Vijay: “இது விளையாட்டு இல்ல, காலம் என்னை அங்கு நிறுத்தும்” - 13 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் எண்ட்ரி பற்றி விஜய்!
Vijay: “அரசியல் ஒன்றும் விளையாட்டு இல்லை . நம்மை பாராட்டுகிறார்கள் என்பதற்காக எல்லாம் அரசியலுக்கு வந்துவிட முடியாது” என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
சரியான நேரத்தில் தான் அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் விஜய் (Vijay) 13 ஆண்டுகளுக்கு கூறியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பான தகவல்கள் சமீப காலங்களில் அதிகரித்து வந்த நிலையில், நேற்று பிப்ரவரி 2ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam)வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
“என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து என்னுடைய பெயர், புகழ் என எல்லாவற்றுக்கும் காரணமான தமிழக மக்களுக்கு என்னால் முடிந்த வரை இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே என்னுடைய நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்” என்று விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இனிமேல் விஜய்யை திரையில் பார்க்க முடியாதது தெரிந்து ரசிகர்கள் சோகத்தில் இருந்தாலும், அரசியலில் விஜய் எந்த மாதிரியான தலைவராக இருக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. இப்படியான நிலையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் அரசியலுக்கு வருவது குறித்து விஜய் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசியலுக்கு வருவது என்பது விஜய் மிக நீண்ட காலமாக மனதில் வைத்திருக்கும் விருப்பம் என்றும், அதற்கான சரியான நேரம் வரும் வரை அவர் தன்னை தயார்படுத்தி வந்திருக்கிறார் என்பதையும் இந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதை வைத்து தெரிந்துகொள்ள முடிகிறது.
இது ஒன்னும் விளையாட்டு இல்ல
“இப்போதைக்கு என்னுடைய விருப்பம் சினிமா தான். அதில் எந்த குழப்பமும் இல்லை. அடுத்து என்ன படம் நடிக்க வேண்டும் , எந்த மாதிரி நான் பயணிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய திட்டமாக இருக்கிறது. நான் ஒரு நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இவ்வளவு பெரிய ஸ்டேஜில் மக்கள் என்னைக் கொண்டு வந்து உட்கார வைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
காலம் தான் என்னை இப்போது இந்த இடத்தில் உட்கார வைத்திருக்கிறது. அதே மாதிரி காலம் என்னை அந்த இடத்தில் உட்கார வைக்கும். அதற்கான காலம், நேரம், இடம், சூழல் எல்லாம் அமைய வேண்டும் . இது வரும்போது நான் கண்டிப்பா தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
இப்போது எனக்கு ஆர்வம் இருக்கிறது ஆனால் அதற்கான நேரம் இது கிடையாது. அதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. எல்லாரும் சொல்கிறார்கள், பில்டப் கொடுத்து எழுதுகிறார்கள் என்பதற்காக எல்லாம் வந்துவிட முடியாது. இது ஒன்றும் விளையாட்டு இல்லை. சரியான காலம் வரும்வரை அதற்கான அடித்தளத்தை நான் உறுதியாக கட்டமைத்துக் கொண்டே வருவேன்.
ஒரு சாதாரண ரசிகர் மன்றமாக இருந்தது இன்று மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது. இன்னும் இந்த இயக்கத்தை நான் உறுதியாக கட்டமைப்பேன்“ என்று விஜய் இந்த நேர்காணலில் கூறியுள்ளார்.