Happy Birthday Vijayakanth: விஜயகாந்த் நடித்த இந்த படங்களை ஒருமுறையாவது பார்த்துவிடுங்கள்! சூப்பர் லிஸ்ட் இதோ
ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என தோன்றும் விஜயகாந்த் நடித்த அதிரடி ஆக்ஷன் மற்றும் உருகி உருகி காதலித்த படங்களின் லிஸ்ட்....
இன்று பிறந்த நாள் கொண்டாடும் விஜயகாந்திற்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் எப்பொழுதும் ரசிகர்கள் விரும்பும் படமாக இருக்கும். அதில் விஜயகாந்தின் நடிப்பில் ஒருமுறையாவது பார்த்திட வேண்டும் என தோன்றும் படங்களின் லிஸ்ட் இதோ....
சட்டம் ஒரு இருட்டறை
திரைத்துறைக்கு வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் விஜயகாந்திற்கு பிரமாண்ட வெற்றியை கொடுத்த ஒரு படம் தான் சட்டம் ஒரு இருட்டறை. 1981ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருப்பார். பெற்றோரை கொலை செய்தவர்களை பழிவாங்கும் கதையில் விஜயகாந்த் நடித்திருப்பார். பெரிய அளவில் ஹிட் அடித்த இந்த படம் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரிமேக் செய்யப்பட்டது.
வைதேகி காத்திருந்தாள்
ஆர். சுந்தரராஜன் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளிவந்த படம் வைதேகி காத்திருந்தாள். ஆக்ஷன் கதைகளில் அதகளப்படுத்தி வரும் விஜயகாந்தை உருகி உருகி காதலிக்க வைத்த திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தாள். கவுண்டமணியின் காமெடி காட்சிகளும், படத்தில் இடம்பெற்றிருந்த இளையராஜா இசையின் பாடல்களும் எவர்கிரீன் ஹிட் அடித்தவை. ஆக்ஷன் மட்டும் இல்லாமல் கிராமத்து காதலியை மறக்காமல் ஊருக்கே தண்ணீர் கொண்டு வந்து சேர்க்கும் ஒரு சராசரி மனிதனாக நடிப்பில் அசத்தி இருப்பார் விஜயகாந்த். பாடல் காட்சிகளிலும் காதலியின் பிரிவை நடிப்பில் உணர வைத்ததால் விஜயகாந்தின் ஆல் டைம் ஃபேவரட் படமாக வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் உள்ளது.
அம்மன் கோவில் கிழக்காலே
ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், ராதா, ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் அம்மன் கோவில் கிழக்காலே. 1986ம் ஆண்டு வெளிவந்த இந்த படம் திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து ஓடியது. கிராமத்து திருவிழாவில் பாட்டு பாடி கொண்டிருக்கும் விஜயகாந்த், கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றிருக்கும் மனைவியை நினைத்து உருகும் காட்சிகள் ரசிகர்களையும் உருக வைத்தது. படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும் இன்றும் எவர்கிரீன் பாடல்கள் தான். ரசிகர்கள் கொண்டாடிய அம்மன் கோவில் கிழக்காலே படம் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
சத்ரியன்
1990ம் ஆண்டு கே. சுபாஷ் இயக்கத்தில் மணி ரத்னம் தயாரித்திருந்த படம் சத்ரியன். நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், அரசியல்வாதிகளுக்கும் நடைபெறும் மோதலே சத்ரியன் படத்தின் கதை. பானுப்ரியா, ரேவதி என பலர் நடித்திருந்த சத்ரியன் படம் விஜயகாந்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக நீண்ட நாள் ஓடியது.
சின்ன கவுண்டர்
1991ம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த சின்ன கவுண்டர் படம் விஜயகாந்தின் ஹிட் படங்களில் ஒன்று. விஜயகாந்த் கம்பீரமான தோற்றத்தில் கிராமத்து தலைவராக நடித்திருந்த படம் சின்ன கவுண்டர். சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில் என பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடியதால் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
பெரியண்ணா
1999ம் ஆண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய்காந்த், சூர்யா, மீனா, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் பெரியண்ணா. சிறை கைதியாக இருந்து காதலியுடன் தப்பி ஓடும் சூர்யாவுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டரில் விஜயகாந்த் நடித்திருப்பார். பிளேஷ்பேக்கில், விஜயகாந்திற்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். விமர்சன ரீதியாகவும், வசூலிலும் பெரியண்ணா பெரிய அளவில் ஹிட் ஆனது.
ரமணா
2002ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படம் ரமணா. இதில் விஜயகாந்த், சிம்ரன், ரியாஸ், அஷிமா பல்லா என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். காலேஜ் புரொபெஸராக வரும் விஜயகாந்த் மாணவர்களை ஒன்றிணைத்து ஊழல் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதே ரமணா. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கொலை செய்த குற்றத்திற்காக விஜயகாந்திற்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும். கமர்ஷியல் மட்டும் இல்லாமல் சமூக அக்கறையாக ஊழலை எதிர்க்கும் விதமாக எடுக்கப்பட்ட ரமணா விஜயகாந்தின் ஹிட் படங்களில் ஒன்று. மருத்துவமனை காட்சியிலும், நாட்டின் புள்ளி விவரங்களை மூச்சு விடாமல் கூறுவதிலும், விஜயகாந்தின் நடிப்பு கொண்டாடப்பட்டது. விஜயகாந்தின் நடிப்பும், இளையராஜாவின் இசையும் ரமணா படத்தை 100 நாள் தாண்டி திரையரங்குகளில் ஓட வைத்தது.
கேப்டன் பிரபாகரன்
1991ம் ஆண்டு வெளியானது விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன். ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் 275 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. சந்தன மரங்களை கடத்தும் கொள்ளை கூட்ட தலைவனை தேடி செல்லும் காட்சிகளும், காட்டில் நடக்கும் சண்டைகளும் படத்தின் சுவாரசியத்தை பார்வையாளர்களுக்கு அதிகரிக்கும். இறுதியில் நீதிமன்றத்தில் வாதாடும் வசனங்கள் என கேப்டன் பிரபாகரனின் ஒவ்வொரு காட்சியிலும் அதிரடிகள் காட்டி இருப்பார் விஜயகாந்த். இந்த படத்தில் நடித்ததால், விஜயகாந்த் கேப்டன் என அவரது ரசிகர்களாலும், கட்சி தொண்டர்களாலும் அழைக்கப்படுகிறார்.
இதேபோன்று விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த வானத்தை போல, ஊமை விழிகள், செந்தூர பூவே, புலன் விசாரணை திரைப்படங்கள் 200 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடின. விஜயகாந்த் நடித்த சிவப்பு மல்லி, சொக்கத்தங்கம், சேதுபதி ஐபிஎஸ், பூந்தோட்ட காவல்காரன், உளவுத்துறை, மாநகர காவல், வல்லரசு, நரசிம்மா போன்றவையும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மாஸ் ஹிட் படங்கள்.