Vikramul : விக்ரமுல்! : விக்ரமை கொண்டாடிய அமுல் நிறுவனம்.. தெறிக்கவிடும் கமல் ரசிகர்கள்..
அண்மையில் உலகெங்கும் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை அமுல் நிறுவனம் தனது கார்ட்டூன் பாணியில் கொண்டாடி இருக்கிறது.
அண்மையில் உலகெங்கும் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை அமுல் நிறுவனம் தனது கார்ட்டூன் பாணியில் கொண்டாடி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா, காயத்ரி, மைனா நந்தினி, டினா என பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இந்தப் படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.
ஆங்கிலத்தில் பன் ஆன் தி வார்ட் என்பார்களே அப்படித்தான் அமுல் ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு விளையாடி தனது பிராண்டையும் புரோமோட் செய்து கொண்டு, நாட்டில் நடக்கும் சுக, துக்க விஷயங்கள் பற்றியும் உணர்வுப்பூர்வமான கார்ட்டூன்களைப் பதிவிடும்.
அந்த வரிசையில் கடந்த 3ஆம் தேதி உலகெங்கும் வெளியான விக்ரம் படத்தைக் கொண்டாடி அமுல் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. அந்த கார்ட்டூனில் அமுல் பேபி போல் கமலை சித்தரித்து விக்ரமுல்! ( Vikram+Amul = Vikramul) என்று பொருள்படும் வகையில் எழுதப்பட்டுள்ளது. விக்ரம் படம் மாஸ் என்டெர்டெய்னர் என்று கொண்டாடப்படும் நிலையில் அதையும் குறிப்பிட்டு AMUL MASSKA ENTERTAINMENT என்று குறிப்பிட்டுள்ளது. MASSKA என்றால் இந்தியில் சீஸ் என்று அர்த்தம். கார்ட்டூன் படத்தில் சீஸ் ஸ்லைஸ்களும் உள்ளன.
ட்ரெண்டில் இருக்கும் விஷயங்களை எடுத்து அதை கார்ட்டூனாக்கி அன்றாடம் செய்தித் தாள்களிலும் தனது இணையதளத்திலும் கார்ட்டூனாக வெளியிட்டு ஆண்டாண்டு காலமாக தனது பிராண்டை புரோமோட் செய்து வருகிறது. விக்ரம் வெற்றியைக் கொண்டாடி தனது பிராண்டையும் புரோமோட் செய்துள்ளது.
#Amul Topical: Kamal Haasan excels in his comeback blockbuster! pic.twitter.com/AjEzll5nTk
— Amul.coop (@Amul_Coop) June 6, 2022
அமுல் வரலாறு இதுதான்:
அமுல் (Anand Milk Producers Union Iimited (AMUL)என்பது இந்திய மாநிலமான குஜராத்திலுள்ள ஆனந்த் எனும் ஊரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகும். இதனை நிறுவிய மும்மூர்த்திகள்: திரிபுவன்தாஸ் படேல், வர்கீஸ் குரியன் மற்றும் அரிசந்த் மேகா தலாயா ஆவர்.
இந்த நிறுவனம் 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது சுமார் 2.8 மில்லியன் பால் உற்பத்தியாளர்களை உள்ளடக்கிய ஜி.சி.எம்.எம்.எப். எனப்படும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் இயங்கி வருகிறது. அமுல் என்பதற்கு சமஸ்கிருத மொழியில் "விலை மதிப்பற்றது" என்பது பொருளாகும்
வணிக நடவடிக்கைகளாகிய பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்கிறது.
அமுலின் வெற்றியைத் தொடர்ந்து இதே மாதிரியைக் கொண்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஆவின் எனப்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அமுலை முன்மாதிரியாகக் கொண்டது ஆகும்.