Youtuber Irfan: ”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்ஃபான் மீது மன்னிப்பு கேட்டுள்ளார்.
தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த விவகாரம் தொடர்பாக பிரபல யூட்யூபர் இர்ஃபான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரையிலான பல்வேறு உணவுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்துக்கே சென்று விமர்சனம் செய்து வீடியோக்களை தனது வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருபவர் இர்ஃபான். இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் பல்வேறு பிரபலங்களை நேர்காணலும் செய்து உள்ளார். இப்படிப்பட்ட பிரபல யூட்யூபராக திகழ்ந்த இர்ஃபான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இர்ஃபான் கடந்தாண்டு மே மாதம் ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். ஹசீஃபா தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனிடையே துபாய் சென்றுள்ள இர்ஃபான் அங்கு தனது மனைவியின் கருவில் இருக்கும் சுசு ஆணா? பெண்ணா?என்பதை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தன் நண்பர்களுடன் இணைந்து பாலினத்தை அறிவிப்பது பற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியும் நடத்தியுள்ளார்.
இந்த வீடியோவை கடந்த மே 19 ஆம் தேதி தனது யூட்யூப் சேனல் மட்டுமல்லாமல் சமூக வலைத்தள பக்கங்களிலும் பதிவிட்டார். இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டும், பகிர்ந்தும் உள்ளனர். இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. இந்தியாவில் பாலின பரிசோதனை செய்வதும், அதனை குழந்தை பேறுக்கு முன்னால் அறிவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இர்ஃபானின் செயலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்தது.
பணம் இருந்தால் என்னனாலும் பண்ணலாமா?, அரசின் சட்டம் எல்லாம் சாமானிய மக்களுக்கு தானா? என தாறுமாறாக விமர்சித்தனர். இதுதொடர்பாக நேற்று சுகாதாரத்துறை, இர்ஃபான் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தது. விஷயம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் இர்ஃபான் சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்கினார்.
இப்படியான நிலையில் தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்ஃபான் மீது மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.
அதேசமயம் மாநில சுகாதாரத்துறை சார்பில் இர்ஃபானுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில் அவர் வாட்ஸ் ஆப் மற்றும் தொலைபேசி மூலம் மருத்துவ விசாரணை குழுவினரிடம் மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.