Vidya Balan: சினிமாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வித்யா பாலன் ஏமாற்றினாரா? பாலிவுட்டில் பரபரப்பு!
Vidya Balan: கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த வித்யா பாலன், இயக்குநர் மணிரத்னத்தின் குரு, பா உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டின் பிரபல நடிகைகளுள் ஒருவராக வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர்
நடிகை வித்யா பாலன் (Vidya Balan) பெயரில் போலிக்கணக்கு தொடங்கப்பட்டு பண மோசடி நடைபெற்ற சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரன் பட நடிகை
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தழுவி எடுக்கப்பட்ட ‘த டர்ட்டி பிச்சர்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்து, தேசிய விருது வென்று நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை வித்யா பாலன். கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த வித்யா பாலன், இயக்குநர் மணிரத்னத்தின் ‘குரு’, இயக்குநர் பால்கியின் ‘பா’ உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டின் பிரபல நடிகைகளுள் ஒருவராக வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர்.
நன்கு தமிழ் பேசக்கூடிய நடிகையான வித்யா பாலன், தமிழ் சினிமாவில் ‘ரன்’ திரைப்படத்திலேயே அறிமுகமாக இருந்து, முதற்கட்ட படப்பிடிப்புக்குப் பிறகு, பின் பல்வேறு காரணங்களால் விலக்கப்பட்டு, அதன் பின் பாலிவுட் சென்று கொடிகட்டிப் பறந்தவர்.
அஜித் ஜோடி
தமிழ் சினிமாவில் இறுதியாக நடிகர் அஜித் குமார் ஜோடியாக ‘நேர்க்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்த வித்யா பாலன், தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்து கொண்டு 2012ஆம் ஆண்டு செட்டில் ஆனார்.
திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்து ஹீரோயின் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வித்யா பாலன் நடிப்பில் இந்த ஆண்டு தோ அவுர் தோ ப்யார் எனும் திரைப்படம் வெளியாக உள்ளது.
பணமோசடி
இந்நிலையில், வித்யா பாலன் பெயரில் போலி சமூக வலைதளக் கணக்குகள் தொடங்கப்பட்டு பண மோசடி நடைபெற்ற சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வித்யா பாலன் பெயரில் போலி மின்னஞ்சல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம், சினிமா துறையைச் சேர்ந்த நபர்களை அணுகி, சினிமாவில் வாய்ப்புகள் வழங்குவதாகக் கூறி மோசடி நபர் பணம் பறித்துள்ளார்.
வித்யா பாலனுக்கு நெருங்கிய வட்டாரத்தினரிடம் இது போன்று மோசடியில் ஈடுபட அடையாளம் தெரியாத நபர் முயன்றுள்ள நிலையில், இதுகுறித்து தெரிய வந்த வித்யா, தற்போது மும்பை, கார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவரது புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், அடையாளம் தெரியாத மோசடி நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Saranya Ponvannan: இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தும் ரொம்ப ஃபீல் பண்றேன் - சரண்யா பொன்வண்ணன் வருத்தம்!