Fact Check : காங்கிரஸை புகழ்ந்தாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்? வைரலாகும் வீடியோ உண்மையானதா?
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் புகழ்ந்ததாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்வோம்.
இந்தியாவின் விடுதலை போராட்ட வரலாற்றில் காங்கிரஸ் கட்சியின் பங்கு குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் புகழ்ந்து பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த மே 20ஆம் தேதி, ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன், இப்படிப்பட்ட கருத்தை மோகன் பகவத் தெரிவித்ததாகக் கூறி அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தேர்தலுக்குப் பிறகு அரசாங்கம் மாறும் என்பதை உணர்ந்த பிறகு காங்கிரஸின் பங்களிப்பை பகவத் அங்கீகரித்ததாக சமூக ஊடக பயனர்கள் சிலர் கூறி வருகின்றனர்.
காங்கிரஸை பற்றி புகழ்ந்தாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர்? தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், மோகன் பகவத் பேசுவது பின்வருமாறு, "நம் நாட்டு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு குறைவு. யார் அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள் என்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியாது.
இந்த நாட்டு மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதனால்தான் நாடு முழுவதும் காங்கிரஸ் என்ற மாபெரும் இயக்கம் உருவானது. இன்று நம் வாழ்வில் தொடர்ந்து ஊக்கமளிக்கும் பல பெரிய மனிதர்கள், அந்த இயக்கத்தில் இருந்து வந்தவர்கள்.
மேலும் அந்த இயக்கம் சாமானிய மக்களுக்கு சுதந்திரத்தை அடைவதற்கான பாதையை அமைத்து தந்தது. அது நமது சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பை அளித்தது" என பேசியுள்ளார். இந்த வீடியோவை குஜராத் காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ஹிதேந்திர பிதாடியா பகிர்ந்துள்ளார்.
வீடியோவை பகிர்ந்ததோடு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார், "ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மோகன் பகவத் கூட காங்கிரஸின் பங்களிப்பை நினைவுகூரத் தொடங்கியுள்ளார். மோடி வெளியேற்றப்படுவார். இந்தியா கூட்டணியின் அரசு வருகிறது"
மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய சிங், இந்த வீடியோவை கடந்த 2024 ஆம் ஆண்டு, மே 21 ஆம் தேதி, பகிர்ந்துள்ளார். காங்கிரஸ் பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்த கருத்துகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கேட்க வேண்டும் என்றும் திக்விஜய சிங் தெரிவித்திருந்தார்.
அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை என்றாலும், தேர்தல் நடந்து வரும் சூழலில் பல பயனர்கள் அவரது பதிவை பகிர்ந்துள்ளனர்.
இருப்பினும், இந்த வீடியோ கடந்த 2018 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டவை என்பது தெரிய வந்தது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற மாநாட்டின் போது, இந்தியாவின் சுதந்திரத்தில் காங்கிரஸின் பங்கு பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதை கண்டறிந்தோம்.
உண்மையை கண்டுபிடித்தது எப்படி? வைரலாகும் வீடியோவில் இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் லோகோ இடம்பெற்றிருந்தது. இதை ஆதாரமாக வைத்து கொண்டு தேடினோம். அப்போது, கடந்த 2018 ஆம் ஆண்டு, செப்டம்பர் 18ஆம் தேதி, ஹிந்துஸ்தான் டைம்ஸின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட உண்மையான வீடியோவை கண்டறிந்தோம். வீடியோவின் மேல் இடது மூலையில் உரைக்குக் கீழே சம்பவம் நடந்தத தேதியையும் பார்க்கலாம்.
டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் மாநாட்டில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மோகன் பகவத் உரை நிகழ்த்தி, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் முக்கியப் பங்காற்றியதுடன், இந்தியாவிற்கு பல சிறந்த ஆளுமைகளை வழங்கியது குறித்தும் பேசினார். வீடியோவின் 18 வினாடியில் மோகன் பகவத், இதே கருத்தைச் சொல்வதைக் கேட்கலாம். அதே வீடியோ, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் YouTube சேனலிலும் பதிவேற்றப்பட்டது.
ஆர்எஸ்எஸ் தலைவர் தனது உரையின் போது, 1857 ஆம் ஆண்டு நடந்த புரட்சி மற்றும் நாட்டில் உருவான சுதந்திர இயக்கங்கள் பற்றியும் பேசினார். கதர் புரட்சி மற்றும் சுபாஷ் சந்திரபோஸின் ஆயுதப் போராட்டம் பற்றியும் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி குறித்து பேசினார்.
முடிவு என்ன? கடந்த 2018ஆம் ஆண்டு, அளித்த உரையை ஐந்தாவது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு ஆற்றியதாக உண்மைக்கு புறம்பான செய்தி பகிரப்பட்டு வருகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸின் பங்கை ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒப்புக்கொண்டதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்பது தெரிய வருகிறது.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக logicallyfacts என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுதியுள்ளது.