New Movies: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை.. இன்று தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்ட தெரிஞ்சிக்கோங்க!
ஜூலை 21ஆம் தேதியான இன்று தியேட்டர்களில் 6 தமிழ் திரைப்படங்கள் உள்பட சில முக்கியமான ஹாலிவுட் படங்களும் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்ட்டைப் பார்க்கலாம்!
கொலை
பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கொலை படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இன்பினிட்டி மற்றும் லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாக்கப்பட்டுள்ள ‘கொலை’ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
அநீதி
இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள ‘அநீதி’ படத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் வசந்தபாலனே இப்படத்தைத் தயாரிக்க, இயக்குநர் ஷங்கர் தனது எஸ்.பிக்சர்ஸின் கீழ் வெளியிடுகிறார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், ‘எளிய மனிதர்களுக்கு இழைக்கப்படும் அநீதி’ குறித்து இப்படம் விளக்குகிறது.
சத்திய சோதனை
இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி அமரன், ஸ்வயம் சித்தா, ரேஸ்மா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கே.ஜி.மோகன், லட்சுமி, ஹரிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘சத்திய சோதனை'. ரகுராம் இசையமைத்துள்ள இந்தப் படம் ஒரு கொலையையும், அதன்பின்னால் நடைபெறும் போலீஸ் விசாரணையையும் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. காமெடியாகவும் அதே நேரத்தில் சமூகத்தின் உண்மை தன்மையையும் இப்படம் விளக்குகிறது.
இராக்கதன்
தினேஷ் கலைசெல்வன் இயக்கத்தில் வம்சி கிருஷ்ணா, ரியாஸ் கான், சாம்ஸ், சஞ்சனா சிங், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘இராக்கதன்’. மாடலிங் துறையின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் வகையில் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஏ.பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். இதுவும் ஒரு க்ரைம் த்ரில்லர் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.
எக்கோ
அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், பூஜா ஜாவேரி, காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படம் ‘எக்கோ’. நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
வசந்த மாளிகை
1972ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வசந்த மாளிகை’. இந்தப் படத்தில் வாணி ஸ்ரீ, நாகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கிய இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார். பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.அந்தக் காலக்கட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டு 3ஆவது முறையாக ரிலீசாகி உள்ளது.
இந்தப் படங்களை தவிர்த்து ஹாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகியுள்ள கிறிஸ்டோபர் நோலனின் ஓபன்ஹைமர், இயக்குநர் கிரெட்டா கர்விக் கைவண்ணத்தில் உருவாகியுள்ள பார்பி, லின் சென் சோயோ இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள ‘ஸ்நேக் கேவ்’ ஆகிய படங்களும் ரிலீசாகியுள்ளன.