பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பின்னணி பாடகி ஸ்வாகதாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு அவர் பாலியல் குற்றம்சாட்டியிருந்த இசையமைப்பாளரை அடையாளம் காட்டும் விதமாக அமைந்துள்ளது

பின்னணி பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல் மற்றும் பணம் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
ஸ்வாகதா பாலியல் குற்றச்சாட்டு
ஸ்வாகதா கடந்த ஏப்ரல் மாதம் அளித்த நேர்காணலில், தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து விரிவாக பேசியிருந்தார். சென்னையில் உள்ள இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், அந்த நபர் தன்னை மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இதே நபரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அப்போது இசையமைப்பாளரின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை.
யார் அந்த இசையமைப்பாளர் ?
இந்த நிலையில், ஸ்வாகதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள புதிய பதிவு பேசுபொருளாகியுள்ளது. அதில், பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் தற்போது கூலிங் கிளாஸ் அணிந்து, தனது சமூக பிம்பத்தை கட்டமைத்து, நேர்காணல்கள் கொடுத்து வருகிறார் என அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், அந்த நபர் ஒரு பக்தி திரைப்படத்துக்கு இசையமைத்து வருவதாகவும், பெண்களால் மேடையில் வரவேற்கப்பட்டு அவருக்கு கேக் ஊட்டப்படுவதாகவும் ஸ்வாகதா குறிப்பிட்டுள்ளார். “சினிமா யாருடைய பக்கம் நிற்கிறது என்பதுதான் இது” என்ற வகையில் தனது பதிவில் அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
குறிப்பாக, பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள PR மற்றும் சமூக பிம்பம் தொடர்பான கருத்துகள், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். முன்பு அளித்த பேட்டியில் PR குறித்து பேசிய கருத்துகளுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் விவாதம் உருவாகியுள்ளது. சாம் சி.எஸ். சமீபத்தில் தான் தனது பாடல்களுக்கு பி.ஆர் செய்து ப்ரோமோட் செய்து வருவதாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், ஸ்வாகதாவின் தற்போதைய பதிவு சாம் சி.எஸ்ஸை மறைமுகமாக அடையாளப்படுத்துகிறதா என்ற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது. எனினும், ஸ்வாகதாவின் இந்த பதிவில் சாம் சி.எஸ். என்ற பெயர் நேரடியாக இடம்பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
முன்னதாக பெயரை வெளியிடாமல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த ஸ்வாகதா, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது புதிய பதிவு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் அடுத்ததாக வெளியிடப்போகும் தகவல்கள் என்ன என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















