TVK Party: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெற்றி நிச்சயமா? குவியும் மக்கள்! முடங்கி போன செயலி!
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கான உறுப்பினர் செயலியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தி முதல் உறுப்பினராக தன்னை அக்கட்சியில் இணைந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் செயலி அறிமுகமான சில மணி நேரத்திலேயே முடங்கி போனது ஒட்டு மொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிரவைத்துள்ளது.
தமிழ் சினிமாவும் அரசியலும்
பொதுவாக தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாட்டின் அரசியலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. சொல்லப்போனால் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இதற்கு முன் இருந்தவர்களில் ஒரு சிலரை தவிர்த்து மற்ற எல்லோரும் சினிமாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவே இருந்துள்ளனர். அதேசமயம் சினிமாவில் நடித்து மக்களின் அன்பைப் பெற்று அரசியலுக்குள் நுழைந்து சாதித்து விடலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சிலர் அரசியல் என்னும் கடலில் வந்த வேகத்தில் காணாமல் போகிறார்கள். சிலர் நீச்சல் அடிக்க முயற்சிக்கிறார்கள். சிலர் கடைசிவரையும் இறங்கவே யோசிக்கிறார்கள். இப்படியான நிலையில் இந்த அரசியல் கடலில் புதிதாக களமிறங்கி இருப்பவர்தான் நடிகர் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம்
இவர் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அதிரடியாக தனது அரசியல் வருகையை அறிவித்தார். விஜய் நீண்ட காலமாக அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு எழுந்து வந்த நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக 2026 தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்ற ஒற்றை அறிக்கையை வெளியிட்டு அரசியல் பிரவேசத்தை தொடங்கினார்.
விஜய்யின் இந்த அரசியல் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் நிச்சயமாக ஆட்சி அமைக்க மாட்டார் என்ற கருத்து பெரும்பாலானவர்களிடம் நிலவிவரும் நிலையில் கணிசமான வாக்குகளை பெற்று ஏற்கனவே களத்தில் இருக்கும் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என கணிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் அரசியல் நடவடிக்கை
அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறுவது தொடங்கி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு அட்வைஸ் செய்வது வரை தெளிவாக ஒவ்வொரு அடியையும் விஜய் நகர்த்தி வருகிறார். சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த சிறுமி கொலைக்கு எதிராகவும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இந்தநிலையில் தான் விஜய்யின் வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியானது.
மற்ற கட்சிகள் பெயர் அளவுக்கு ஏதேனும் ஒரு குழு அமைக்கும் போது அதில் பெண்களுக்கு இடம் அளிப்பார்கள். ஆனால் விஜய் அறிவித்த இந்த உறுப்பினர் சேர்க்கைக்கான குழுவில் முதன்மை பதவிகளில் பெண்களே உள்ளனர். இது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தொடர்ந்து நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கான உறுப்பினர் செயலியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தி முதல் உறுப்பினராக தன்னை அக்கட்சியில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம் என சினம் கொண்ட சிங்கமாக சீறிய ரசிகர்களும் இளைஞர் பட்டாளமும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக சேர்வதில் அதிக ஆர்வம் காட்டினார்.
செயலிழந்த செயலி
கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்ப்பது தான் இலக்கு என்ன தெரிவிக்கப்பட்ட நிலையில் மளமளவென ரசிகர்களும் விஜய்யின் ஆதரவாளர்களும், மாற்று அரசியலை விரும்புபவர்களும் அவரது கட்சியில் இணைய தொடங்கினர். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக பொறுப்பாளர்களை நியமிப்பது தொடர்பான பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் விஜயின் இந்த உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி தொடங்கிய சில மணி நேரத்திலேயே செயலிழந்தது.
சர்வர் முடங்கியதால் பலரும் உறுப்பினராக இணைய முடியாமல் சமூக வலைத்தளங்களில் பொங்கி எழுந்தனர். அதே சமயம் உறுப்பினர் சேர்க்கையில் விஜய்க்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் திராவிட கட்சிகளால் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக கூறி பாஜக தங்கள் பலத்தை காட்ட முயற்சிக்கிறது. அதே சமயம் நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சியினரும் எப்படியாவது ஆட்சியில் அமரலாம் என்று கனவுடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியான நிலையில் விஜய்யின் இந்த அரசியல் வருகை பலருக்கும் மாற்ற அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 30 லட்சம் உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சர்வரை சரி செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில் அது சரியாகும் பட்சத்தில் மேலும் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரை விஜயின் அரசியல் நகர்வு எப்படி இருக்கும் என்பதை பார்க்க காத்திருக்க முடியாது. அவர் இப்பவே அடித்து ஆள ஆரம்பித்து விட்டார் என விஜய் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். அவரது அரசியலுக்கு கிடைக்கும் இந்த முக்கியத்துவம் மாற்று அரசியலை நோக்கி மக்கள் நகர தொடங்கியுள்ளனரா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.