Vettaiyan: சும்மா அதிருதுல்ல! ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் - தியேட்டரில் திருவிழா கூட்டம்!
ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன் இணைந்து நடித்துள்ள வேட்டையன் படம் உலகெங்கிலும் திரையரங்கில் இன்று ரிலீசானது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும், இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும் உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் ஆயுத பூஜை கொண்டாட்டமாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
வேட்டையன் ரிலீஸ்:
இதன்படி, உலகெங்கும் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் இன்று வெளியானது. பல திரையரங்கில் காலை முதலே சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டது. என்கவுன்டர் பற்றி அலசும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்கள் இருவர் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருப்பதால் இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் திரையரங்கில் ஆர்வத்துடன் முதல் நாள் காட்சியில் கொண்டாடி வருகின்றனர். வேட்டையன் கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பல திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன்:
இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் ஆகிய இருவருடன் இணைந்து பகத் ஃபாசில், ராணா, கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் பெண் கதாபாத்திரங்களையே மையப்படுத்தி நகர்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டரில் திருவிழா:
தொடர் சறுக்கல்களைச் சந்தித்துள்ள லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர். லால் சலாம், இந்தியன் 2 என அவர்களது தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த சில படங்கள் பெரியளவு லாபத்தை தராத நிலையில், வேட்டையன் படத்தையே லைகா பெரியளவு நம்பியுள்ளனர். இதுபோன்ற பல சூழல்களுக்கு மத்தியில் ரஜினிகாந்த் – அமிதாப்பச்சன் நடித்த வேட்டையன் படம் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி பெங்களூர், ஹைதரபாத், மும்பை, கொச்சி, திருவனந்தபுரம் என இந்தியாவின் பல நகரங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த படத்தை காண ரஜினி ரசிகர்கள் குவிந்து வருகினனறனர்.