Vaathi 100 Crores: 100 கோடி க்ளப்பில் இணைந்த வாத்தி... ஹாட்ரிக் ஹிட் கொடுத்த தனுஷ்... உற்சாகத்தில் ரசிகர்கள்!
படம் வெளியாகி 15 நாள்களைக் கடந்துள்ள நிலையில், அசுரன், திருச்சிற்றம்பலம் படங்களுக்குப் பிறகு 100 கோடி வசூலை ஈட்டிய தனுஷ் படமாக வாத்தி உருவெடுத்துள்ளது.
நடிகர் தனுஷின் வாத்தி படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
வாத்தி:
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், இளவரசு, ஆடுகளம் நரேன் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியானா படம் ‘வாத்தி’. கடந்த பிப்.17ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசான வாத்தி படம் கல்வியின் முக்கியத்துவம், வணிகமயமாக்கப்பட்ட கல்வி ஆகியவற்றைப் பற்றி பேசும் படமாக அமைந்து கவனமீர்த்தது.
இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சோடைபோகாமல், தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நல்ல வசுலைக் குவித்து வருகிறது. தனுஷ் இந்தப் படத்தில் முதன்முறையாக ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், முந்தைய படங்களான திருச்சிறம்பலம் , நானே வருவேன் படங்களில் பெற்ற வெற்றி இந்தப் படத்திலும் தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
100 கோடி வசூல்:
இந்நிலையில், தொடக்கம் முதலே வாத்தி படம் நிதானமாக வசூலித்து ஒரு வாரத்தில் 75.99 கோடி வசூலை ஈட்டியதாகத் தகவல் வெளியானது. சுமார் 30 கோடி செலவில் எடுக்கப்பட்ட வாத்தி படம் குறிப்பாக தெலுங்கில் நல்ல வசூலை ஈட்டி வந்த நிலையில், தற்போது இந்தப் படம் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை வாத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டெர்டெய்ன்மெண்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
🙏🙏🙏 pic.twitter.com/Ps8QK9lWOI
— Dhanush (@dhanushkraja) March 4, 2023
படம் வெளியாகி 15 நாள்களைக் கடந்துள்ள நிலையில், ராஞ்சனா (தமிழில் அம்பிகாபதி), அசுரன், திருச்சிற்றம்பலம் படங்களுக்குப் பிறகு 100 கோடி வசூலை ஈட்டிய தனுஷ் படமாக வாத்தி உருவெடுத்துள்ளது. மேலும் தமிழை விட வாத்தி படத்தின் தெலுங்கு பதிப்பான சார் படம் அதிக வசூலை ஈட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தனுஷ் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வாத்தி படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள நடிகை சம்யுக்தா எனக்கு அன்பும் ஆதரவும் தந்த ரசிகர்களுக்கு நன்றி எனத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.