H Vinoth: சினிமாவிற்கு வந்தது எப்படி? மனம் திறந்த விஜய்யின் கடைசி பட இயக்குனர் எச்.வினோத்! !
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் எச்.வினோத் தான் சினிமாவிற்கு வந்தது எப்படி? என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் மிகவும் முக்கியமான இயக்குனர் எச்.வினோத். சதுரங்க வேட்டை படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் தீரன், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் வலிமை தவிர மற்ற படங்கள் அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்கள் ஆகும்.
சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள தவெக தலைவரும், பிரபல நடிகருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை இயக்கியுள்ள எச்.வினோத் திரையுலகில் வந்தது எப்படி? என்பதை கீழே விரிவாக காணலாம்.
சினிமாவிற்கு வந்தது எப்படி?
ஒரு முறை நேர்காணல் ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது, சின்னச் சின்ன நிறுவனங்களில் ஒரு 6, 7 நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது, ஆட்டோமெஷன் நிறுவனம் ஒன்றில் இருந்து டெர்மினேஷன் ஆனேன். இப்படியே சென்று கொண்டிருந்தபோது அம்பத்தூரில் தங்கியிருந்தபோது ஏதோ ஒரு ஃப்ளாஷ் சினிமாவில் முயற்சிக்கலாம் என்று தோன்றியது.
இன்று வரை யோசிப்பேன் எப்படி நமக்கு தாேன்றியது என்று? நாளிதழில் இயக்குனர்கள் முகவரி எல்லாம் வரும். அதை எடுத்துக்கொண்டு சில இயக்குனர்களை எல்லாம் தேடிச் செல்வது. இந்த மாதிரி எல்லாம் செய்து கொண்டிருந்தேன். அப்புறம் அது ஏதும் ஒர்க் ஆகவில்லை.
தேடிச் செல்வேன்:
யாரெல்லாம் சினிமாவில் இருக்கிறார்கள் என்று தெரிகிறதோ அவர்களின் முகவரிக்கு எல்லாம் தேடிச் செல்வேன். ஆர்ட் அசிஸ்டன்கிட்ட வேலை செய்வது. அப்போது பார்த்திபன் சார் ஆபீஸ் தொடர்பு கிடைத்தது. அவரிடம் ஒன்றரை வருடம் வேலை செய்தேன். எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.
ஏனென்றால், எனக்கு எதுவுமே தெரியாது. ஆசையை மட்டும் எடுத்துக்கொண்டு சினிமாவிற்குள் வந்துவிட முடியாது. எனக்கு எதுவுமே சுத்தமா தெரியாது. அந்த நடைமுறையே எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
எச்.வினோத் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக தற்போது உள்ளார்.
வேலூரைப் பூர்வீகமாக கொண்ட இவர் பார்த்திபனின் பச்சைக் குதிரை மற்றும் விஜய் மில்டனின் கோலி சோடா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். மறைந்த நடிகர் மனோபாலாவின் தயாரிப்பில் இவர் சதுரங்க வேட்டை படத்தை கடந்த 2014ம் ஆண்டு இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
முன்னணி இயக்குனர்:
தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களை தனது அபாரமான திரைக்கதையால் வெற்றிப்படங்களாக மாற்றினார். இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தை தமிழில் இயக்கி அஜித்தின் நேர்கொண்ட பார்வையாக்கினார். பின்னர், வலிமை நீண்ட இடைவெளியால் சரியாக ஓடாத சூழலில் துணிவு எச்.வினோத் - அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
தற்போது விஜய்யின் கடைசி படத்தை இயக்கியுள்ள எச்.வினோத் அதை விஜய் ரசிகர்களுக்கு ஏற்றவாறும், அவரது அரசியல் பயணத்திற்கு ஏற்ற வகையிலும், கமர்ஷியல் படமாகவும் இயக்கியுள்ளார். இந்த படம் பகவந்த் கேசரியின் ரீ மேக் என்றும் சொல்லப்படுகிறது.





















