Merry Christmas: இந்தி படிக்குறதை வேண்டாம்னு சொல்லல. திணிக்கவேண்டாம்னுதான் சொல்றாங்க - விஜய் சேதுபதி
மெரி கிறிஸ்துமஸ் படத்தில் இந்தி பேசி நடித்த தனது அனுபவத்தைப் பற்றி பேசினார் நடிகர் விஜய் சேதுபதி
மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்
மெரி கிறிஸ்துமஸ்
ஸ்ரீராம் ராகவண் இயக்கத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் நடித்து உருவாகி இருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராதிகா ஆப்தே, ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் மும்பையில் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று சென்னையில் நடைபெற்றது . இந்த நிகழ்வில் கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதி மற்றும் படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் கலந்துகொண்டு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
என்னை கழட்டிவிட்டாங்கன்னு நினைச்சேன்
இந்த நிகழ்வில் பேசிய விஜய் சேதுபதி “மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது உண்மையாகவே என்னால் நம்ப முடியவில்லை. அன்று என்னுடையப் பிறந்தநாள் அன்று ஸ்ரீராமின் முதல் படமான ஏக் ஹசீனா தி படம் வெளியாகியிருந்தது. நான் மெல்பர்னுக்குச் சென்றிருந்தபோது அங்கு ஸ்ரீராம் ராகவன், நான் நடித்த 96 படத்தைப் பார்த்து என்னை அழைத்து பேசினார். மெரி கிறிஸ்துமஸ் படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னார். இதற்கு பிறகு நீண்ட நாட்களாக அவர் என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. என்னைத்தான் படத்தில் இருந்து கழட்டிவிட்டுவிட்டார்கள் என்று நான் நினைத்தேன் . இதை உறுதிப்படுத்துவதற்காக நான் என்னுடைய பிறந்தநாளன்று படத்திற்கான ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா? என்று ஃபோன் செய்து கேட்டேன்.
இதற்கு பிறகு ஒரு மாத காலம் ஸ்ரீராம் ராகவனின் அலுவலகத்திற்கு சென்று சினிமா மற்றும் பிற விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பேன். எதை பற்றியும் கவலையில்லாமல் அப்படி பேசிக் கொண்டிருந்தது முதல் நாள் செட்டில் நான் நடிப்பதற்கு அவ்வளவு எளிதாக இருந்தது. அவருடன் பேசியதை வைத்து நான் இந்த படத்தையும் அவரைப் பற்றியும் இன்னும் நன்றாக புரிந்துகொண்டேன்” என்று விஜய் சேதுபதி கூறினார்.
இந்தி பேசி 17 வருஷமாச்சு..
மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் இந்தி பிரதியில் விஜய் சேதுபதி சரளமாக இந்தி பேசியிருப்பதை குறித்து கேட்டபோது “துபாயில் நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது என் முதலாளி என்னிடம், ஹாத் மே கித்னா பைசா ஹே கினோ ‘(கையில எவ்ளோ காசு இருக்குனு எண்ணிப்பார்) என்று சொன்னார். அதுதான் நான் முதல் முதலாக கேட்ட இந்தி. அதற்கு பிறகு நான் இந்தி பேசி 17 வருஷம் ஆச்சு. ஃபார்ஸியில் நடிக்கும்போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது . மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில நடிக்கும்போது பழகிடுச்சு” என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
மேலும் ஹிந்தி குறித்த கேள்விக்கு, யாரும் ஹிந்தி படிக்க வேண்டாம் என சொல்லவில்லை. திணிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள் எனவும் பதிலளித்தார்