Ghilli Movie: விமல் முதல் பிளாக் பாண்டி வரை.. வளரும் நடிகர்களுக்கு அடித்தளமாக அமைந்த கில்லி...
20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான விஜயின் 'கில்லி' படத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களாக தோன்றி இன்று பிரபலமான நடிகர்களாக வலம் வரும் ஒரு சில நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
சோஷியல் மீடியாவில் எங்கு திரும்பினாலும் ஒரே 'கில்லி' ஸ்டோரியாகத்தான் உள்ளது. 2004ம் ஆண்டு தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் 'கில்லி'. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து இரு தினங்களுக்கு முன்னர் உலகளவில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. வழக்கமாக விஜய் படங்களின் ரிலீஸ் சமயத்தில் இருக்கும் அதிரிபுதிரியான மாஸ் வரவேற்பு ரீ ரிலீஸ் படத்திற்கும் கிடைத்துள்ளது. வசூலிலும் வேட்டையாடி வருகிறது.
நடிகர் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்த 'கில்லி' திரைப்படம் பல வளரும் நடிகர்களும் ஒரு அடித்தளமாக அமைந்தது. அப்படி கில்லி படத்தில் ஒரு துணை நடிகராக ஸ்க்ரீனில் ஓரிரு காட்சிகளில் தலைகாட்டிய சில நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாமா?
விமல் :
பசங்க படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் விமல் ஒரு ஹீரோவாக நடித்த படம் 'களவாணி'. முதல் படத்திலேயே ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்ட நடிகர் விமல் சினிமாவில் முதன் முதலில் ஸ்க்ரீனில் தோன்றியது விஜய்யின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராகத்தான். ஒரு சில காட்சிகளில் நண்பர்களில் ஒருவராக வந்து போன விமல் அந்த அளவுக்கு கவனிக்கப்பட்டாரா என்பது சந்தேகம்தான். ஆனால் அதுவே அவரின் எதிர்கால திரை பயணத்திற்கு ஒரு துவக்கமாக அமைந்து இருந்தது.
அப்புக்குட்டி:
1998ம் ஆண்டு வெளியான 'மறுமலர்ச்சி' திரைப்படம் மூலம் திரையில் நடிக்க வாய்ப்பு பெற்று அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி இன்று நாயகனாக வளர்ந்துள்ள ஒரு நடிகர் அப்புகுட்டி.
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நகைச்சுவை நடிகனாக பார்வையாளர்களின் மனதில் பதிந்தார். அப்படி அவரின் ஆரம்பகால கட்டத்தில் சிறு கதாபாத்திரமாக 'கில்லி' படத்தில் தோன்றி இருப்பார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் ஹோமம் செய்யும் காட்சியில் உதவியாளராக அப்புக்குட்டி தோன்றியிருப்பார்.
பிளாக் பாண்டி :
விஜய் டிவியின் 'கனா காணும் காலங்கள்' தொடர் மூலம் அறிமுகமானவர் பிளாக் பாண்டி. 'அங்காடி தெரு' திரைப்படத்தில் ஹீரோவின் நண்பனாக படம் முழுக்க ட்ராவல் செய்த பிளாக் பாண்டி ரசிகர்களின் கவனம் பெற்றார். அதை தொடர்ந்து பல படங்களில் சைடு கேரக்டரில் நடித்து வருகிறார். கில்லி படத்தில் கொய்யாப்பழம் விற்கும் ஒரு நபராக ஒரு காட்சியில் தோன்றி இருந்தார் பிளாக் பாண்டி. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'கில்லி' படத்தில் யாருக்குமே அடையாளம் தெரியாத நடிகர்களாக வந்துபோன சில சைட் ஆர்ட்டிஸ்ட் இன்று தனி நடிகர்களாக கவனம் ஈர்த்து அவரவரின் பயணத்தில் சாதித்து வருகிறார்கள்.