(Source: Poll of Polls)
Vennila Kabadi Kuzhu: சாமானிய மக்களையும் கவர்ந்த வெண்ணிலா கபடி குழு.. இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவு!
இயக்குநராக சுசீந்திரன் அறிமுகமான வெண்ணிலா கபடி குழு படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் கடந்துள்ளது.
விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமான வெண்ணிலா கபடிக் குழு படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
வெண்ணிலா கபடி குழு
சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் வெண்ணிலா கபடி குழு. விஷ்ணு விஷால் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சூரி, விஜய் சேதுபதி, அப்புக்குட்டி, சரண்யா மோகன் உள்பட பலர் நடித்திருந்தனர். வி.செல்வகணேஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவான ஸ்போர்ட்ஸ் டிராமா படம் தான் வெண்ணிலா கபடி குழு.
கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டைக் காட்டிலும் நம் மக்களுக்கு நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு விளையாட்டு கபடி. நமது ஊர்களில். திருவிழாக்களில் கபடி போட்டி எப்போதும் இருந்திருக்கிறது. டீக்கடை வைத்திருப்பவர்கள். கட்டிட வேலைகளுக்கு செல்பவர்கள், மாமியாரிடம் எதுக்கும் ஆகாதவன் என்று வசவு கேட்பவர்கள் தான் இந்த விளையாட்டை விளையாடினார்கள்.
அப்படியானவர்கள் தான் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் கதாநாயகர்களும். தங்களது ஊரில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாத இந்த சாமானியர்களுக்கு எதிர்பாராத விதமாக மாநில அளவில் போட்டியிட்டு தங்களது திறமைகளை காட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு ஒரு பயிற்சியாளரும் கிடைக்கிறார். இந்த சாமானியர்கள் தங்கள் மீதும் தங்களது கபடி விளையாட்டின் மீது இருந்த பற்றால் நம்பிக்கையை வென்று எடுப்பது தான் இந்தப் படத்தின் கதை. அப்படியான ஒரு சாமானிய மக்களில் ஒருவனான மாரிமுத்துவாக விஷ்ணு விஷால் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
ஒரு கிராமத்து பின்னணியில் அதில் இருக்கும் சாதிய பாகுபாடுகளை மிக நுட்பான காட்சிகளின் வழியாக வெண்ணிலா கபடி குழு வெற்றிபெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் வருகைக்கு முன்பாக தமிழ் சினிமாவில் தலித் சினிமா என்று சொல்லதக்க படங்களில் முக்கிமான ஒன்று சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு. இதில் உள்ள கதாபாத்திரங்கள் சாதிய கட்டமைப்புகளுகளை தங்களது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்பவர்களாகவே சித்தரிக்கப்பட்டார்கள்.
அவர்களின் படிப்பு , பிற வாய்ப்புகள் அவர்களின் பொருளாதார நிலை எல்லாமே எதார்த்தமாக அமைந்திருந்தன. அதனால் தான் இறுதியில் அவர்களின் வெற்றி நம்மில் நம் ஊரில் ஒருவர் வெற்றிபெற்றார் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை போல் இருந்தது. விஷ்ணு விஷால் மட்டும் இல்லை. இன்னும் நிறை நடிகர்களுக்கு இந்தப் படம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இன்று நடிப்பில் புது புது பரிமாணங்களை காட்டும் நடிகர் சூரி பரோட்டா சூரியாக பிரபலமானது இந்தப் படத்தில் தான். நடிகர் அப்புகுட்டிக்கும் இப்படத்தில் நிறைய பாராட்டுக்கள் சேர்ந்தன.
தமிழ் சினிமாவில் எத்தனை ஸ்போஸ்ட்ஸ் டிராமா படங்களைப் பற்றிய பேச்சு வந்தாலும் வெண்ணிலா கபடி குழு படத்தை தவிர்க்க முடியாது.