Siddique Death: சித்திக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சூர்யா.. விஜய் ஏன் சொல்லவில்லை..? இணையத்தில் புகைச்சல்..!
இயக்குநர் சித்திக்கின் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்த நிலையில், நடிகர் விஜய் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இயக்குநர் சித்திக் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்த நிலையில், நடிகர் விஜய் இரங்கல் தெரிவிக்காதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சித்திக் மறைவு:
இயக்குநர் சித்திக்குக்கு நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்னை வந்த சூழலில் மாரடைப்பும் ஏற்பட்டது. அதனையடுத்து அவர் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் இரங்கல் தெரிவித்திருந்தார்.
சூர்யா இரங்கல்
நடிகர் சூர்யா ப்ரெண்ட்ஸ் படத்தை குறிப்பிட்டு, 'ப்ரெண்ட்ஸ்' எனக்கு பல்வேறு வழிகளில் முக்கியமான படம். சிறிய காட்சியில் நன்றாக நடித்தாலும் உடனே பாராட்டி ஊக்கமளிக்கும் பண்பு கொண்டவர் சித்திக்.
படப்பிடிப்பின்போதும், எடிட் செய்யும் போதும் எனது நடிப்பு குறித்த தனது எண்ணங்களை மிகுந்த அன்புடன் பகிர்ந்துகொள்வார். ப்ரெண்ட்ஸ்' படம் எடுக்கும் சமயத்தில் சீனியர் மற்றும் புகழ்பெற்ற இயக்குநராக இருந்த சித்திக் அனைவரையும் சமமாக நடத்துவார். நடிகனாக நான் உருவான ஆரம்பக் காலக்கட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. மிஸ் யூ சார்” என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தார்.
ரசிகர்கள் கேள்வி
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் இரங்கல் செய்தியை பார்த்த ரசிகர்கள், இயக்குநர் சித்திக்கின் இயக்கத்தில் ப்ரெண்ட்ஸ், காவலன் ஆகிய ஹிட் திரைப்படங்களில் நடித்த விஜய் ஏன் சித்திக்கிற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் ப்ரெண்ட்ஸ் ஒரு முக்கியமான திரைப்படம். விஜய், சூர்யா மற்றும் வடிவேலுவுக்கு இந்தத் திரைப்படம் நல்ல பெயர் பெற்று தந்தது. தனக்கு ஒரு நல்ல படத்தை கொடுத்த இயக்குநரை மறக்காமல் சூர்யா இரங்கல் தெரிவித்திருக்கும் நிலையில், விஜய் பழசை மறந்து விட்டாரா? என ரசிகர்கள் இணையத்தில் காட்டமாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
மற்றொருபுறம் நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக சித்திக்கின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கலாம் என்றும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
கதை ஆசிரியராக அறிமுகமான சித்திக்
மலையாளத் திரையுலகில் பிரபலமான இயக்குநர் சித்திக். பாப்பன் ப்ரியபேட்டா பாப்பன் என்ற படத்தின் மூலம் இவர் கதையாசிரியராக அறிமுகமானார். அதனையடுத்து நாடோடிக்கட்டு என்ற படத்திலும் கதையாசிரியாக அறிமுகமானார்.
ஆரம்பத்தில் இவர் எழுதியக் கதைகள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதனையடுத்து 1989ஆம் ஆண்டு வெளியான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இயக்குநர் அவதாரம் எடுத்த சித்திக்
கதையாசிரியராக தனக்கான தனி இடத்தை பிடித்ததைப் போலவே இயக்குநராகவும் தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதனையடுத்து மலையாளத் திரையுலகில் அனைவராலும் விரும்பப்படும் இயக்குநராக மாறினார்.
தொடர்ந்து படங்களை இயக்கிய அவர் 1999ஆம் ஆண்டு ப்ரெண்ட்ஸ் படத்தை இயக்கினார்.மலையாள ப்ரெண்ட்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். விஜய் , சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோரை வைத்து அதே பெயரில் தமிழிலும் ப்ரெண்ட்ஸ் படத்தை இயக்கினார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. விஜய் மற்றும் சூர்யாவின் கரியரில் முக்கிய படமாக அது அமைந்திருக்கிறது.
நடிகர்கள் விஜய், சூர்யாவுக்கு மட்டும் அல்ல, நடிகர் வடிவேலுவின் கரியரிலும் ப்ரெண்ட்ஸ் படம் முக்கியமானது. அவரது சிறந்த பத்து காமெடிகளை எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக முதல் மூன்று இடஙக்ளுக்குள் ப்ரெண்ட்ஸ் காமெடி இருக்கும். அவர் கடைசியாக மலையாளத்தில் பிக் பிரதர் என்ற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கியது குறிப்பிடத்தக்கது.