோய் தொற்றால் பல இணை நோய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாம் அனைவரும் முறையாக தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயம். அப்போது தான் இதுபோன்ற பெரிய பாதிப்புகளின் தப்பிக்க முடியும். ஏனென்றால் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு நோய் பாதிப்பு தீவிரமாக இருக்காது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க:கொரோனாவின் மாறுபாடான கப்பா வைரஸ் பாதிப்பினை ஏற்படுத்துமா? ஆய்வுகள் சொல்வதென்ன?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )