GOAT: கோட் VFX பணியில் அவெஞ்சர்ஸ் டீம்! விறுவிறுப்பாக நடக்கும் இறுதிக்கட்ட பணிகள்!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். தனக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். கோட் படத்தை முன்னணி நிறுவனமான ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட்டின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
தி கோட்:
விஜய்யின் 68வது படமாக தயாரித்துள்ள 'கோட்' ('தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்') படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஷ்யா, தாய்லாந்து, இலங்கை, துனிசியா, தில்லி, ஹைதராபாத், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் கோட் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றது.
கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல் அமீர், மீனாக்ஷி சௌத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், விடிவி கணேஷ், யுகேந்திரன் வாசுதேவன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், பார்வதி நாயர், அபியுக்தா மணிகண்டன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். முன்னணி நடிகர் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விறுவிறுப்பாக நடக்கும் இறுதிக்கட்ட பணி:
மிகுந்த பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் விஜய் நடித்துள்ளார். இதற்காக அமெரிக்கா சென்ற அவர், அதி நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனது உடல் அமைப்பு, தோற்றம், அசைவுகள் உள்ளிட்டவற்றை துல்லியமாக பதிவு செய்தார். 'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு வி எஃப் எக்ஸ் செய்த லோலா நிறுவனம் 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளில் பங்காற்றி இருக்கின்றனர்.
கோட் சித்தார்தா நுனி ஒளிப்பதிவு செய்ய ராஜீவன் கலை இயக்கத்தை கவனிக்க, வெங்கட் ராஜன் படத்தொகுப்புக்கு செய்துள்ளார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் வடிவமைத்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு, அவர் மேலும் 2 படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று அறிவித்தார். அதில் ஒரு படம் கோட் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.